யாபா - ஆறாம் அறிவின் மனிதாபிமானம்...
பயம், மற்றும் அறியாமையிலிருந்து வருவதே மூடநம்பிக்கை. எதைக் கேட்டாலும் தரும் AI தொழில்நுட்ப காலத்திலும் மூடநம்பிக்கை எங்கும் இருக்கிறது. மாற்றம் வேண்டிய இடத்தில் மூட நம்பிக்கை நுழைய பார்க்கிறது. வழக்கமான வேஷ்டி சட்டையை உதறித் தள்விட்டு கோட் சூட் போட்டுக் கொண்டு அரியணை ஏற நினைத்தால் கூட, பட்டையும் கொட்டையுமாக பழைய பஞ்சாங்க ஜோசியர் ஒருவர் துணை தேவைப்படுகிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் மணியடித்து விளக்கு பிடித்தால் நோய் தொற்று ஒழிந்து போகும் என்ற மூடநம்பிக்கையை பின்பற்றியதில் பெரும்பான்மையோர் நல்ல படித்த அறிவார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களே இருந்தனர். அதனை வைத்து பார்க்கையில் கல்விக்கும் மூடநம்பிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிகிறது. வளர்ந்த நாடுகளிலும் இந்த மூடநம்பிக்கை மனித சிந்தனையின் மறுபாதியாக இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகலாவிய ஜோதிடச் சந்தையின் மதிப்பு 1,280 கோடி டாலர்களாகும். உலகமெங்கும் மூடநம்பிக்கைகள் கொட்டிக் கிடக்கிறது.
"மனித மனம் தனக்குச் சாதகமான, தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே பார்க்க விரும்புகிறது; உண்மையை அல்ல". இதுவே மூடநம்பிக்கைக்குக் காரணம்.
என்கிறார் "பிரான்சிஸ் பேக்கன்" (Francis Bacon). இவற்றைவிட எம்.ஆர்.ராதா ஒரு திரைப்படத்தில் ஒரே வரியில் மூடநம்பிக்கைப் பற்றி
அவரது ஸ்டைலில் அழகாக சொல்லியிருப்பார்.
ஏன்டா! ....டேய்...அறிவ டயர்டாக்கிக்கிறீங்க...
இந்த மூடநம்பிக்கை என்ன செய்யும்?.
ஒரு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கத் தவறும். ஒரு இனம், குழு, ஒரு சிறிய கூட்டத்தை ஏதோ ஒன்றிற்காக அடிமையாக வைத்திருக்கும். தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு மனதிலும் விதைக்கும். மனிதாபிமானத்தை மதிக்கத் தவறும். இதனை அழகாக சுட்டிக் காட்டும் ஆப்பிரிக்க நாட்டு திரைப்படம்தான் யாபா.
யாபா (Yaaba) 1989-ல் வெளியான ஒரு மிகச்சிறந்த புர்கினா பாசோ (Burkina Faso) நாட்டு திரைப்படமாகும். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா பாசோ நாட்டின் ஒரு வறண்ட சிறிய கிராமப்புற பின்னணியில் கதை நடக்கிறது. அந்தக் கிராமத்தில் சனா (Sana) என்ற வயதான பெண்மணி வசிக்கிறாள். அவள் தனியாக ஒரு குடிசையில், கிராமத்தின் எல்லையில் வாழ்கிறாள். அந்தக் கிராம மக்கள் அவளை ஒரு "சூனியக்காரி" என்று நம்புகிறார்கள். ஊரில் நடக்கும் எல்லா கெட்ட காரியங்களுக்கும் அவர்தான் காரணம் என்று பழிபோடுகிறார்கள். கதையின் நாயகன் பிலா (Bila) என்ற 10 வயது சிறுவனுக்கு மட்டுமே அவள் மேல் பயம் இல்லாமல் இருக்கிறது. அவள் மீது அவன் அக்கறை கொள்கிறான். அவளை அன்போடு "யாபா" (மோர் மொழியில் 'பாட்டி') என்று அழைக்கிறான். அவளோடு ரகசியமாகப் பேசுகிறான், அவளுக்கு உணவு கொண்டு வருகிறான்.
பிலாவின் தோழியும் உறவினருமான நோபோகோ (Nopoko) என்ற சிறுமிக்குத் திடீரென கடும் காய்ச்சல் ஏற்படுகிறது. கிராமத்து மக்கள் வழக்கம் போல, சனா தான் அந்தச் சிறுமிக்குச் சூனியம் வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். கோபமடைந்த ஒருவன் சனாவின் குடிசையைத் தீயிட்டுக் கொளுத்துகிறான். தன் வீட்டை இழந்த நிலையிலும், சனா அந்தச் சிறுமியைக் காப்பாற்ற நினைக்கிறாள். அவள் பிலாவிடம் ஒரு மருந்துச் செடியைப் பற்றிச் சொல்லி, அதை எடுத்து வரச் சொல்கிறார். பிலா அந்த மருந்துச் செடியைக் கொண்டு வருகிறான். சனா தனது அனுபவ அறிவைக் கொண்டு அந்தச் சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கிறாள். சனாவின் முயற்சியால் நோபோகோ மெல்ல மெல்லக் குணமடைகிறாள். இதன் மூலம், சனா ஒரு தீய சூனியக்காரி அல்ல, மாறாக அவர் ஒரு கனிவான மற்றும் அறிவார்ந்த மருத்துவர் என்பதை பிலா உணருகிறான். இருப்பினும், கிராமத்து மக்கள் அவர்களது மூடநம்பிக்கையிலிருந்து மாறாமல், சனா செய்த உதவியை அங்கீகரிக்க மறுக்கிறார்கள்.
சிறிது காலத்திற்குப் பிறகு, சனா வயது மூப்பு காரணமாக இயற்கையாகவே மரணமடைகிறாள். அவள் இறந்த பிறகும், கிராம மக்கள் அவளை மரியாதையோடு அடக்கம் செய்ய மறுக்கிறார்கள். ஆனால், பிலா மட்டும் அந்தப் பாட்டியின் உடலை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்கிறான். திரைப்படத்தின் இறுதியில், பிலா அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி ஒரு புதிய இடத்திற்குச் செல்கிறான். அவன் சனாவிடம் கற்றுக்கொண்ட மனிதாபிமானத்தையும், தைரியத்தையும் தன் இதயத்தில் சுமந்து செல்கிறான்.
ஒரு சமூகம் எவ்வித ஆதாரமும் இல்லாமல் ஒருவரை எப்படிப் புறக்கணிக்கிறது என்பதைக் இந்த திரைப்படம் காட்டுகிறது.. மூடநம்பிக்கையும் அதனை வீழ்த்தும் மனிதநேயமும் பிரதானமாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஒரு இனம் அல்லது, ஒரு குழு, மூடநம்பிக்கையால், ஒரு நல்ல மனித மனத்தை மட்டுமல்லாது, மருத்துவம் உட்பட நல்ல அனுபவம் கொண்ட ஒரு வழிகாட்டியை எவ்வாறு புறக்கணிக்கிறது என காட்டுகிறது. இந்த திரைப்படம் "மோர்" என்ற ஒரு ஆப்பிரிக்க மொழியில் எடுக்கப்பட்டிருக்கிறது. குறைவான வசனங்களை கொண்டு உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது. ஆப்பிரிக்கக் கிராமிய வாழ்வியலை எந்தவித அலங்காரமும் இல்லாமல், அதன் இயற்கை அழகோடு படம்பிடித்துள்ளது.
Yaaba
Directed by - Idrissa Ouedraogo
Written by - Idrissa Ouedraogo
Cinematography - Matthias Kalin
Music by - Francis Bebey
Countrie - Burkina Faso
Language - Moore
Year - 1989
வெவ்வோறு நாடுகள், வெவ்வோறு கலாச்சாரம், வெவ்வோறு மொழிகள், கொண்ட திரைப்படங்களை தேடுவதே வாடிக்கை. அவ்வாறு தேடக் கிடைத்த இந்த திரைப்படம், எது வெவ்வோறு இருந்தால் என்ன? மனிதனின் உணர்வுகள் எல்லாமே ஒன்றுதான் என காட்டியது. மனிதநேயமே பிரதானம் என உணர்த்தியது.
ஒரு இனமாக இருக்கட்டும், ஒரு பிரிவு, ஒரு குழு, தனிமனிதனாகட்டும் தீண்டாமையால் ஒதுக்கி வைப்பது மனிதத் தன்மையாக இருக்காது. போர், கலவரம், சண்டை, சச்சரவு இல்லாத அமைதியான உலகிற்கு அது என்றுமே உதவாது. "நீ உன் வேலையைப் பார், நான் என் வேலையில் இருக்கிறேன்" என எல்லோரும் இயல்பாக வாழ, மனிதநேயம் மட்டும்தான் இன்றைக்கு தேவைப்படுகிறது. எல்லைகளைக் கடந்து, சக மனிதனை நேசிக்கும் உயரிய அறம் அது.
புறநானுற்றின் யாதும் ஊரே யாவரும் கேளிர்".
மனிதப் பிறவிகள் அனைவரும்
ஒரே உடலின் உறுப்புகள் போன்றவர்கள்;
ஏனெனில்
அனைவரும் ஒரே சாரத்திலிருந்தே படைக்கப்பட்டனர்.
ஓர் உறுப்பு வலியில் துடிக்கும்போது,
மற்ற உறுப்புகளுக்கும்
அமைதி இருப்பதில்லை."
பாரசீகக் கவிஞர் சாதி ஷிராசி (Saadi Shirazi) சொன்னதைப் போல சக மனிதனை நேசிக்கும் மனிதநேயம்.
மனிதாபிமானம் என்பது கடவுளை அடைவதற்கான குறுக்கு வழி (நாம் தான் எல்லாவற்றிலும் குறுக்கு வழியை பின்பற்ற கற்றுக் கொண்டேமே. So follow it very easy).
நாளைய உலகை
ஆளப்போவது
வெறும் அதிகாரமல்ல,
அறிவியல் அல்ல
பணமல்ல,
மூட நம்பிக்கைகளும்,
கடவுள்களும் அல்ல,
ஆறாம் அறிவின்
மனிதாபிமானம்...