இருமன விழா.

த்து பொருத்தம் பார்த்து, இருமனதிடம் சம்மத..ம் வாங்கி, நல்லநாள் குறித்து, பத்திரிக்கை அடித்து, ஊர் உறவிற்கு சொல்லி, விழா நடைபெறும் இடத்தை தேர்ந்தெடுத்து, சடங்கிற்கு உரிய பொருட்களை வாங்கி, பந்தல் முதல் பந்தி வரை ஏற்பாடு செய்து, மிக முக்கியமாக பேனர் வைத்து இன்னும் நிறைய இருக்கிறது அனைத்தையும் சொல்லவே மூச்சிறைக்க, ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பது என்பது பெரும்பாடான செயல்தான். அதனால்தான் வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார் என சொல்லியிருக்கிறார்கள் போலும். இது ஒருபுறமிருக்க திருமணம் என்பது ஒருவரது வாழ்க்கையில் நிகழும் முக்கிய நிகழ்வு. அது கொண்டாடப்பட வேண்டியது. ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு பிரிவிற்கும் தகுந்தாற்போல திருமண சடங்குகளும் சம்பிரதாயங்களும் இருக்க, இல்லறத்தில் இணைந்த ஒவ்வொருக்கும் தங்களின் திருமணமும் அதற்கு முந்தைய பரபரப்பான நாட்களும் நிச்சையம் நினைவிலிருக்கும். அப்படி ஒரு ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய பரபரப்பான பத்து நாட்களை ஒரு நாட்டின் அசாதாரண வாழ்க்கை சூழலுடன் சித்தரிக்கும் திரைப்படம்தான் 10 Days Before The Wedding



வருடம் 2015 ஏமன் நாட்டை சேர்ந்த மமூன் மற்றும் ராஷா என்ற ஜோடி திருமணம் செய்துகொள்ள நிச்சையிக்கப்படுகின்றனர். ஆனால் அந்த வருடம் அந்நாட்டில் நிலவிய போரினால் அவர்களது திருமணம் தடைபடுகிறது. இந்நிலையில் சில வருடங்கள் கழிய 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவர்கள் விட்டுப்போன தங்களது திருமணத்தை நடத்த முடிவு செய்கின்றனர். இந்த முறை அவர்களது திருமணத்திற்கு போருக்கு பிந்தைய ஏமன் நாட்டின் வாழ்க்கைமுறையும் பொருளாதாரமும் தடையாக நிற்கிறது. மமூன் தனது வேலையை இழக்கிறான். விவாகரத்தான தனது சகோதரிக்காக தங்கியிருக்கும் வீட்டையும் விட்டுக்கொடுக்கிறான். திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் மமூன் மற்றும் ராஷா இருவரும் இணைந்து திருமணத்திற்கான அலங்கார பொருட்களைத் தேர்வு செய்யத் தொடங்குகின்றனர். அவர்கள் வசிப்பதற்கு ஒரு வீட்டையும் திருமணம் நடைபெற இடத்தையும் தேடுகின்றனர். இதற்கிடையில் ராஷாவின் வீட்டு உரிமையாளரான சலீம் என்பவன் அவளை திருமணம் செய்துகொள்ள ராஷாவின் குடும்பத்தை அச்சுருத்துகிறான். மேலும் இதன் தொடர்ச்சியாக இவர்களின் திருமண சூழல் பாதிக்கப்பட ஆயுதமேந்திய சில போராளிகளுடன் மோதலும் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் மமூனும் ராஷாவும் மனமுடைந்து பிரிந்து செல்ல முடிவெடுக்கின்றனர். அவர்கள் பிரித்து சென்றார்களா? அல்லது தடைகளை உடைத்து திருமணம் செய்து கொண்டார்களா? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.


ஒரு அழகான திருமண நிகழ்வைப்போல சந்தோஷம் நிறைந்த கொண்டாட்டங்களோடு இந்த திரைப்படம் தொடங்குகிறது. பிறகு போராட்டம், வலி, காதல், கண்ணீர் மற்றும் தியாகம் இவற்றோடு கொஞ்சம் நகைச்சுவை கலந்து உள்நாட்டு போருக்கு பிந்தைய ஏமன் நாட்டின் தெருக்களை அது சுற்றிக்காட்டுகிறது. அந்த தெருக்களில் இருக்கும் வீடுகளுக்குள் நுழைந்து அங்கு நிலவும் அடையாளம், கலாச்சாரம், சடங்குகள் இவற்றையும் இந்த திரைப்படம் உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது. போரினால் பாதிக்கப்பட்டு எஞ்சிய மிச்சங்களுடன், மின்சாரம், தொலைபேசி என அடிப்படை தொழில்நுட்ப வசதியில்லாத ஏமன் நாட்டில் இந்த திரைப்படம் வெகு இயல்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. நடிப்பு, ஒளிப்பதிவு, குறிப்பிட்டு சொல்லக்கூடிய இசை என ஒரு திரைப்படத்தின் பலம் சார்ந்தவைகள் இதிலும் பலமாக இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட அவலங்ளை சித்தரிக்கும் பல திரைப்படங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு திருமண நிகழ்விற்கு முந்தைய பரபரப்பான பத்துநாட்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் நம்மையும் அந்த பரபரப்பிற்குள் இழுத்துச் செல்வதைப்போல எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கொஞ்சம் புதுமையாக இருக்கிறது. தவறாமல் பாருங்கள்.

Trailer


10 Days Before The Wedding
Written & Directed by - Amr Gamal
Screen Play - Mazen Refaat
Music - Salem Fadaq
Cinematography - Aimen Almekhlafi
Country - Yemen
Language - Arabic
Year - 2018.