பாபோஜோலா கிராமம்...
ஒரு கிருமி உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றுக்காலத்திற்கு பின்னோக்கிச் செல்வோம். அந்த காலத்தில்,
1. அனைவரும் முககவசம் அணிந்தோம்,
2. சமூக இடைவெளியை பின்பற்றினோம்,
3. சாராயக் கடை (டாஸ்மாக்) உட்பட சகல இடங்களிலும் வரிசையில் நின்றோம்,
4. கை, கால்களை சுத்தமாக வைத்திருந்தோம்,
5. வீடு, கடை, அலுவலகமெல்லாம் கிருமி நாசினிகளை தெளித்தோம்,
6. எங்கும் எச்சில் துப்பாமல் இருந்தோம்,
7. இருமினாலும், தும்மினாலும், யார்மீதும் படாமல் பார்த்துக் கொண்டோம்,
8. குப்பை கொட்டாமலும், சாக்கடை தேங்காமலும் வைத்துக்கொண்டோம்,
9. மிக முக்கியமாக இயற்கை பொருட்களுக்கும், ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தோம்,
10. சானிடைசர் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது.
தொற்று காலத்திற்கு பிறகு வாழ்க்கை இயல்பு நிலைக்கு திருப்பியது. நாமும் பழைய நிலைக்கு திரும்பினோம். சுகாதாரம் கேள்விக்குறியாகவும், தீவிர விவாதப் பொருளாகவும் மாறிவிட்டது. இன்று யாரேனும் முககவசம் அணிந்திருந்தால் அவர்களை மேலும் கீழும் பார்ப்போம், சமூக இடைவெளி,வரிசை, சுத்தம் சுகாதாரம் இவற்றையெல்லாம் கடைபிடிப்பவர்களை, அட! ஏன்? அதைப்பற்றி பேசுபவர்களைக் கூட வேற்று கிரகவாசியாக பாவிப்போம். இத்தகைய நிலையில் ஒரு கிராமமே சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கிறதென்றால் அது நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய குக்கிராமம்தான் பாபோஜோலா. இந்த கிராமத்தில் சுமார் 70 சந்தால் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தினமும் மூன்று முறை கிராமத்தைச் சுத்தம் செய்து, குப்பைகளைத் தொட்டிகளில் சேகரிக்கின்றனர். மறுநாள் அக்குப்பைகளை இளைஞர்கள் முறையாக அகற்றுகின்றனர். இக்கிராமத்தில் எவரும் குட்கா உட்கொள்வதில்லை, மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் எங்கும் தென்படுவதில்லை. இதுமட்டுமின்றி, பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கிராமத்தின் ஒவ்வொரு மூலையிலும் 'புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது' என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு நெகிழிப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன, புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் எச்சில் துப்புவது அல்லது புகையிலை மெல்லுவது கூடத் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் காற்றில் பறக்கும் பாலிதீன் உறைகளையோ அல்லது தெரு மூலைகளில் கறை படிந்த சுவர்களையோ அல்லது சிகரெட் துண்டுகளையோ அல்லது குப்பைகளையோ நம்மால் காணவே முடியாது (கண்டுபிடித்தால் ஆயிரம் பொற்காசுகள்). பாபோஜோலாவில் வசிக்கும் கிராமவாசிகளுக்கு, சுத்தம் என்பது வெறும் விதி மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறையாகவும், ஒவ்வொரு குடும்பமும் மிகவும் விடாமுயற்சியுடன் பின்பற்றும் ஒரு கடமையாகவும் இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் வரும் படபர்பா திருவிழாவின் போது, கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்குப் புதிதாக வண்ணம் பூசி, சுகாதாரத்தைப் பரப்பும் பாரம்பரியப் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இவர்களின் கூரை வீடுகள் இயற்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பாணியில் அமைந்துள்ளன. சுவாரஸ்யமாக, ஒவ்வொரு வீட்டின் சுவர்களும் அங்கிருக்கும் பெண்களால், வண்ணமயமான மலர் மற்றும் இலை வடிவங்களுடனும், விலங்குகள் மற்றும் பாரம்பரியக் கலைவடிவங்களுடனும் அழகாக அலங்கரிக்கப்படுகின்றன. உள்ளூர் வழக்கில் 'பித் போட்டாவ்' (Bhit Potaw) என்று அழைக்கப்படும் இவ்வகைக் கலைவடிவத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து வண்ணங்களும், ஆற்றங்கரையோரக் களிமண், கற்கள், மரப்பட்டைகள் மற்றும் மலர்களிலிருந்து இயற்கையான முறையில் பெறப்படுகிறது. இங்கிருக்கும் ஒவ்வொரு வீடும் ஒரு கதையைச் சொல்கிறது. ஒவ்வொரு சுவரும் படைப்பாற்றலைப் பிரதிபலிக்கிறது.
சுகாதாரத்தின் மீதான தனது கவனத்தின் மூலம் குடிமை உணர்வின் அர்த்தத்தை இந்த கிராமம் மறுவரையறை செய்கிறது. இதன் சுகாதாரம் மற்றும் அழகினைக் காண சுற்றுலாப் பயணிகள் பலரும் வருகின்றனர். பார்வையாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் தெருக்களில் குப்பைகளை வீசுகிறார்களா இல்லையா என்பதைக் கண்காணிக்க, அந்தச் சிற்றூர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விதிகளை மீறுபவர்கள் குப்பைகளைச் சுத்தம் செய்யுமாறு அல்லது அபராதம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
பாபோஜோலா என்ற அந்த சாதாரணமான கிராமம், குப்பைகளற்ற சூழலை வலியுறுத்துகிறது, சுத்தம், சுகாதாரத்தை போற்றுகிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரு ஆசிரியர்தான் என்பது மேலும் சிறப்பாக இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு மதுசூதன் மராண்டி எனும் உள்ளூர் பள்ளி ஆசிரியர் ஒருவர் இந்த கிராமத்தை
ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்ற தூய்மை இயக்கத்தை தொடங்கினார். தூய்மையான சூழல் என்பது வெறும் தோற்றத்தைப் பற்றியது மட்டுமல்ல, அது கண்ணியம், ஆரோக்கியம் மற்றும் சுயமரியாதையைப் பற்றியது என்று அவர் நம்பினார். இவருடைய இந்த யோசனையானது முதலில் மெதுவாக தொடங்கி பின்னர் விரைவிலியே ஒரு இலட்சியப் பயணமாக மாறியது. அவர் விதிகளை மக்களிடம் திணிப்பதற்குப் பதிலாக அவர்களிடம் தக்க முறையில் எடுத்துரைத்தார்.மக்களும் அவரது தத்துவத்தை ஒரு தார்மீகப் பொறுப்பாக ஏற்றுக்கொண்டனர். அதையே கடைபிடித்து சாதித்தும் காட்டினர்.
கந்தலான நெகிழியைப்போல சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, நம் வீட்டு குப்பையை இரண்டடி தள்ளி கொட்டும் நமக்கு இந்த பாபோஜோலா கிராமம் அதிசயம் மட்டுமல்ல ஒரு முன்மாதிரியும்தான்.