பாடும் பாலைவனங்கள்...



பாலைவனங்கள் புதிரானவை, மாய தோற்றத்தை ஏற்படுத்துபவை, ஆபத்தானவை, வெப்பமும் குளிரும் நிறைந்தவை, அமைதியானவை என்பது நமக்கு தெரிந்ததே. அவை பாடவும் செய்பவை என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

உலகின் மிகவும் வறண்ட பாலைவனத்தில் ஒரு அமைதியான நாளில், நீங்கள் சாத்தியமற்ற ஒன்றைக் கேட்கலாம் - ஒரு பெரிய இசைக்கருவியைப் போல மணல் முனகுவது. 

சிலியின் அட்டகாமா பாலைவனம், சீனாவின் டன்ஹுவாங் மணல் மேடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் நமீப் பாலைவனம் போன்ற இடங்களின் இதனை கேட்கலாம். அங்கு மணல் வெறுமனே நகர்வது மட்டுமல்லாமல், அது பாடவும் செய்கிறது. 

பாலைவனங்கள் பாடுமா?

உலகெங்கிலும் உள்ள சில பாலைவனங்கள் "பூமிங் டூன்ஸ் (booming dunes)" என்று அழைக்கப்படும் ஒருவித இயற்கை நிகழ்வை உருவாக்குகின்றன, அங்கு உலர்ந்த மணல் துகள்கள் உராய்ந்து அதிர்வுறும் இசை, எதிரொலிக்கும் ஒலிகளை உருவாக்குகின்றன. சிலி முதல் சீனா வரை, இந்த அரிய பாடும் மணல்கள் பூமியின் அமைதியான நிலப்பரப்புகளுக்குள் மறைந்திருக்கும் அசாதாரண இயற்பியலை வெளிப்படுத்துகின்றன. இவை சில நிமிடங்களிலிருந்து மணிக்கணக்காகவும் நிகழ்கின்றன. 

ஒவ்வொரு பாலைவனமும் பாட முடியாது. அங்கிருக்கும் மணல் குன்றுகளில் மணல் துகள்கள் துல்லியமான சில நிலைமைகளை பெற்றிருக்க வேண்டும். (மனிதனுக்கு இருக்கும் குரள் வளம் போல).

அனைத்து மணல் துகள்களும் மென்மையாகவும், வட்டமாகவும், ஒரே அளவிலும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மணல் துகள்களும் சிலிக்கா பூச்சுகளால் மெல்லிய அடுக்குகளை கொண்டிருக்க வேண்டும்.

மணல் மிகவும் வறண்டதாக இருக்க வேண்டும்.

வானிலையும் காற்றோட்டமும் தகுந்தாற்போல இருக்க வேண்டும்.

இவ்வாறு இருந்தால் பாலைவனம் பாடும். 

பூமியில் மிகவும் வறண்ட துருவமற்ற பாலைவனமான சிலியில் இருக்கும் அட்டகாமா பாலைவனம், பனிச்சரிவுகளின் போது ஆழமான, இடி போன்ற பேரெழுச்சிகளை வெளியிடுகிறது. 

சீனாவில் இருக்கும் டன்ஹுவாங் (மிங்ஷா ஷான்) பாலைவனத்தில் மணல்கள் தங்க நிறத்தில் இருக்கும். பட்டுப்பாதை காலத்திலிருந்து புகழ்பெற்ற இந்த பாலைவனத்தை ஒட்டகத்தில் கடந்து சென்ற பலர் புல்லாங்குழல் இசையைப் போன்று மணல்கள் பாடுவதை கேட்டு பதிவு செய்திருக்கின்றனர். இதற்கு "பாடும் மணல் மலை" என்ற பெயரும் இருக்கிறது. 

நபிபீயாவில் இருக்கும்  நமீப் பாலைவனம் பாடும் பாடல், சுற்றளவில் பத்து கிலோ மீட்டர் தூரத்தாற்கு கேட்கும். 

மங்கோலியா நிலபரப்பின் பதைன் ஜரன் பாலைவனம், உலகின் மிக உயரமான மணல் திட்டுகளுக்கு தாயகமாகும், அவற்றில் சில குறைந்த அதிர்வெண்ணில் ஒலி எழுப்புகின்றன. அது டிரம்ஸை ஒத்த பூரிப்பான ஒலியினை கொண்டுள்ளன. 

இவை எல்லாம் பாடும் பாலைவனத்திற்கு சில எடுத்துக்காட்டுகள். இங்கெல்லாம் மணல் ஒரு செங்குத்தான மணல்மேட்டில் சரியும்போது, ​​அதன்துகள்கள் ஒத்திசைவான அலைகளில் நகரும். இந்த தாளம் 70 முதல் 110 டெசிபல் வரையிலான ஒலி அதிர்வெண்களை உருவாக்குகிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். மேலும் இந்த பகுதியில் இருக்கும் மணல்மேடுகள் ஒரு மாபெரும் இசைக்கருவியைப் போல செயல்படுகிறது, கிட்டார் அல்லது டிரம்மின் உடலைப் போலவே அதிர்வுகளைப் பெருக்குகிறது என நம்புகிறார்கள்.



பல நூற்றாண்டுகளாக, பயணிகள் மலையேறும்போது "கர்ஜனை செய்த", "ஆரவாரம் செய்த" அல்லது "பாடிய" மணல் குன்றுகளை பற்றி விவரித்திருக்கின்றனர். புகழ்பெற்ற மார்கோபோலோ கூட தனது பயணகுறிப்பில் இதனை பாலைவன பேய் என குறிப்பிட்டிருக்கிறார். பேய், பூதம், பிசாசு, சாத்தான் என பண்டைய காலத்தில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் கருதிவர, இத்தகைய இசை நிகழ்வு பாலைவனத்தின் உணர்வின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் இன்று, காலநிலை மாற்றம், மாசுபாடு, சுற்றுலா மேம்பாடு மற்றும் நவீன மாற்றத்தால் பாலைவன மணல் வடிவங்கள் மாறி வருகின்றன, செழிப்பான மணற்குன்றுகள் அரிதாகி வருகின்றன. இருப்பினும், பூமியின் சில தொடப்படாத மூலைகளில், பாலைவனம் அதன் சாத்தியமற்ற இசையைத் தொடர்கிறது. மணலுக்கும் ஒரு குரல் இருக்கிறது என்பதை அது நினைவூட்டுகிறது...