இது நெல்லி என்பவளின் கதை...

Nelly's Story

A person with a strong online presence, especially on social media... 

வலுவான ஆன்லைன் இருப்பைக் கொண்ட ஒரு நபர், 
குறிப்பாக சமூக ஊடகங்களில்... 

Influencer

காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கப்போகும் வரை எழுந்தேன், குளித்தேன், தின்றேன், திரிந்தேன், தும்மினேன், தூங்கினேன், புரண்டேன் என ஒரு நாளில் என்னவெல்லாம் செய்தேன் என்பதை சமூக ஊடகங்களில் பதிவிட்டால் நீங்களும் இன்புளுயன்சர் ஆகலாம். காசு பார்க்கலாம். ஒன்றிற்கும் உதவாத இடுப்பு வலி தைல விளம்பரத்திற்கு அம்பாசிட்டர் ஆகலாம். அதில் கொஞ்சம் பைத்தியக் காரத்தனத்தை சேர்த்தால் நீங்கள்தான் நம்பர் ஒன் இன்புளுயன்சர். இதெல்லாம் எந்தவகை என ஆராய்ந்தால் மற்றவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என பின்தொடரும் ஒருவித மனநலம் பாதித்த சமூக சூழ்நிலையைச் சேரும். இந்த குறும்படம் அத்தகைய போக்கிற்கு செருப்படி கொடுத்தார் போல இருக்கிறது. 

தனது ஒன்பதாவது பிறந்தநாளை புத்தாடை, கேக், பலூன், அலங்காரத்துடன் கொண்டாட நெல்லி என்பவள் தயாராகிறாள். அதனை, அவளது தாய் படம் பிடித்து இன்டாகிராமில் நேரடியாக பதிவிட்டுக் கொண்டிருக்கிறாள். கணவனிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வரும் அவளது தாய் ஒரு இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சர். தனது தாயின் இந்த செயலை வெறுக்கும் நெல்லி, அவளது செல்போனை பிடுங்கி வீட்டிற்குள் ஓடி மறைந்து போக்கு காட்டுகிறாள். ஒரு கட்டத்தில் தன் தாயை வீட்டிலிருந்து வெளியேற்றி கதவுகளை முடி விடுகிறாள். 'கதவைத் திற நெல்லி, என கெஞ்சுவதை படம்பிடித்து தாயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுகிறாள். பிறந்த நாளுக்கு தனது தந்தையும் தாயும் உடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் அவ்வாறு செய்கிறாள். 

வீடு பூட்டிய நிலையில் பக்கத்துவீட்டாரின் உதவியுடன் அவளது தாய் பிரிந்துபோன தன் கணவனை அழைக்கிறாள். அவன் மறுக்கவே, கதவை திறக்க ஒருவனை அழைக்கிறாள். காரணம் தெரிந்த அவனும் கைவிடவே, உள்ளூர் காவல்துறை அதிகாரி அங்கு வருகிறார். வெளியில் நிகழும் அனைத்தையும் நெல்லி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறாள். அதனை காவல் அதிகாரியின் செல்போனை வாங்கி நெல்லியின் தாய் ஒவ்வொன்றாக பார்க்கிறாள். அந்த பக்கத்தில் நெல்லி, தற்கொலைக்கு முயல்வதை போல ஒரு பதிவு வருகிறது. காவல்துறை அதிகாரி ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கிறார். அவர்களது வீடு ஒரு கலவரகளமாக மாற, கதவு திறக்கப்பட்டதா? நெல்லி என்னவானாள்? என்பதுதான் குறும்படத்தின் மீதிக்கதை. 



செல்லுள்ளார்களில் (செல் வைத்திருப்பவர்கள்) சோசியல் மீடியாக்களை உபயோகப்படுத்தாதவர்கள் எவரும் இல்லை எனலாம். அதில் ஸ்டேடஸ், ஸ்டோரி, போஸ்ட் என எதையாதவது பதிவிடாதவர்களே இல்லையே எனலாம். குறைந்த பட்சம் ஒரு சாமி படத்தையாவது தினந்தோரும்
வாட்ஸ்சப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தன்னிருப்பை காட்டுபவர்கள் இருக்கிறார்கள். தனக்கு தெரிந்தவர்களுக்கு எதாவது சொல்ல வேண்டும், அல்லது நம்மை பார்க்க வேண்டும், விரும்ப வேண்டும், அதனைக் கொண்டு உரையாட வேண்டும். அதேபோல் அடுத்தவர்களும் என்ன செய்கிறார்கள் என தெரிந்து கொள்ள வேண்டும், என்ற நிலை பரவியிருக்கிறது. இந்த மனநிலை ஏன் என புரியவில்லை. இதெல்லாம் வெறும் பொழுதுபோக்கு என்றோடு முடிந்தால் எந்த கவலையும் இல்லை. ஆனால், இந்த நிலைக்காக உன்னதத்தை இழந்துவிடுகிறோம், உறவுகளை உதரிவிடுகிறோம். அருகிலிருப்பவைகளின் அருமை பெருமைகளை அறிந்துகொள்ளாமல் போகிறோம். ஒரு நாளில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் வெட்டியாக கொன்றுவிடுகிறோம். "காஃபி வித் கும்ஸ்" என்ற பதிவில் காஃபியின் சுவையும் வாசனையும் இருக்கப் போவதில்லை. அவையெல்லாம் பல பிக்ஷல் மற்றும் யூனிகோடுகளின் சித்து விளையாட்டு என தெரிந்தே அதை பதிவிடுகிறோம் அல்லது லைக்குகிறோம். ஒன்றிற்கும் உதவாத சோசியல் மீடியாக்களில் மூழ்யிருக்கும் இதுபோன்ற செயலினால் குடும்ப உறவுகள் என்னவாகிறது? அன்பு எங்கு போகிறது? அடுத்த தலைமுறை எவ்வாறு பாதிக்கிறது? என்பதையே இந்த குறும்படம் காட்டுகிறது.

நெல்லி என்ன செய்வாள்? பூட்டிய கதவு திறக்குமா? அடுத்தது என்னவாகும்? என அவளது தாய்க்கு இருக்கும் படபடப்பு குறும்படத்தை பார்க்கும் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. குறும்படத்தின் பலமும் அதுதான். தேர்ந்த நடிப்பும், காட்சியமைப்பும், பின்னணி சப்தமும் இயல்பாக இருக்கிறது. பள்ளிக்கூட பாடதிட்டத்தில் வைக்கும் அளவிற்கு இந்த குறும்படம் இருக்கிறது. 

Nellys Story
Directed by - Jonas Steinacker
Written by - Jonas Steinacker
D.O.P -  Konstantin Johann
Country - Austria
Language - German
Year - 2022

இன்றைய உலகின் மனிதத்திற்கு தேவை, நேர்மையான நட்பு, கலங்கமில்லாத காதல், பரிசுத்தமான அன்பு, விசாலமான பொதுநலம். இதை சோசியல் மீடியாக்களில் தேடினால் நிச்சையம் கிடைக்காது.  இந்த குறும்படம் ஆழமாக உணர்த்துவதும் அதுதான்...