ஜீஜா யானின் - சாக்லெட்
பல ஆண்டுகளாக, சர்வதேச அளவில் தற்காப்புக் கலைத் திரைப்படங்கள் என்றாலே புரூஸ் லீ, ஜாக்கி சான், ஜெட் லீ போன்ற ஹாங்காங் நட்சத்திரங்களே முதலில் நமது நினைவுக்கு வருவார்கள். ஹாங்காங் மற்றும் அமெரிக்கா கலவையில் உருவான அத்தகைய தற்காப்புக் கலைத் திரைப்படங்களைப் போலவே, தாய்லாந்தும் தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியது. அதற்கு அடிப்படையாக இருந்தவர் டோனி ஜா (Tony Jaa). ஆனால், தாய்லாந்தின் தற்காப்புக் கலைத் திரைப்பட உலகம் டோனி ஜாவுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. இயக்குநர் மற்றும் சண்டைக் காட்சிகளின் வடிவமைப்பாளருமான பிரச்சியா பிங்கேவ் (Prachya Pinkaew), பன்னா ரிட்டிக்ராய் (Panna Rittikrai) ஆகியோர், உண்மையாகவே அந்தச் சண்டைகளைச் செய்யக்கூடிய கலைஞர்களை மையமாகக் கொண்டு தாய் அதிரடித் திரைப்படங்களின் புதிய அலையை உருவாக்கினர். குறிப்பாக, முவாய் தாய் (Muay Thai) என்ற தற்காப்புக் கலையை மையமாகக் கொண்டு, அதிக வலிமையும் கடுமையும் நிறைந்த சண்டை முறையை திரையில் காட்டினர். டோனி ஜாவைப் போல பல தாய்லாந்து கலைஞர்களும் அவர்களால் வெளிச்சத்திற்கு வந்தனர். அவர்களில் ஒருவர்தான் "ஜீஜா யானின் (JeeJa Yanin)". அவரது திரைப்படமான Chocolate பற்றிதான் பார்க்கப் போகிறோம்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சென் என்பவள் தனது தாயுடன் வசித்துவருகிறாள். சென் மற்றவர்களுடன் பழகுவதில் சிரமம் இருந்தாலும், அவருடைய கவனிப்பு, நினைவாற்றல் மற்றும் எதிர்வினைத் திறன் தனித்துவமாக இருக்கின்றன.
வீட்டுக்கு அருகிலுள்ள முவாய் தாய் பயிற்சிக்கூடத்தில் வீரர்கள் பயிற்சி செய்வதைப் பார்த்தும், தொலைக்காட்சியில் தற்காப்புக் கலைத் திரைப்படங்களைக் கவனித்தும் சென் பல சண்டை நுட்பங்களைத் தானாகவே கற்றுக்கொள்கிறார் (தாய்லாந்தின் ஏகலைவன் மன்னிக்கவும் ஏகலைவி). அவளால் பார்க்கும் அசைவுகளைத் துல்லியமாகப் பின்பற்றுவதுடன், மிக வேகமாக எதிர்வினையாற்றவும் முடிகிறது. இதனால், சாதாரணமாகத் தோன்றும் இந்த இளம்பெண்ணுக்குள் ஒரு வலிமையான சண்டை வீராங்கனை மறைந்திருப்பது வெளிப்படுகிறது.
சென்னின் தாயான ஜின் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். அவருக்குத் தேவையான சிகிச்சை மற்றும் கீமோதெரபிக்குப் பணம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில், ஜின் வீட்டில் இருக்கும் பழைய கணக்குப் புத்தகத்தில் பலர் கடன் பட்டிருப்பதை நண்பன் மூம் (Moom) கண்டுபிடிக்கிறான்.
இருவரும் அந்தப் பணத்தை வசூலித்து ஜின்னின் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடிவு செய்கிறார்கள். ஆனால், கடன் பட்டவர்கள் பணத்தைக் கொடுக்க மறுக்கிறார்கள். சிலர் குற்றச் செயல் செய்யும் கும்பல்களுடன் தொடர்புடையவர்களாகவும் இருக்கிறார்கள். சென் பணத்தைத் திரும்பப் பெற முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் சண்டையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகிறது. தன் தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவர் பல்வேறு எதிரிகளைச் சந்திக்கிறார். இதில் அவளது தந்தையையும் சந்திக்க நேரிடுகிறது. சென் எதிரிகளை எப்படி சமாளித்தாள்?. தன் தாயை காப்பாற்றினாளா? அவளது தந்தையின் கதை என்ன? (Flash Back) என்பதுதான் விறுவிறுப்பான சாக்லெட் திரைப்படத்தின் மீதிக்கதை.
சென்னாக நடித்த ஜீஜா யானின் அறிமுகத் திரைப்படம் இது. இவர் சிறுவயதிலிருந்தே Taekwondo பயிற்சி பெற்றவர். சர்வதேச நிலையில் பிளாக் பெல்ட் பெற்றவர்; முவாய் தாய் உள்ளிட்ட சண்டைக் கலைகளையும் பயின்றுள்ளார். சண்டைக் காட்சிகளில் உடல் நெகிழ்வுத்தன்மை, வேகம், நேரடி ஸ்டண்ட் திறமை ஆகியவற்றால் தனித்துவம் பெற்றவர். அவர் காலால் உதைக்கும் நுட்பங்கள், தாவுதல், வேகமான எதிர்த்தாக்குதல்கள் மற்றும் பல எதிரிகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. படத்தின் பல சண்டைக் காட்சிகள் உண்மையான உடல் உழைப்பையும், ஆபத்தான வகையையும் கொண்டவை. சில காட்சிகளில் நடிகர்களும் ஸ்டண்ட் கலைஞர்களும் காயமடையும் அளவுக்கு கடினமான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் திரைப்படங்களைப் போல சில காட்சிகளில் தக்காளி சட்னியும் பறக்கின்றன. ஆனால் அவை உறுத்தாமல் ஆட்டிசம், தாய் பாசம், குடும்பம், பழிவாங்கள் என கதை நகர்வது அழகாக இருக்கிறது.
Chocolate
(Zen, Warrior Within)
Directed by - Prachya Pinkaew
Written by - Chookiat Sakveerakul
Cinematography - Decha Srimantra
Music by - Korrakot Sittivash,
Rochan Madicar, Nimit Jitranon
Country - Thailand
Languages - Thai, Japanese
Year - 2008
வழக்கமான பழிவாங்கும் அதிரடிப் படம்தான் என்றாலும், இந்த திரைப்படத்தின் மூலம் டான் சூபோங் (Dan Chupong) என்ற முற்றிலும் மாறுபட்ட சண்டை பாணி அறிமுகமானது. நாயகி ஜீஜா யானினும் உலக புகழ்பெற்றார். தொழில்நுட்பம், கேமரா கோணங்கள், இவை எதுவும் இல்லாமல் உடல் இயக்கம், சண்டை அமைப்பு, அதன் நேர்த்தி மற்றும் படத்தொகுப்பின் வேகம் இந்த திரைப்படத்தை உலக தரத்திற்கு கொண்டு சென்றது. நீங்கள், அதிரடி, தற்காப்பு கலை, சண்டைக்காட்சி நிறைந்த திரைப்படங்களின் ரசிகர் என்றால் இந்த திரைப்படம் நிச்சையம் உங்களுக்கு பிடிக்கும். இந்த திரைப்பத்தை பார்த்த பிறகு நீங்கள் மேலும் பல தாய்லாந்து திரைப்படங்களை தேடவும் செய்வீர்கள்.
உங்கள் வசதிக்காக சில அதிரடி தாய்லாந்து திரைப்படங்கள் ...
1. Born to Fight - 2004
2. Beautiful Boxer - 2004
3. Muay Thai Chaiya - 2007
4. Raging Phoenix - 2009
5. Yamada: The Samurai of Ayothaya - 2010
(இதில் டோனி ஜாவின் திரைப்படங்கள் எதுவும் இல்லை. மேலும் Beautiful Boxer திரைப்படத்தை கட்டாயம் பாருங்கள்)...