அன்பான மிருகங்களின் கூட்டம் - Ice Age - Boiling Point.
ஒரு டிரைலர்.
ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற உலகின் சிறந்த கார்டூன் திரைப்பட வரிசையில் ஐஸ் ஏஜூம் ஒன்று. இது 2002 -ல் தொடங்கி இதுவரை மொத்தம் 5 திரைப்பட பாகங்களாக வெளிவந்திருக்கிறது.
Ice Age (2002)
The Meltdown (2006)
Dawn of the Dinosaurs (2009)
Continental Drift (2012)
Collision Course (2016)
நீண்ட இடைவேளைக்கு பிறகு இதன் ஆறாவது பாகம் வெளிவர இருக்கிறது.
Boiling Point (2027)
The Herd என்ற அன்பான மிருகங்களின் கூட்டத்தை சேர்ந்த
மேனி (மமூத் யானை)
சிட் (ஸ்லாத்)
டியாகோ (கொடுவாள் புலி)
எல்லி (மமூத் யானை)
பக் (நீர்நாய்)
அதோடு கிராஷ் மற்றும் எடி (ஓபோசம் எலி சகோதரர்கள்)
மேலும் அனைவருக்கும் பிடித்த அந்த ஏகோர்ன் ஓட்டுக் கொட்டையை துரத்திக்கொண்டே இருக்கும் ஸ்கிராட் (அணில்),
ஆகியோர்கள் ஐஸ் ஏஜின் முக்கிய கதாபாத்திரங்கள் ஆவார்கள். முந்தைய பாகங்களில் கலக்கிய இவர்கள், இதுவரை பார்த்திராத எரிமலைகளும் டைனோசர்களும் நிறைந்த ஒரு நிலத்தடி உலகத்திற்குள் (Lost World) மாட்டிக்கொள்கிறார்கள். அங்கு ஏற்படும் எரிமலை வெடிப்புகளில் இருந்தும், ஆபத்தான டைனோசர்களிடமிருந்தும் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதே இந்த புதிய பாகத்தின் விறுவிறுப்பான கதையாக இருக்கப் போகிறது. சுருக்கமாகச் சொன்னால், பனியில் நடுங்கிய இவர்கள், இந்த முறை நெருப்பிலும் வெப்பத்திலும் தப்பிக்கப் போராடும் ஒரு மரண மாஸ் காமெடி சாகசப் பயணமே இந்த Boiling Point.
ஐஸ் ஏஜ் திரைப்படத் தொடரை 'புளூ ஸ்கை ஸ்டுடியோஸ்' (Blue Sky Studios) என்ற நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த நிறுவனம் 2021 -ல் மூடப்பட, தற்போது 6 ஆம் பாகத்தை 20th Century Animation நிறுவனம் தயாரித்துள்ளது. ஜான் சி. டான்கின் (John C. Donkin) இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் பிப்ரவரி 5, 2027 அன்று திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப் பட்டிருக்கிறது. ஐஸ் ஏஜ் திரைப்படங்களின் மூலக் கதை மற்றும் உருவாக்கம் ஒரு குறிப்பிட்ட நபரால் மட்டும் செய்யப்பட்டதில்லை, அது ஒரு பெரிய அனிமேஷன் ஸ்டுடியோவின் கூட்டு முயற்சியாகவே இருந்திருக்கிறது.
ஐஸ் ஏஜ் வெறும் சாகச கார்டூன் திரைப்பட தொடர் மட்டுமல்ல, பனியுகம், பனி உருகி வெள்ளம் ஏற்பட்ட காலம், டைனோசார் காலம், பூமி கண்டங்களாக பிரிந்த காலம், எரிகல் பூமியில் விழுந்த காலம், என உலகம் சந்தித்த கால வரலாற்றை கதையோடு சொல்லும் தொடராகும். இயற்கையை மையமாக கொண்ட புதிய பாகம் கூட, தற்போது நிகழும் பூமியின் வெப்பநிலை உயர்வை சுட்டிக்காட்டுவதாக இருக்கும். அதனோடு ஐஸ் ஏஜ் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடில்லாமல் மனநிறைவைத் தரக்கூடிய ஒரு திரைப்படமாகும். அந்த தொடர் முடிந்ததே என்ற கவலை அடியேன் உட்பட பல கார்டூன் ரசிகர்களுக்கு இருந்தது. பத்து வருடங்களுக்கு பிறகு மறுபடியும் அதனை பார்க்கலாம் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், The Hert என்ற அன்பான மிருகங்களின் கூட்டத்தை மீண்டும் சந்திக்கப்போகிறோம் என்ற ஆவலும் ஏற்படுகிறது...