யுடோரி - வாழ்வை ரசிக்கும் ஜப்பானிய முறை.
யுடோரி (Yutori) என்பது ஜப்பானிய வாழ்க்கைமுறையில், அவசரமின்றி வாழ்வதற்கும், மனதிற்கும் நேரத்திற்கும் இடைவெளி கொடுப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஒரு கருத்தாகும்.
ஜப்பானிய மொழியில் Yutori என்பதற்கு “இடைவெளி”, “தாராளமான நேரம்” அல்லது "விசாலம்” என்று பொருள் கொள்ளலாம். இது நேரத்தை நிரப்பிக்கொண்டே இருப்பதற்குப் பதிலாக, வாழ்க்கையில் சுவாசிக்கவும், சிந்திக்கவும், ரசிக்கவும் இடம் ஒதுக்குவதை வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு நிமிடத்தையும் செயல்பாடுகளால் திணிப்பதற்குப் பதிலாக, நமது கால அட்டவணையில் வேண்டுமென்றே இடைவெளிகளை விட்டு, சிந்திக்கவும், ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும், நமக்கு நாமே நேரம் ஒதுக்கிக்கொள்ளவும், இது நம்மை ஊக்குவிக்கிறது. இது சோம்பேறித்தனமாக இருப்பதையோ அல்லது பொறுப்பைத் தவிர்ப்பதையோ பற்றியதல்ல. தொடர்ந்து முழுத் திறனுடன் செயல்படுவது, படைப்பாற்றல், தெளிவு அல்லது மகிழ்ச்சிக்கு பெரும்பாலும் சிறிதளவேனும் இடமளிப்பது.
சந்தோசமோ! துக்கமோ!
ஒரு ஐந்து நிமிடம்
தள்ளிப்போடு - காதலன் காதலியிடம் சொல்வானே! அதுபோல்.
நல்லவேளை நீ எதுவுமே செய்யல என்ற 5 ஸ்டார் விளம்பரத்தைப் போல்.
யுடோரி வாழ்க்கையின் 5 அம்சங்கள்
1. அவசரமில்லாத காலை -
ஒரு நாளைத் தொடங்கும்போது சிறிது நேரம் அமைதியாக இருப்பது.
2. நேரத்திற்கு இடைவெளி -
ஒவ்வொரு நிமிடத்தையும் வேலைகளால் நிரப்பாமல், ஓய்வுக்கும் இடம் கொடுப்பது.
3. நிகழ்காலத்தை ரசித்தல்-
இயற்கை, உணவு, உறவுகள் போன்ற சிறிய மகிழ்ச்சிகளைக் கவனிப்பது.
4. மனதிற்கு ஓய்வு -
எப்போதும் உற்பத்தித்திறனுடன் இருக்க வேண்டும் என்ற அழுத்தத்தைக் குறைப்பது.
5. உறவுகளுக்கு நேரம்-
குடும்பம், நண்பர்கள் மற்றும் நமக்குப் பிடித்தவர்களுடன் நிதானமாக நேரம் செலவிடுவது.
பணம்தான் கடவுள். கடவுளே பணம்தான். இப்போது சம்பாதிக்காமல் எப்போது சம்பாதிப்பது? அவனைப் போல நான் எப்போது மாறுவது?
வீடு,
கார்,
சேமிப்பு,
பாலிசி,
கொஞ்சம் நகை,
தூரத்தில் நண்பர்கள்,
வெகு தூரத்தில் உறவினர்கள்,
அண்டை வீட்டார்களிடம் 5 மிமீ புன்னகை,
தொப்பை,
முதுகுவலி,
டயபடிஸ்,
காலையில்
காஸ்ட்லி நாய் வாக்கிங்
வாழ்க்கையே சிறந்ததென, அதனை இலக்காக்கி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டதிற்கு இது உதவுமா என்றால்? நிச்சையம் உதவும்.
மேற்கண்ட எல்லா தேவைகளையும் அடைய, நாம் காலத்தையே சார்ந்திருக்கிறோம். குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் அடைந்துவிட்டு, பிறகுவரும் காலங்களில் மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம் என ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் காலம் எல்லோருக்கும் ஒரே கணக்கைதான் வைத்திருக்கிறது. அது திரும்பி பார்க்கும்போது எதையும் இல்லாமல் செய்துவிடுகிறது.
எல்லாவற்றையும் விட விலையுயர்ந்தது நாம், நாமாக வாழும் நமக்கான காலம்.
அந்த காலத்தை பயன்படுத்துவதுதான் யுடோரி.
சுருக்கமாக
"Rather than achieving everything in life quickly, making room to enjoy life along the path to that achievement"
“வாழ்க்கையில் எல்லாவற்றையும் விரைவாக அடைவதைவிட, அடையும் பாதையில் வாழ்வை ரசிப்பதற்கு இடம் கொடுப்பது"...