பிரைமாடோ...
வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் ஜன்னல் தோட்டம் என, தேவையான பூக்கள், கீரைகள், காய்கறிகள், மூலிகைகள், பழங்களை தாமே விளைவிக்கும் பண்பு அதிகமாகியிருக்கிறது. நெருக்கமான அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட ஒரு புதினா செடியையோ, டேபிள் ரோஸையோ, மணி பிளான்டையோ காணும்போது நிறைவாக இருக்கிறது. நம் சூழ்நிலை எதுவாயினும் நம்மைச் சுற்றி இயற்கையை இழுத்துக்கொள்ள தயாராக இருப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இந்த நேரத்தில் தனது ஸ்கூட்டியின் முன்பக்கத்தில் செடி வளர்க்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த "ரீட்டா மேரி" என்ற மீன் விற்பவரும், உலகம் அழிந்த நிலையில் ஒரு விதையை உயிர்ப்பிக்க போராடும் "Pumzi" என்ற குறும்படத்தின் நாயகியும் நினைவுக்கு வருகிறார்கள். இவர்களைப் போன்றவர்களுக்கு பிரைமாடோ செடி நிச்சையம் சுவாரசியத்தை கொடுக்கும்...
அது என்ன பிரைமாடோ செடி
Brinjal - Bri
Tomato - mato
Brimato
கத்தரிக்காயும் தக்காளியும் ஒன்றாக காய்க்கும் செடி.
ஒரே செடியில் கத்தரிக்காயையும், தக்காளியையும் விளைவிக்க முடியுமா?
அவ்வாறு விளைவித்தால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா. வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தின் (IIVR) விஞ்ஞானிகள் இதை சாத்தியமாக்கியுள்ளனர்.
இரட்டை அல்லது பல ஒட்டுதல் என்பது தோட்டக்கலையில் இருக்கும் தாவரவியல் செயல்முறையாகும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாரிசுகளை (இளம் தளிர்கள்) இத்தகைய முறையில் ஒட்டுவதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட காய்கறிகளை ஒரே செடியில் இருந்து அறுவடை செய்யயலாம். இரண்டு வண்ணங்களில் பூக்கும் செம்பருத்திச் செடி இதற்கு உதாரணம்.
மழைக்காலங்களில் தக்காளி சாகுபடி பாதிக்கப்படுவதால் அதற்கு தீர்வுகான நினைத்து யோசித்ததே இந்த பிரைமாடோ. கிட்டத்தட்ட 25 வகை தக்காளி செடியை IC111056 என்ற ஒருவகை கத்தரியுடன் இணைத்து இந்திய காய்கறி ஆராய்ச்சி கழகத்தினர் 2017 ஆம் ஆண்டே இந்த செடியை உருவாக்கிவிட்டனர். முதலில் அவர்கள் சோதனை செய்து பிறகு 180 உள்ளூர் விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்து இதனை வாரணாசியிலிருந்து வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
நன்கு வளர்ந்த ஒரு பிரைமடோ செடி 4.5 கிலோ தக்காளியையும், 3.5 கிலோ கத்தரிக்காயையும், நான்கு அல்லது ஐந்துமுறை மகசூலாக தருகிறது. ஒரு ஹெக்டேருக்கு 37.5 டன் தக்காளியும், 35.7 டன் கத்தரியும் கிடைக்குமென நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுதல் முறை என்பதால் தற்போது நாற்றுகளாக இந்திய காய்கறி ஆராய்ச்சி கழகத்தின் மூலம் குறைவான அளவே இந்த செடி விற்கப்படுகிறது. கூடிய விரைவில் இவை நம் மாடித் தோட்டத்தையும் அலங்கரிங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தக்காளி ரசம் வைத்து, எண்ணெய் கத்தரிக்காய் செய்து சுவைக்கலாம். ஏற்கனவே மண்ணிற்கு கீழே வேரில் உருளைக் கிழங்கும், மேலே செடியில் தக்காளியும் காய்க்கும் பொமாட்டோ (Pomato) செடி இருப்பது குறிப்பிடத்தக்கது...