சஹீர் - பாவ்லோ கொய்லோ...
புகழ்பெற்ற எழுத்தாளர் பாவ்லோ கொய்லோவின் நாவல் படைப்பு இந்த சஹீர். இந்த நாவலில் ஒரு எழுத்தாளரின் மனைவி காணாமல் போகிறார். அப்பாடா! என ஏகப் பெருமூச்சசுவிட்டு ஜனகராஜ் போல துள்ளிக்குதித்து கொண்டாடாமல், அவரைத் தேடி அந்த எழுத்தாளர் பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்காவில் தொடங்கி, ஸ்பெயின், பிரான்ஸ், குரோஷியா வழியாக மத்திய ஆசியாவின் ஒரு பள்ளத்தாக்கு வரை அவரது பயணம் நீள்கிறது. அந்தப் பயணத்தின் முடிவில், அவர் மனைவியை மட்டுமல்லாமல், வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய உண்மையையும் கண்டறிகிறார். Always பாவ்லோ கொய்லோ தேடல் style. இந்த கதை அவரது சொந்தக்கதை எனவும் சொல்வதுண்டு. மனைவி மீது கொண்ட காதலே இதில் பிரதானம்.
இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.
என மனைவியை போற்றுவதே நாவலின் முடிவு.
'சஹீர்' என்பதற்கு அரபு மொழியில், பார்வைக்குப் புலப்படுவது, தற்போது நிலவுவது, கவனிக்கப்படாமல் போவதற்கான சாத்தியமற்றது என்று அர்த்தம். சஹீர் ஒரு பொருளாகவோ அல்லது ஒரு நபராகவோ இருக்கலாம். நாம் அதனோடு/அவரோடு தொடர்பு கொண்ட நேரத்திலிருந்து, அது/அவர் மெல்ல நம்முடைய சிந்தனையை ஆட்கொள்ளும்/அட்கொள்வார். இறுதியில், நம்மால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். சஹீரை ஒரு புனிதமான நிலை என்றோ அல்லது ஒரு பைத்தியக்கார நிலை என்றோ நாம் கருதலாம்.
மொழிபெயர்ப்பில் பாவ்லோ கொய்லோவின் எல்லா படைப்புகளும் தமிழில் வெளிவந்துள்ளது. இந்த நாவலும் தற்போது கிடைக்க, வாசித்து லயித்த நாவலின் சில வரிகள் மயிலிறகு பக்கங்களாய்...
நேற்றைவிட அதிகமாக,
நாளைய தினத்தைவிடக் குறைவாக!
நான் உன்னை காதலிக்கிறேன்...
முழுமையான சுதந்திரம்
என்ற ஒன்று கிடையாது...
இரண்டு வகையான உலகங்கள் இருக்கின்றன:
ஒன்று, நம்முடைய கனவுலகம்,
மற்றொன்று நிஜவுலகம்...
எல்லாம் அதனதன் இடத்தில் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்...
அடையாளம் இடப்பட்டச் சீட்டுகளை
வைத்துக் கொண்டு
யாரும் விளையாடுவதில்லை...
நீங்கள் யாராக இருந்தீர்களோ
அப்படி இருப்பதை நிறுத்திவிட்டு, நீங்கள் யாராக இருக்கிறீர்களோ
அவராக மாறுங்கள்..
நாம் முன்னேறத் தவறுவதற்குக்
காரணமான ஒரு நிகழ்வு
நம் வாழ்வில் எப்போதும் இருக்கும்...
தனியாக இருப்பதைவிடப்
பசியோடு இருப்பது மேல்...
இறுதியில் நாம்
இறக்கிறோம் என்றால்,
நாம் ஏன் பிறக்கிறோம்?...
நாம் ஒரு குறிப்பிட்ட நபரையோ
அல்லது பொருளையோ
விரும்புவதாகச் சொல்லிக் கொண்டே
நம்முடைய எஞ்சிய வாழ்நாள் முழுவதையும்
செலவிடலாம்...
எதிர்பாராதது நிகழ்கிறது,
நாம் அதற்கு எப்போதும்
தயாராக இருப்பதில்லை...