சேகரிப்பவர்களுடன் நான்...

The Gleaners and I

க்ளீனர்ஸ் (Gleaners) என்பவர்கள் யாராக இருக்கும். ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்காக இருக்குமோ? என AI - ல் அர்த்தம் தேடினால் "பிரதான அறுவடை முடிந்த பிறகு, வயலில் இருந்து கைவிடப்பட்ட மீதமுள்ள பயிர்களை (தானியங்கள் அல்லது பழங்கள் போன்றவை) சேகரிப்பவர்கள்" என பதில் இருக்கிறது. சரி!. இவர்கள் அதனை சேகரித்து என்ன செய்யப் போகிறார்கள்?.

இந்த உலகில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. சமூகம் தூக்கியெறியும் உணவுகளைத் தேடி உயிர்வாழும் விளிம்புநிலை மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அவைகள் போய்ச் சேரும். இன்றைய நுகர்வோர் உலகில் வேளாண்மை பொருட்கள் மட்டுமல்லாது, ஆடை அணிகலன்கள் உட்பட மேல்தட்டு மக்கள் பயன்படுத்தும் உபயோகப் பொருட்கள் கூட அடுத்தநிலை மக்களுக்கு தேவையானதாக இருக்கிறது. ஒட்டும் பசை விளம்பரத்தில் "ஓ எஸ், எல்லாத்தையும் ஒட்டிட்டேன்" என சொல்லும் பாட்டி இதற்கு உதாரணம். மேலும் சுபகாரியங்கள், திருவிழாக்கள் மற்றும் உணவகங்களில் மீதமாகும் உணவுகளை சேகரித்து இயலாதவர்களுக்கு கொடுக்கும் அமைப்புகளும், தன்னார்வலர்களும் இந்த க்ளீனர்ஸ் வரையரைக்குள் வருகிறார்கள். இந்த டாகுமெண்டரி அத்தகைய க்ளீனர்ஸ்களைப் பற்றியதே. 

இந்த டாகுமெண்டரியின் இயக்குனர் "வர்தா" பிரான்ஸ் நாட்டின் கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் பயணம் செய்கிறார். தேவை காரணமாகவோ அல்லது கலை அல்லது மற்ற ஏதேனும் காரணங்களுக்காகவோ, அறுவடைக்குப் பிறகு வயலில் எஞ்சியிருக்கும் பயிர்கள் மற்றும் தூக்கியெறியப்பட்ட உணவு மற்றும் பிற பொருட்களை சேகரிக்கும் பல்வேறு வகையான சேகரிப்பாளர்களை அவர் சந்திக்கிறார். பொழுதுபோக்கிற்காக சேகரிப்பு கலாச்சாரத்தின் எல்லையில் உள்ள சிலரோடு உரையாடுகிறார். சேகரிக்கும் பொருட்கள் அனைத்தும் என்னவாகிறது? என ஆவணப்படுத்துகிறார். 

விவசாயிகள், விற்பனையாளர்கள், நில உரிமையாளர்கள், ஒரு நட்சத்திர சமையற்காரர், தனது மூதாதையர்கள் சேகரிப்பாளர்களாக இருந்ததால் மன அமைதித்காக தானும் அதனைத் தொடரும் பெரும் பணக்காரர். பிரெஞ்சு சட்டங்களைப் பற்றி விவாதிக்கும் வழக்கறிஞர்கள், முதுகலைப் பட்டம் பெற்ற மற்றும் குடியேறியவர்களுக்கு பிரெஞ்சு மொழியைக் கற்பிக்கும் அலைன் என்ற நகர்ப்புற சேகரிப்பாளர், மனோதத்துவ ஆய்வாளர் ஜீன் லாப்லாஞ்ச், உடலியல் நிபுணர் மற்றும் காலவரிசை புகைப்படக் கலைஞர் எட்டியென்-ஜூல்ஸ் மேரியின் கொள்ளுப் பேரன் இவர்களின் நேர்காணல் இந்த டாகுமெண்டரியில் நிறைந்திருக்கிறது. வர்தா ஒரு வயலில் கண்டுபிடிக்கும் ஏராளமான இதய வடிவிலான உருளைக்கிழங்குகளும்,  தெருவில் அவள் கண்டுபிடிக்கும் கைகள் இல்லாத கடிகாரங்களும், அவைகள் என்னவாகிறது என்பதும் சுவாரசியமூட்டுவதாக இருக்கிறது.



இந்த டாகுமெண்டரி Handy Cam என சொல்லக்கூடிய கையடக்க கேமாராவைக் கொண்டு பெரும்பாலும் எடுக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டம் எதுவுமில்லாமல் கதைசொல்லியின் கண்ணோட்டத்தோடு அது நகர்கிறது. இயக்குனர் வர்தாவுடன் நாமும் பயணிக்கும் அனுபவத்தை தருகிறது. டாகுமெண்டரியில் சிலர் தெருவில் உருளைக்கிழங்கு, ஆப்பிள், வோக்கோசு மற்றும் ஆரஞ்சுகளை சேகரிக்கிறார்கள். அதில் இன்னொரு பெண்ணும் சேகரிக்கிறாள்; அது நான்தான்" என இயக்குனர் கூறுகிறார். ஆம் அழகான விசயங்களை அவர் சேகரித்திருக்கிறார். 

Les glaneurs et la glaneuse
The Gleaners and I 
Directed By - Agnès Varda
Country - France
Language - French
Year - 2000

இந்த டாகுமெண்டரி நமது நுகர்வோர் உலகின் முரண்பாடுகள் குறித்த பிரதிபலிப்பாகும். நாம் தேவைக்கு அதிகமாக பொருட்களை பயன்படுத்துகிறோம். தேவையே இல்லாத பொருட்களையும், தேவையே தெரியாத பொருட்களையும் பயன்படுத்தி குப்பைகளாக தூக்கியெறிகிறோம். நாம் குப்பை சூழ் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே அந்த முரண்பாடு. 

டாகுமெண்டரியில் ஓரிடத்தில் லூயிஸ் போன்ஸ் என்பவர் இவ்வாறு கூறுவார்,

குப்பை என்பது "சாத்தியக்கூறுகளின் கொத்து" 

குப்பை சூழ் உலகத்தில் சில சாத்தியங்களை தேடுபவர்களின் கதைதான் இந்த க்ளீனர்ஸ் அண்ட் ஐ...