இரவுக்குறி...
கரிசல் தரிசல் நிலவு கொதிக்க…
உசுர கடந்து மனசும் குதிக்க…
வரவா ஊரும் அடங்க…
நாலு தெருவும் தொறந்து கெடக்க…
நாயும் நரியும் முழிச்சு கெடக்க…
முடியுமா என்ன நெருங்க…
அழகான பாடல், கதைபோல அமைந்த பாடல், இசையால் பிரம்மிக்க வைத்த பாடல், மீண்டும் கேட்க, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல், சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட "இரவுக்குறி" என்ற அமைப்பை கொண்ட பாடல்.
அதென்ன இரவுக்குறி?
தலைவனும் தலைவியும் காதலில் இருக்கிறார்கள். காதல் வந்தல் தூக்கம் வருமா என்ன? ஹார்மோன்ஸ் டே நைட் மேட்ச் ஆடத் தொடங்கிவிடும் (அதிலும் நைட்மேட்ச் ரொம்ப ரிஸ்க். Lets start the match) தலைவன் தலைவியை இரவில் தனிமையில் சந்திக்க நினைக்கிறாள். தலைவியும் அவ்வாறே ச... ந்... திக்க நினைக்கிறாள். அவர்கள் இரகசியமாக இரவில் சந்திப்பதற்காகத் குறிக்கப்படும் இடம் (trysting place) அல்லது சந்தர்ப்பமே இரவுக்குறியாகும். அதற்கு தோழி உதவுவாள். அந்த இடம் தலைவியின் வீட்டை ஒட்டிய பகுதிக்குள், வீட்டு எல்லைக்குள், ஊருக்குள், அப்படி குள் அமையும். தலைவியைக் காண தலைவன் பல சோதனைகளை கடந்து இரவுக்குறிக் குள் வருவான். காதலர்கள் சந்தித்து உரையாடுவார்கள் அல்லது உறவாடுவார்கள். இந்த இரவுக்குறி காதலர்களின் இரகசிய உறவை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகவும், இலக்கிய உத்தியாகவும் இருந்திருக்கிறது. மேற்கண்ட சினிமா பாடல் உருவாகவும் உதவியாக இருந்திருக்கிறது.
இந்த இரவுக்குறியில் ஒன்பது வகைகள் இருக்கிறது.
வேண்டல்
தலைவியை சந்திக்க தலைவன் தோழியிடம் வேண்டுதல் - Application
(I am suffering from love... unable to sleep...etc).
மறுத்தல்
தலைவி மட்டுமல்லாது தோழியும் சந்திப்பிற்கு மறுத்தல் - Apllplication Rejected
உடன்படுதல்
இரவுக்குறிக்கு ஒப்புக்கொள்ளுதல் - Accept
கூட்டல்
இரவுக்குறி என்றால் சந்திக்கும் இடம் என பார்த்தோம் அல்லவா!. அந்த இடத்திற்கு தோழி, தலைவியை அழைத்து வருதல் - Arrival
கூடல்
தலைவனும் தலைவியும் கூடி மகிழ்தல் - Joining together
பாராட்டல்
கூடலுக்கு பின்பு தலைவனோ, தலைவியோ ஒருவரை ஒருவர் புகழ்தல். தலைவன் தோழிக்கு கொடுத்த பரிசுசினை புகழ்தல் - Appreciation.
பாங்கிற் கூட்டல்
இரவுக்குறியில் கூடி மகிழ்ந்த தலைவன் காத்திருந்த தோழியிடம் தலைவியை ஒப்படைத்ததோடு, தலைவியின் வீடுவரை அவர்களை அழைத்துச் செல்லுதல் - Send off.
உயங்கல்
இரவுக்குறியில் சந்திப்பதற்குத் தலைவன் வரும் வழியில் உள்ள இடையூறுகளை எண்ணித் தலைவி வருந்துதல். அதைக் கண்டு தலைவனும் வருந்துதல் - Feeling together (உயங்கல் - வருத்தம்).
நீங்கல்
இருவரின் சந்திப்பிற்கு, சந்தோசத்திற்கு பிறகு விடைபெறுதல் - Farewell (Pair well).
இந்த இரவுக்குறியில் வகைகள் மட்டுமல்லாது, ஒரு நாடகத்தைப் போல சில நிலைகளும் இருக்கிறது (Flow of Events).
குறியிடல்
தலைவன் தலைவியின் வீட்டிற்கு வந்து தான் வந்துவிட்டதை உணர்த்த ஒரு சத்தத்தை எழுப்புதல் (மரக்கிளையை ஒடித்தல் அல்லது பறவைபோல ஒலியிடுதல்).
எய்தல்
சத்தத்தைக் கேட்டு தலைவி தோழியின் உதவியுடன் மறைந்து வெளியே வருதல்.
குறியிடைப் பிழைத்தல்
எதிர்பாராத விதமாக விலங்குகள் சத்தமிடுவதையோ, அல்லது காற்று வீசுவதையோ தலைவன் வந்துவிட்டான் எனத் தவறாக எண்ணி தலைவி ஏமாறுதல்.
வரைவு கடாதல்
இந்த ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, "திருமணம் செய்துகொள்வதே நிரந்தரத் தீர்வு" எனத் தோழி தலைவனிடம் வற்புறுத்துதல்.
இவையெல்லாம் நிறைந்த இரவுக்குறி இன்பமானது (காதலர்களுக்கு), இனிமையானது என நினைக்க வேண்டாம். அதில் சில இன்னல்களும் இருக்கிறது. அதையும் பார்த்துவிடலாம்.
இரவுக்குறி இடையீடு
இந்த மகா காதல் சந்திப்பிற்கு எற்படும் இன்னல்களே இரவுக்குறி இடையீடு ஆகும். அது இரண்டுவகைப்படும்.
அல்லகுறி
எதிர்பாராத விதமாக விலங்குகள் சத்தமிடுவதையோ அல்லது காற்று வீசுவதையோ தலைவன் வந்துவிட்டான் எனத் தவறாக என்னி தலைவி ஏமாறுவதை குறியிடைப் பிழைத்தல் என பார்த்தோம் அல்லவா! அதனை தொடர்ந்து இதுபோல் தவறான கணிப்பினால் தலைவியும் தலைவனும் சந்திக்காமல் திரும்பிச் சென்றுவிடுதலே அல்லகுறியாகும்.
வரும்தொழிற்கு அருமை
இரவுக்குறியில் தலைவியைக் காணத் தலைவன் வருவான், அப்படி அவன் வரும் வழியில் சில இடையூறான நிகழ்ச்சிகள் நிகழும் (தடைகள்), அதனால் தலைவியை சந்திக்க முடியாமல் போய்விடும். இதுவே வரும்தொழிற்கு அருமை ஆகும்.
அப்படி என்ன தடைகள்?
தாய் துஞ்சாமை -
தலைவியின் தாய் உறங்காமல் இருத்தல் (No choise to meet - வாய்ப்பில்லை ராஜா).
நாய் துஞ்சாமை -
இதுவும் ஆபத்துதான். பெரிய வீரசூரனே ஆனாலும் நாய் துரத்தினால் ஓடித்தான் ஆக வேண்டும்.
ஊர் துஞ்சாமை -
இது அதைவிட ஆபத்து. சிக்கினால் சின்னாபின்னாமாகி விடுவோம்.
காவலர் துஞ்சாமை -
இரவு ரோந்துப்பணியில் காவலர்கள் இருக்க, சந்திப்பு தடைபடுதல்.
நிலவு வெளிப்படுதல் -
காதலர்களுக்கு நிலவழகு என்பார்கள். இங்கு நிலவு வெளிச்சத்தை உமிழ்வதால் இங்கு தடையாக இருக்கிறது.
கூகை குழறுதல் -
நாய், நரி போலவே ஆந்தை கத்துவதும் இரவு பயத்தை அதிகரிக்கிறது.
கோழி குரல் காட்டுதல் -
பொழுது விடிவதற்கு முன்பே கோழி கூவுதல்.
அகநானூற்றில் இத்தடைக்கென தனி பாடலே இருக்கிறது.
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின்,
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
வளைக்கண் சேவல் வாளாது மடியின்,
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
ஆதி போகிய பாய்பரி நன் மா
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டின்றால் தோழி! நம் களவே.
இந்த ஊரில் திருவிழாக்கள் இல்லாவிட்டாலும் மக்கள் ஆரவாரத்துடன் தூங்காமல் மகிழ்ந்திருக்கின்றனர்.
மக்கள் தூங்கினாலும் கண்டித்துக் கடுஞ்சொல் பேசும் தனது தாய் தூங்காமல் இருக்கிறாள். என்னை வீட்டிலே சிறை வைத்திருக்கும் தாய் தூங்கினாலும், இந்த ஊரைக் காக்கும் காவலர்கள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
வேலைக் கையில் வைத்திருக்கும் காவலர்கள் தூங்கினாலும், வலப்புறமாக மயிர்முடி சுருண்டிருக்கும் நாய் குரைத்துக் கொண்டிருக்கும். நாய் குரைக்காமல் அடங்கினாலும், வானத்தில் பகல் போல் ஒளியை விரித்துக்கொண்டு நிலா காய்கிறது (நேரம் தேய்கிறது).
நிலா மலைக்குப் பின்னால் மறைந்துவிட்டால், இருள் வந்துவிடும். அப்போது இருட்டில் எலியைப் பிடிக்கும் ஆந்தை அகவும். அது பேய் நடமாட்டம் உள்ள யாமத்தில் என்னை அழிப்பது போல் இருக்கும். வளைந்த கொட்டைக்கண் கொண்ட அந்த ஆந்தை மடிந்துவிட்டால், வீட்டிலே அடைத்து வைத்திருக்கும் கோழிச்சேவல் விடிந்துவிட்டது என்று குரல் எடுத்துக் கூவும். இவை அனைத்தும் அவர் என்னிடம் வருவதற்கு இருக்கும் தடைகள். இந்த தடைகள் அனைத்தும் மடிந்திருக்கும் நாள் ஒன்று வருமானால் அந்த நாளில் அவர் வரமாட்டார் என இந்த பாடலில் ஏக்கத்துடன் தலைவி கூறுகிறாள்.
இந்த ஒரு பாடல் இரவுக்குறிக்கு முதன்மை சான்றாக இருக்கிறது. இரவுக்குறியில் அமைந்த மேலும் சில பாடல்களும் சங்க இலக்கியத்தில் இருக்கிறது.
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல், . . . .
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே.
கடவுள் இருப்பதாக நம்பப்படும் ஊர் வாசலில் இருக்கும் பழமையான மரத்தில் வசிக்கும், கூரிய நகங்களையும் பறை போன்ற ஒலியையும் உடைய ஆந்தையே ! நீ சத்தம் போடாமல் இரு. தலைவன் வரும் நேரமான நள்ளிரவில், உன் சத்தம் கேட்டு ஊரே விழித்துக்கொள்ளும். எனவே, நீ சத்தமிடாமல் அமைதியாக இரு என்கிறாள்.
இரவுக்குறி வந்த தலைவன், அருகே மறைந்து நிற்பதை அறிந்த தோழி, ஆந்தையை பேசுவது போல அவனிடம் பேசுவதாக இந்த நற்றிணை பாடல் அமைந்திருக்கிறது.
கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.
இந்த குறுந்தொகை பாடலும் தோழியின் கூற்றே ஆகும். இதுவும் இரவுக்குறி வகையைச் சேர்ந்தது. இதில் அவள் ஊரில் உள்ளவர்கள் அனைவரும் தூங்கினாலும் நாங்கள் தூங்கமாட்டோம் என்று கூறுகிறாள்.
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள,
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப்
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்
அகநானூறு - 118
புன்கால் உன்னத்துப் பகைவன் போல" "முன்கால் ஒசிய ஏறி..."
அகநானூறு - 158
தலைவன் வருவான் என்று பார்த்திருந்தால், பலத்த காற்று வீசி மரக்கிளைகள் அசைகின்றன. அவன் செய்த குறியீடு இதுதான் என்று நினைத்து நான் வெளியே வந்து ஏமாந்து போகிறேன். இதனால் என் உள்ளம் புண்படுகிறது" என்று தலைவி தன் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறாள்.
சங்க இலக்கியங்களில் காதல் சுவரசியமானது. அதில் ஒரு சந்திப்பு நிகழ்வான இரவுக்குறி அத்தனை சுவாரசியங்களையும் மிஞ்சியது...