இத என்னால நம்பவே முடியல...
The UnBelievable With Dan Aykroyd
(TV Show)
இத என்னால நம்பவே முடியல...
அப்படிப்பட்ட கதைகள் உலகில் ஏராளம் இருக்கின்றன. உலகில் இருக்கும் ஏராளமாக புராணக் கதைகள் கூட, இந்த அப்படிப்பட்ட வகைதான். அத்தகைய கதைகளை கேட்பதில் ஆர்வம் என்றுமே குறைவதில்லை. அந்த ஆர்வத்திற்கு தீனிபோடும் விதமாக ஹிஸ்டரி சேனலில் "The UnBelievable With Dan Aykroyd" என்ற தொடரை ஒளிபரப்புகிறார்கள். அதில்
உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள், உலகின் மர்மமான இடங்கள், மனிதர்கள், என நம்ப முடியாத, ஆனால் உண்மையான வரலாற்று நிகழ்வுகளை தொடராக காட்டுகிறார்கள்.
மெக்ஸிகோவிலுள்ள பொம்மைகள் நிறைந்த மர்மமான தீவைப் பற்றிய கதை,
1876-ல் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் வானத்திலிருந்து விழுந்த இறைச்சி மழை,
அதேபோல் வானத்திலிருந்து விழுந்த தவளை மழை, மீன் மழை,
வானத்திலிருந்து விழுந்த மனிதன் (The Man Who Fell from the Sky),
18 மாதங்கள் தலை இல்லாமலேயே வாழ்ந்த கோழி (Mike the Headless Chicken),
1919-ல் பாஸ்டன் நகரில் ஒரு பெரிய தொட்டி உடைந்து, சர்க்கரைப்பாகு (Molasses) வெள்ளம் போலப் பாய்ந்து நகரத்தையே அழித்த விசித்திரமான சம்பவம்,
இரண்டு முகங்கள் கொண்ட மனிதன் (The Man with Two Faces),
ஏழு முறை மின்னல் தாக்கியும் உயிர் பிழைத்த ராய் சல்லிவன் என்ற மனிதன்,
தீராத விக்கல் கொண்ட மனிதன் (The Man with the 68-Year Hiccup),
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மார்ஃபா என்ற இடத்தில் பல ஆண்டுகளாக வானத்தில் தோன்றும் விசித்திரமான ஒளிகள் (The Marfa Lights),
டைட்டானிக் கப்பலின் "மர்மமான" நாவல் (The Titanic Prediction),
1980-ல் லூசியானாவில் உள்ள ஒரு ஏரியில் எண்ணெய் கிணறு தோண்டும்போது ஏற்பட்ட லேக் பெக்னியர் பேரழிவு,
இரண்டாம் உலகப் போரின்போது வௌவால்களைப் பயன்படுத்தி குண்டு வீச அமெரிக்கா போட்ட ரகசியத் திட்டம்,
என பல கதைகள் இந்த ஆவணத் தொடரில் இருக்கிறது.
சமீபத்தில் கண்டுபிடிப்பு என்ற பெயரில் ஒரு நாய் நம் மானத்தை கப்பலேற்றிய செய்தி நாம் அறிந்ததே. அதேபோல் உலகின் சில கண்டுபிடிப்புகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. அத்தகைய வினோத கண்டுபிடிப்புகளின் கதைகளும் இந்த தொடரில் இருக்கிறது.
இதில் சொல்லப்படும் கதைகள் அனைத்தும் புராணக் கதைகள் போன்று புளுகு மூட்டை கதையல்ல, கற்பனையும் அல்ல, அனைத்தும் ஆதாரங்களுடன் கூடிய உண்மையான வரலாற்றுச் சம்பவங்கள். வெறும் கதைகளைப் பேசாமல், அறிவியல் பூர்வமாகவும் வரலாற்று ஆதாரங்களோடும் இந்தக் கதைகளைச் சொல்வதால் இது மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது. மொத்தம் மூன்று சீசன்கள் முப்பது எபிசோடுகளை ஹிஸ்டரி டிவி 18 (History TV18) சேனலில் தமிழில் காணலாம். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் கிடைக்கிறது. பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் 'கோஸ்ட்பஸ்டர்ஸ்' (Ghostbusters) புகழ் "டான் அக்ராய்டின்" இந்த தொடரை தொகுத்து வழங்குகிறார். அவரது தனித்துவமான குரலும் கதை சொல்லும் விதமும் இதற்கு கூடுதல் பலமாக இருக்கிறது. டான் அக்ராய்ட் இந்தக் கதைகளைச் சொல்லும்போது, அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அதே போன்ற பொருட்களைக் காட்டி விளக்குகிறார். இது பார்ப்பதற்கு மிகவும் தத்ரூபமாக இருக்கிறது. இரவு வெட்டி விவாதங்களை ஒதுக்கிவிட்டு சேனலை மாற்றுங்கள், இந்த தொடர் உங்களை நிச்சையம் கவரும். பிறகு நீங்களும் சொல்வீர்கள்.
இத என்னால நம்பவே முடியல!...