ஏர் கண்டிஷனர்...
துணி துவைப்பதற்கு, பாத்திரம் கழுவுவதற்கு, மாவு அரைப்பதற்கு, காய்கறி நறுக்குவதற்கு, நறுக்கிய காய்கறியை பாதுகாப்பாக வைப்பதற்கு, சமைப்பதற்கு, எல்லா வேலைகளும் ஓய, கொஞ்சம் குளுமையாக ஓய்வெடுப்பதற்கு, பொழுது போக்குவதற்கு என வீடு மற்றும் அலுவலகங்களில் அன்றாட வேலை செய்வதற்காக பல எந்திரங்கள் வந்துவிட்டன. நகம் வெட்ட, காது குடைய, பல்லு விளக்க, முதுகு சொறியக் கூட ஒரு சிறிய எந்திரம் இருக்க இவையெல்லாம் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். இவையெல்லாம் ஒட்டு மொத்தமாக தங்கள் இயக்கத்தை நிறுத்திக்கொண்டால் என்னவாகும். அட ஏன்!.. வீட்டில் சட்னி அரைக்கும் மிக்ஸி ஒருநாள் ஓய்ந்தால் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள். அதுபோல் நகரத்தின் கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் AC என்ற ஏர் கண்டிஷனர்கள் ஒவ்வொன்றும் பழுதானால் என்ன நிகழும் என்பதே கற்பனையான இந்த திரைப்படம்.
ஆப்பிரிக்காவின் மத்தியில் இருக்கும் அங்கோலா நாட்டின் தலைநகர் லுவாண்டாவின் கட்டிடங்களில் பொருத்தப்பட்ட ஏர் கண்டிஷனர்கள் ஒவ்வொன்றும் மர்மமான முறையில் தாமாகவே கீழே விழத் தொடங்குகின்றன. அவைகள் ஒவ்வொன்றும் தற்கொலை செய்வது போல் இருக்கிறது. ஏர் கண்டிஷனர் இல்லாமல் வெக்கையாக இருக்கும் பெரும் முதலாளி ஒருவர் தனது காவலாளியான "மாடசிடோ" என்பவரை அனுப்பி புதிய ஏர் கண்டிஷனர் ஒன்றை வாங்கிவரச் சொல்கிறார். அதுபோல் வீட்டுவேலை செய்யும் வேலைக்கார பெண் "ஜெசின்ஹா" என்பவளும் ஏர் கண்டிஷனர் வாங்க புறப்படுகிறாள். இவர்கள் இருவரும் லுவாண்டா நகரத்தை சுற்றிவர என்ன ஆனது என்பதை வேடிக்கையாக சொல்லியிருக்கிறார்கள்.
அங்கோலா நாடு 1975 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. அதற்கு பின் உள்நாட்டு கலவரங்கள் நிகழ இந்த திரைப்படத்தின் கதை 1980 களில் நிகழ்வதாக அமைக்கப் பட்டிருக்கிறது. அங்கோலா நாட்டின் புகைப்பட கலைஞர் "கஃபுக்ஸி (Cafuxi)" என்பவரின் நகர்புற புகைப்பட காட்சிகள் மற்றும் வாணொலி அறிவிப்புடன் இந்த திரைப்படம் தொடங்குகிறது. நகரத்திலிருக்கும் உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் குடிசை பகுதிகள் இவற்றின் மூலம் நகரத்தின் இருவேறு வாழ்க்கை முறையை அறிய முடிகிறது. காவலாளியும் வேலைக்கார பெண்ணும் நகரத்தை சுற்றிவர உள்நாட்டு கலவரத்தால் பாதிப்படைந்த மக்கள் தங்கள் நகரத்தை எவ்வாறு கட்டியமைத்தனர் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. இடிபாடுகள் நிறைந்த சில கட்டிடங்கள், ஏழை பணக்காரன் என்ற இருவேறு நிலையிலிருக்கும் மக்கள் அதற்கு சாட்சியாக இருக்கின்றன. கதைக்கு தொடர்பு இல்லையென்றாலும் இத்தகைய காட்சியமைப்புகள் அழுத்தத்தை தருகின்றன. அது "10 Days Before Wedding" என்ற ஏமன் நாட்டு திரைப்படத்தில் வருவதைப் போன்று இருக்கிறது.
காவலாளி மாடசிடோ நகரம் முழுவதும் தெருத்தெருவாக அலைந்து நல்லதொரு ஏர் கண்டிஷனர் பெறும் தேடுதலில் இருக்கிறார். எலெக்ட்ரிக் கடை வைத்திருக்கும் விசித்திரமான ஒருவர் உட்பட பல நபர்களை அவர் சந்திக்கிறார். தேடுதல் இந்த திரைப்படத்தில் முக்கிய பங்குவகிக்க உள்நாட்டு பாணி அமைப்பின் இசையமைப்பு அத்தேடுதலுடன் பயணிக்கிறது. ஜாஸ் இசையாகட்டும், சமூக விமர்சனம் நிறைந்த ராப் இசையாகட்டும், நகரத்தின் குழப்பமான இசையாகட்டும், திரைப்படத்தோடு அது ஒன்றச் செய்கிறது. ஒரு நகரம் எப்படி கூச்சலிடும்?.. நகரத்தின் ஒலி அமைப்பும் (Sound of city ) பொருத்தமாக இருக்கிறது. திரைத்துறை சார்பில்லாத இயல்பான முகங்கள் கதைகளை எப்போதும் தூக்கிச் சுமப்பார்கள். அதை காவலாளி மாடசிடோவாக நடித்த "ஜோஸ் கிடெகுலோ" மற்றும் வேலைக்கார பெண்ணாக நடித்த "ஃபிலோமினா மானுவல்" இருவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். காவலாளி மாடசிடோ நீண்ட நாட்கள் நினைவிலிருப்பார்.
- Air Conditioner
- Original title - Ar condicionado
- Directed by - Fradique
- Screenplay - Fradique, Ery Claver
- Cinematography - Ery Claver
- Music - Aline Frazão
- Country - Angola
- Language - Portuguese
- Year - 2020
இயற்கை சீற்றம், பேரிடர்கள், போர்கள், பொருளாதார வீழ்ச்சிகள், அரசியல் குழப்பங்கள் என உலகில் எங்கு எது நிகழ்ந்தாலும் பணக்காரர்களை விட ஏழைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வெங்காய விலையேற்றத்திற்கான காரணம் கேட்டால் நாங்கள் வெங்காயம் சாப்பிடமாட்டோம் என பதிலளிக்கும் பொருளாதார அமைச்சரைக் கொண்ட நாடும் இந்த உலகத்தில் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஏர் கண்டிஷனர்கள் தாமாக விழ அதன் புழுக்கத்தால் எளியவர்களே பாதிப்படைகின்றனர் என்பதை இயக்குனர் மறைமுகமாக சொல்லியிருக்கிறார். ஏர் கண்டிஷனர்கள் விழுவது நாட்டின் அரசியல் நிலைமை என்றும், அல்லது நகரத்தின் நிலைமை என்றும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. "அப்படியே பழங்கள் பழுத்தவுடன் கிளைகளிலிருந்து விழுந்துவிடும்" என திரைப்படத்தில் வரும் பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கும் "மினோ" என்பவன் சொல்வதைப் போல உலகின் நிலையாமை இதுதான் என்றும் அதனை புரிந்துகொள்ள முடிகிறது. உலகின் 23 வது பெரிய நாடு அங்கோலா. வைரம் கிடைக்கும் நாடு. அந்நாட்டின் 1961 முதல் 1974 வரையிலான காலகட்டத்தை வைத்து இயக்குனர் ஃப்ராடிக் "Independência"
என்ற ஆவணப்படத்தை தயாரித்திருந்தார். அதில் அங்கோலா நாட்டை "வருத்தப்படும் மக்களின் நிலம் இது" என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த திரைப்படம் அத்தகைய வருத்தப்படும் மக்களின் வாழ்க்கையை காட்டுகிறது.
துளிகள்...
✏️... அங்கோலா நாடு 2002 ஆம் ஆண்டு வரை உள்நாட்டு கலவரங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
✏️... ஆப்பிரிக்காவின் இரண்டாவது எண்ணெய் ஏற்றுமதி நாடு அங்கோலா. இப்போது புரிகிறதா அங்கு நிலவும் ஸ்திரமற்ற அரசியல் நிலை.
✏️... அடிமை வர்த்தகம் அமோகமாக இருந்த காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகள் பலர் அங்கோலாவிலிருந்து பிரேசில் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
✏️... 10 Days Before Wedding திருமணத்தை வைத்து எடுக்கப்பட்ட அழகிய திரைப்படம். அதனை பற்றி தெரிந்துகொள்ள