அஃறிணை பத்து - பாகம் 2

ஆறறிவு கொண்ட மனிதர்களைவிட கீழானவைகளை அஃறிணை என்கிறோம். அவைகளைவிட மேம்பட்டவையா நாம்?..
அஃறிணை பத்து கிறுக்கலின் இரண்டாம் பாகம். 
ஊர் புகுந்த
யானையையும்
கரடியையும்
சிறுத்தையையும்
துரத்திவிட்டு
நிம்மதியுடன் 
உறங்குகிறது
வனம் புகுந்த 
ஊர்..
அன்று 
மீன் கொடுத்து
வறண்ட 
ஓடைக்கு 
திரும்பி வருவேன் 
என 
இறகசைத்து 
பறந்தது 
கொக்கு...
இன்னும் 
சில மணிநேரத்தில்
வெட்டப்படும்
ஆடுகள் இரண்டும்
உரசிக்கொள்ளுமளவிற்கு
நெருக்கமாகக்
கட்டப்பட்டிருந்தன... 
மழையும் 
ரசிக்காது
பேடையும் 
ரசிக்காது
அலுத்து உதிர்ந்த
மயில் தோகை
வனமெங்கும்... 
கூடுடைத்து
இணை பிரித்து
குஞ்சுகளை நசுக்கி
அபசகுணமென
அடித்துத் துரத்தப்பட்ட 
புறா
அடுத்த 
கூரையில்...
ஒற்றை 
மரத்தையும்
ஓரின 
வசிப்பையும்
ஓரொலி 
குரலையும்
அணில்கள் 
ஒருபோதும்
வனமாகக் 
கருதுவதில்லை... 
வெட்டுக்கிளியின்
சாவு 
ஊர்வலம்
எறும்புகளுக்கு
சாப்பாட்டு 
விருந்து...
புலி பயம்
இல்லையெனில்
மான்கள் 
இல்லை...
மேலோட்டமாக 
மேயும்
முயல்களுக்குத் 
தெரியும்
புல்வெளியின்
ஆழ் ருசி...
இலையுதிர் 
காலத்தின்
கிளை ஒன்று
அசைபோடுகிறது
கிளி தங்கிய
நினைவுகளை...