நீ போரில் இருக்கிறாய்...
தெருக்களில்
எலும்புக்கூடுகள்
நடக்கின்றன,
நாய்களுடன்
சண்டையிடுகின்றன
ஒரு வாய் கஞ்சிக்காக...
யுத்தம் அங்கே
எங்கோ நடக்கிறது,
ஆனால் மரணம்
இங்கே
எங்கள் சமையலறையில்
நடக்கிறது...
எங்கோ ஒரு மூலையில் போர் நடக்க, இங்கிருக்கும் அடுப்படி அணைகிறதென்றால் இந்த உலகை ஏதோ ஒன்று இணைக்கிறது.
அது இனம், மதம், வண்ணம், வர்ணம், மற்றும் பல கடவுள்களைக் கடந்ததாக இருக்கக்கூடும். போர் கூட அதற்காகத்தான் இருக்கும். எங்கோ, எவனோ சாகிரான், எவன் செத்தா எனக்கென்ன என மணியடித்துக்கொண்டு யாராலும் இருக்க முடியாது. அதையே அவனும் நினைத்தால் கதை முடிந்தது. அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது (அதற்குதான் எப்போதும் அன்பே கடவுள் என கத்திக்கொண்டிருப்பது). விசயத்திற்கு வருவோம், போர்களை பற்றி புத்தகம், சினிமா, கிறுக்கல்கள் உட்பட நிறைய எழுதியாகிவிட்டது. தற்போது நிகழும் சூழ்நிலையில் எதுவும் எழுதக்கூடாது, நடப்பதை பிரதமர் கணக்காக கண்டுகொள்ளாமல் ஊர் சுற்றலாம் என நினைத்திருந்தேன். ஆனால்
"உனக்கு போரில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் போர் உன் மீது ஆர்வமாக உள்ளது."
என்ற லியோன் "ட்ரொட்ஸ்கியின்" வரிகள் அடியேனை கவர்ந்தது. ஆகவே கவிதைகள், பழமொழி, தத்துவங்கள் மற்றும் திரைப்படங்களில் படித்த, போர் தொடர்பான சில வரிகளை தொகுத்துள்ளேன். அது நீ(யும்) போரில் இருக்கிறாய் என்பதையே காட்டுகிறது.
உனக்கு எதிரியைத் தவிர
மற்ற அனைத்தும் இல்லாதபோது,
நீ போரில் இருக்கிறாய்...
எங்கே அழிவு இருக்கிறதோ,
அங்கெல்லாம்
புதையல் கிடைக்கும்
என்ற நம்பிக்கை இருக்கிறது...
போர்
திருடர்களை உருவாக்குகிறது,
அமைதி
அவர்களைத் தூக்கிலிடுகிறது...
போர்கள் நீங்கள் விரும்பும் போது தொடங்கும்,
ஆனால் நீங்கள் விரும்பும் போது
அவை முடிவடையாது...
உனக்கு போரில்
ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் போர்
உன் மீது ஆர்வமாக உள்ளது...
அமைதியாக வாழ விரும்புவோன்
ஒரு கையில் நெருப்பு,
ஒரு கையில் தண்ணிர்
வைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்...
அரசியல் என்பது
இரத்தம் சிந்தாத போர் என்றால்,
போர் என்பது
இரத்தம் சிந்தும் அரசியல்...
அமைதி சமைப்பதைப்
போர் விழுங்குகிறது...
மூன்றாம் உலகப் போர்
என்ன ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும்
என்பது எனக்குத் தெரியாது,
ஆனால் நான்காம் உலகப் போர்
குச்சிகள் மற்றும்
கற்களால் நடத்தப்படும்...
போர் நிச்சயம் முடியும்,
தலைவர்கள் கைகுலுக்குவார்கள்,
ஆனால் அந்தப் போருக்கான விலையை
ஏழைத் தாய்மார்களே சுமப்பார்கள்...
காதலிலும் போரிலும்
"எல்லாம் நியாயமே"
என்று கூறுவார்கள்...
எரிந்த காடு...
மீதமிருக்கும் ஒற்றைப் பறவை
கூடு தேடுகிறது...
போரைப் பற்றிய பயம்
போரைவிட மோசமானது...
நீங்கள் அமைதியை விரும்பினால், போருக்குத் தயாராகுங்கள்..
யுத்தம் முடிந்துவிட்டது,
இப்போது பட்டினி கிடக்கும் மக்களைக் கொல்லுங்கள்...
சமாதானத்தின் போது
அதிக வியர்வை சிந்துங்கள்,
போரின் போது
குறைந்த இரத்தம் சிந்துங்கள்...
யுத்தத்தின் முடிவில்
இரண்டு நாடுகளுமே
வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொள்கின்றன.
இரு நாட்டு மயானங்கள் மட்டுமே
உண்மையைப் பேசுகின்றன...
யுத்தம் என்பது
ஒரு கருப்பு மேகம்,
அது எங்கள் வீட்டின்
கூரையை அல்ல,
இதயத்தையே
கிழித்துப் போட்டது....
ஆண்கள்
போரைத் தொடங்குகிறார்கள்,
ஆனால் பெண்கள்
அதை வாழ்ந்து முடிக்கிறார்கள்...
யுத்தம் வரும்போது,
பணக்காரர்கள்
உணவைச் சேமிக்கிறார்கள்,
ஏழைகள்
சவப்பெட்டிகளைச் சேமிக்கிறார்கள்...
ஒரு போர் வீரன்
தனது வாளை உருக்கும்போது,
அதே நெருப்பில்
ஒரு விவசாயி
தனது கலப்பையைச் செய்கிறான்...
நாகரிகப் போர் என்ற ஒன்று
கிடையாது...