இஃப்தார் சோடா ...


ல்லோரது வாழ்க்கையிலும் சிறுவயது நினைவுகள் பசுமையாக இருக்கும். அந்த வயதில் கடவுள், மதம், அரசியல், சமூக சூழல் என எந்தவித புரிதலும் இருக்காது. தனிப்பட்ட முறையில் அன்பு, நட்பு காதல், காமம் பற்றிய அறிதலும் இருக்காது. ஒருவேளை அவையெல்லாம் இருந்திருந்தாலும் அவற்றிற்கிடையேயான வேறுபாடுகளை கண்டறிய போராட வேண்டியிருக்கும். இந்த திரைப்படத்தின் நயகனான சிறுவன் "ஆடெம்" அதைத்தான் செய்கிறான். உங்களுக்கும் அத்தகைய சிறுவயது அனுபவம் இருந்தால் என்ற இந்த துருக்கி நாட்டு திரைப்படம் பிடித்து போகும். 

1970 ஆம் வருடம் துருக்கியின் "முக்லா" மாகாணத்தில் "ஏஜியன்" கிராமத்தில் ஆடெம் என்ற சிறுவன் தன் பெற்றோருடன் வசித்து வருகிறான். தனது ஆரம்ப கால பள்ளிப்படிப்பை முடிக்கும் அவன் கோடை விடுமுறை நாட்களில் "கெமல்" என்பவரின் சோடா கடையில் வேலை பார்க்க முடிவு செய்கிறான். டிரை சைக்கிளில் ஆடெமின் பள்ளி மட்டுமல்லாது அந்த கிராமம் முழுவதும் சோடா விற்கும் கெமாலை போல ஆகவேண்டும் என்பது அவனது கனவாக இருக்கிறது. அந்த விடுமுறை நாட்களில் ரமலான் நோன்பு வைக்கும் பருவமும் வருகிறது. சிறுவர்கள்களுக்கு ரமலான் நோன்பு கட்டாயம் இல்லை என்றபோதிலும் பெரியவர்களைப் போல அதனை கடைபிடிக்க ஆடெம் முயற்சி செய்கிறான். அதனை யாருக்கும் தெரியப்படுத்தாமல் இரகசியமாக செய்து வருகிறான். பட்டினி இருப்பது அவனது சோடா விற்கும் வேலைக்கு சிக்கலாக அமைகிறது. தனது கனவு வேலையையும், ரமலான் நோன்பையும், 61 விடுமுறை நாட்களையும் அவன் எவ்வாறு கழித்தான் என்பதே இந்த திரைப்படம்.  



1970-ல் துருக்கியின் ஏஜியன் கிராமம், தெருக்கள், வீடுகள், கடைகள், பள்ளிவாசல், புகையிலை வயல்கள், விவசாய குடும்பங்கள், அவர்களது நடைமுறைகள், தாலாட்டும் பழைய இசை, என திறந்தவெளி திரைப்படமாக இருக்கிறது. இந்த திரைப்படம் எழுபதுகளில் துருக்கியில் நிகழ்ந்த வலது மற்றும் இடதுசாரி அரசியலையும், மத நிகழ்வுகளையும், மையமாக கொண்டிருக்கிறது. நாட்டின் நிலையை சிறுவனின் விடுமுறை நாட்களோடு சுற்றி காட்டுவதோடு (சோடா விற்கும் டிரை சைக்கிளில்), மனிதர்கள் வெவ்வேறாக இருந்தாலும் அந்த காலத்தில் நட்போடும், அன்போடும், மனம் மகிழ்வோடும், கடவுளின் பூர்ண ஆசியுடன் வாழ்ந்தார்கள் என்பதை அழகாக விவரிக்கிறது. இனம், இடம், மதம், வெவ்வோறு மனிதர்கள், அவர்களது கலாச்சாரம் என இருந்தாலும் அதெல்லாம் ஒரு காலம் என பார்க்கும் நமது சிறுவயது நினைவுகளையும் கிளறுகிறது.

எதற்கெடுத்தாலும் அதெல்லாம் ஒரு காலம் என சிலர் அங்கலாய்ப்பதை பார்க்கலாம். அதற்கு காரணமும் இருக்கிறது. ஒரு காலத்தில் அனைத்தும் நன்றாக இருந்தது. 
நல்ல காற்று
நல்ல நீர்
நல்ல காஃபி
நல்ல பூரி மசால்
நல்ல புத்தகம்
நல்ல சினிமா
நல்ல பாட்டு
என பலவற்றோடு
நல்ல மனிதர்களும் அவர்களிடம்
நல்ல மனங்களும் இருந்தது. தற்போது மதம் கூட அந்த காலத்தைப் போல அவ்வளவு நம்பிக்கை கொண்டதாக இல்லை. அதெல்லாம் ஒரு காலம் என்பது 
நினைவுகள், 
ஏக்கம், 
அது ஒரு உணர்வு, 
டைம் டிராவலில் பின்நோக்கி பயணிப்பது மற்றும் 
அழுகிக் கொண்டிருக்கும் பழத்தின் எஞ்சிய உயிர்ப்பு பகுதியைப் போன்றது.

இந்த திரைப்படம் பழைய துருக்கியைச் சேர்ந்த கதையைச் சொன்ன போதிலும், அதன் மொழி, இசை, நடிப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றில் புதுமையுடன் இருக்கிறது. காட்சியமைப்பு பற்றி நிச்சையம் சொல்ல வேண்டும். கேமரா கண்களுடன் வண்ணங்கள் மற்றும் ஒளிக்கு பின்னால் ஓடியதால் என்னவோ, சில காட்சிகளை நிறுத்தி நிதானமாக ரசிக்கும்படியாக இருக்கிறது. மிகையாக சொல்லவேண்டுமானால் துருக்கியை தலைமையாகக் கொண்ட பழங்கால ஓட்டோமன் பேரரசில் "சுலைமான் தி மக்னிஃபிசென்ட், அப்தல்ஹாக் ஹமித், மற்றும் தத்தே கோர்குட்" போன்ற பல கவிஞர்கள் இருந்தனர். சிக்கலான மற்றும் தனித்துவமான அவர்களது கவிதைகளுக்கு ஒப்பாக திரைப்படத்தின் காட்சிகள் இருக்கிறது. 

சிறுவன் ஆடெமும் சோடா வியாபாரி கெமாலும் வெகு இயல்பாக தங்களது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். பழங்கால துருக்கியின் இசை மனதை மயக்கிறது. சிறுவன் பசியால் மயங்கிவிழும்போதெல்லாம் மாறும் கார்டூன் காட்சிகள் அழுத்தத்தை தருகின்றது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக தொடங்கி ஒரு சிறார் திரைப்படம் போல திரைக்கதையின் பயணம் நேர்கோட்டில் சென்று கொண்டிருக்க, சில நிமிடங்கள் அதன் தடம் மாறுகிறது. இறுதியில் கண்ணீரை வரவழைக்கிறது. அன்பு ஒன்றே பிரதானம் என இதயத்திலிருந்து இந்த திரைப்படம் கதை சொல்கிறது 

Iftarlik Gazoz
(Iftar Soda or 61 days)
Directed by - Yuksel Aksu
Written by - Yuksel Aksu
Cinematography - Mirsad Herovic
Music by - Evanthia Reboutsika
Country - Turkey
Language - Turkish 
Year - 2016

நீண்ட நாட்களுக்குபின் திருப்திகரமான ஒரு திரைப்படத்தை பார்க்க முடிந்தது. இன்றைய நிலவரப்படி கடவுள்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களை கைவிட்டுவிட்டனர். மதமும், அரசியலும் வியபாரமாகிவிட்டது. உறவுகள் சிதறி, சின்னாபின்னமாக, எல்லா இடங்களிலும் ஒருவித பைத்தியக்காரத்தனம் மேலோங்கி இருக்கிறது. மனித மதிப்புகள் இருப்பிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டன. இத்தகைய சூல்நிலையில் இதுபோன்ற  திரைப்படங்கள் நிச்சையம் நமக்கு தேவை எனப்படுகிறது...