நிலவளம்...
வானுயர்ந்த கட்டிடங்கள், பிரம்மாண்ட தொழிற்சாலைகள், பொழுதுபோக்கு கூடங்கள், துறைமுகங்கள், போக்குவரத்து நிலையங்கள் அதனை சார்ந்தவைகள் என அனைத்தும் செறிந்த பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரத்தை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தனி ஒருவனே உருவாக்கியிருக்க வேண்டும் (தெரிந்தோ, தெரியாமலோ). அவனை சார்ந்த குடும்பமும், உறவுகளும், சமூகமும் அதனை விரிவுபடுத்தியிருக்க வேண்டும். இன்று செழித்து விளையும் விவசாய நிலங்களும் அவ்வாறே உருவாகியிருக்க வேண்டும். மனித நாகரீகத்தின் கதையும் அதுவே. அந்தகைய கதையை மண்ணின் வளர்ச்சி (Growth of the Soil) அல்லது நிலவளம் என சொல்லலாம். அதைத்தான் நோபல் பரிசுபெற்ற இந்த நாவலும் பேசுகிறது...
திடல்களைத் தாண்டி காட்டுக்குள் ஓடும் நீண்ட நெடிய பாதையைப் பாதையாக்கிச் செப்பனிட்டது யார்?
யாரோ ஒரு மனிதன்.
இப்படித்தான் நாவல் தொடங்குகிறது.
நாவலின் கதை பத்தொன்பதாம் நுற்றாண்டின் தொடங்கத்தில் நடக்கிறது. கதைக்களம் நார்வே. "ஐசக்" என்பவன் நாயகனாக இருக்கிறான். ஐசக் கிராமத்தான், படிப்பறிவில்லாதவன், காட்டான் (நம் பார்வைக்கு). தனது கிராமத்திலிருந்து பல மைல்கள் தூரத்திலிருக்கும் ஒரு காட்டில் சிறிய குடிசையை போடுகிறான். அங்கிருக்கும் மரங்களை வெட்டி, தேவைக்கு அதிகமானதை நகரத்தில் விற்று, ஆடு மாடுகளை வாங்குகிறான். அவற்றை பராமரித்து, பாதுகாத்து, பால் கறந்து விற்க ஒரு பெண் தேவையென நினைக்கிறான். காட்டில் தனியாக இருக்கும் அவனை நம்பி எந்த பெண்ணும் வராத நிலையில் "இங்கர்" என்ற உதடுபிளந்த பெண்மட்டும் சம்மதிக்கிறாள். இருவரும் இணைந்து கணக்கில்லாமல் உழைத்து காட்டை சீராக்கி, கால்நடைகளை பெருக்கி, உருளைக் கிழங்கை பயிரிட்டு, குடிசை வீட்டை மர வீடாக மாற்றுகின்றனர். அவர்களது இடம் ஒரு பண்ணையாக உருவாக அதற்கு "செஸ்ஸன்ரா" என பெயர் வைக்கின்றனர். நாளுக்கு நாள் செஸ்ஸன்ரா பண்ணை வளர்ந்து வர, ஐசக்கிற்கும் இங்கருக்கும் காதலும் வளர்கிறது. அதற்கு சாட்சியாக இரண்டு குழந்தைகளும் பிறக்கிறது. அவர்களது பண்ணையைச் சுற்றி மேலும் சில பண்ணைகள் தொடங்கப் பெறுகிறது. இங்கருக்கு மூன்றாவதாக ஒரு குழந்தை அவளைப் போலவே உதடு பிளந்த நிலையில் பிறக்கிறது. அதனை யாருக்கும் தெரியாமல் இங்கர் கொன்று விட , சில காலங்களுக்கு பிறகு "ஓலைன்" என்பவளால் அது வெளி உலகிற்கு தெரியவருகிறது. இங்கர் சிறையில் அடைக்கப்படுகிறாள், அங்கு அவளுக்கு பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. சிறையில் அவள் படிக்கவும், தையல் வேலை செய்யவும் கற்றுக் கொள்கிறாள். தனது பிளந்த உதட்டை அறுவை சிகிச்சை செய்து சரி செய்து கொள்கிறாள். நகரத்தாரைப் போல நாகரீகமாக மாறுகிறாள். ஐசக் உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாது தொடர்கிறான். புதிதாக வண்டியும் குதிரையும் வங்குகிறான். நாட்கள் நகருகிறது. பழைய கிராம அதிகாரி "கெய்சர்" என்பவரின் உதவியால் தண்டனை காலம் குறைந்து இங்கர் விடுதலையாகிறாள்.
குடும்ப நபர்கள் மீண்டும் இணைந்த நிலையில் பிள்ளைகள் வளர்ந்து பெரியவராகிறார்கள். பண்ணையைச் சுற்றி பல கிராமங்கள் வளர்கின்றன. தந்தி கருவி தொழில்நுட்பம் தொடங்கப் பெறுகிது. அவ்விடத்தில் காப்பர் கனிமம் இருப்பதாக கண்டறியப்பட்டு சுங்கத் தொழில் வளர்ச்சியடைகிறது. நகர வாழ்வு மெல்ல எட்டிப் பார்க்காறது. அவற்றிற்கிடையே ஐசக்கும் இங்கரும் அவர்களது குழந்தைகளும் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதே நாவலின் கதை.
இது, பல நூறு அண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு தனிமனிதனின் கதை அல்ல. ஒரு சமுகத்தின் கதை. நாகரீகம் வளர்ந்த கதை. இயற்கையோடு இணைந்தவர்களை நகரம் தின்ற கதை, தொழில்நுட்பம் வளர்ந்த கதை. ஆதி மனிதனின் கதை, காலச் சக்கரத்தில் பின்னோக்கி பயனிக்கும் அனுபத்தை தரும் கதை, கடின உழைப்பு பலனைத் தரும் என்ற கருப்பொருள் கொண்ட கதை, நாமெல்லாம் வாழ ஏங்கும் கதை, மண்ணின் கதை.
நிலவளம்
நட்ஹாம்சன்
தமிழில்- க.நா.சு
அன்னம் பதிப்பகம்
பசி என்ற நாவலின் மூலம் பெரிதும் அறியப்பட்ட "நட்ஹாம்சன்" எழுதிய இந்த நாவலை, "க.நா.சு" "நிலவளம்" என்ற பெயரில் சுவை பட மொழி பெயர்த்திருக்கிறார். நட்ஹாம்சன் இயற்கையை நேசித்தவர். அவருக்கு தொழில்மயமாக்கப்பட்ட சமூகம் அல்லது நவீனத்துவத்துடன் முரண்பாடு இருந்தது. மனிதனின் நிறைவு மண்ணைச் சார்ந்தது என நம்பிக்கை கொண்டிருந்தார். அதை ஐசக் என்ற கதாபாத்திரத்தின் வழியாக நாவலில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நாவல் புதிய யதார்த்தவாதத்தின் பாணியில் எழுதப்பட்டுள்ளது. எளிய வாசிப்பை கொண்டது. சில புத்தகங்களை வாசிக்கும்போது அது கதைக்களத்திற்கு இழுத்துச் செல்லும், கதை முடிந்தவுடன் அங்கேயே விட்டுச் செல்லும். இந்த புத்தகத்தை வாசித்த போது அப்படித்தான் இருந்தது.