ஒரு காஃபி விளம்பரத்தில் உணர்ந்துகொண்ட வை...

விளம்பரங்கள் பொய்யானவை, நம்பகத்தன்மையற்றவை, தேவையில்லாதவை, வலுக்கட்டாயமாக நம்மை வந்தடைபவை. பண விரயத்தையும், குப்பைகளையும் ஏற்படுத்துபவை. அத்தனை வை களும் 100 சதவீதம் உண்மையான வை. அவற்றுள் சில ரசிக்கத் தகுந்த வை. அவ்வாறு சமீபத்தில் ரசித்த காஃபி விளம்பரத்தைப் பற்றி எழுதி வை எனத் தோன்றியது. 

இந்த விளம்பரத்தில் பெண் ஒருத்தி ஒரு நாளின் நேரத்தைப் பற்றி  சொல்லுகிறாள். 

டைம்... அது எங்கு போகிறது?...

Office, Presentation, Calls நமது எட்டுமணி நாற்பது நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது... 

லட்சியப் பாதையின் வழியில் தினந்தோறும் ஒன்னரை மணிநேரம் டிராபிக்கை சந்திக்கிறோம்... 

மற்றவர்களின் வாழ்கைக்குள் Scroll  பண்ணிபண்ணி இரண்டு மணிநேரம் இருபது நிமிடம் காணமல் போய்விடுகிறது... 

மிச்சம் இருப்பதோ வெறும் அறுபது நிமிடம். 

உங்களுக்கு எது முக்கியமோ அதற்காக.

என தான் குடிக்கும் காஃபியைப் பற்றி விளம்புகிறாள். 

டைம் எப்போது கிடைக்கிறதோ, எவ்வளவு கிடைக்கிறதோ, Make the most of it.

என அவள் முடிக்கிறாள். 



இந்த விளம்பரம் இன்றைக்கு தேவையான, முக்கியமான விசயத்தை விவரிக்கிறது. அதுதான்,

டைம். 

நேரமே இல்லை என்பது எல்லோரும் சொல்லும் இயல்பான வார்த்தை. இந்த விளம்பரத்தில் வேலைக்கு செல்வது, சம்பாதிப்பது, டிராபிக் இவையெல்லாம் இயல்பு என்றாலும், 'மற்றவர்களின் வாழ்கைக்குள் Scroall  பண்ணிபண்ணி இரண்டு மணிநேரம் இருபது நிமிடம் காணமல் போய்விடுகிறது' என அவள் சொல்வது, சோஷியல் மீடியா என்ற பெயரில் செய்திகள், ஸ்டேடஸ், ரீல்ஸ், வெட்டி விவாதம் என ஒன்றிற்கும் உதவாத விஷயங்களுக்கும், பைத்தியக்காரத்தனத்திற்கும், ஒரு நாளின் பல நேரத்தை செலவிடும் நம் தலையில் கொட்டுவதைப் போல இருக்கிறது. சோஷியல் மீடியாக்களை சேர்த்து சினிமா, டிவி, கிரிக்கெட், ஆன்லைன் விளையாட்டு, பக்தி, என நம் நேரத்தை பிடிங்கி தின்று கொழிக்கும் தொழில்கள் ஏராளம் இருக்கின்றன. நாம், நமது பொன்னான நேரத்தை பிறர் கொழித்து வாழ கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நம் சேமிப்பும் உழைப்பும் சிந்தனையும் அழிந்துபோக வழி செய்து கொண்டிருக்கிறோம். ஒரு வகையில் பார்த்தால் நம்மை வைத்து பிழைக்கும் நபர்களை பின்பற்றி வாழவும் தொங்கிவிட்டோம். 

யாரோ ஒருவர் அணிந்த உடைபோல் அணிந்துகொள்கிறோம்,
யாரோ ஒருவரைப் போல உடல் அலங்காரம் செய்துகொள்கிறோம்,
யாரோ ஒருவர் சென்ற இடங்களுக்கு செல்கிறோம்,
யாரோ ஒருவர் ருசிபார்த்த உணவு,
யாரோ ஒருவர் அனுபவித்த கேளிக்கை, என
யாரோ ஒருவராகவே
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்த விளம்பரத்தின் நாயகி  ஓரிடத்தில் இருக்கிறாள் அவளைச் சுற்றியிருப்பவர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். முதலில் அவளைச்சுற்றி அலுவலகம் சார்ந்த நபர்கள் இருக்கின்றனர். பிறகு டிராபிக் போலிஸ் உட்பட சாலையில் தென்படும் பலர் அங்கு வருகின்றனர். அவள் தனது செல்போனை தடவும்போது, அவளைச் சுற்றி பலர் ஆடிப் பாடுகின்றனர். தனியாக இருக்கும் அவள் தந்தையை பார்க்கும்போது அவர்கள் அவளை மறைக்கிறார்கள். கடைசியில் அவள் 'உங்களுக்கு எது முக்கியமோ அதற்காக' எனும்போது அனைவரும் மறைந்து போகின்றனர். அந்த காட்சி நம்மை நேசிப்பவர்களிடமும், அருகிலிருப்பவர்களிடமும், உயிருள்ள மற்றும் உண்மையானவற்றிடம் நாம் அக்கரை காட்டுவதேயில்லை.  அவற்றிற்காக நேரம் ஒதுக்குவதேயில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. மேலும் நாம் தவறவிட்டவர்களை, விட்டவைகளை நினைவுக்கு கொண்டு வருகிறது. 

இறுதியாக இந்த விளம்பரத்தில்  "டைம் எப்போது கிடைக்கிறதோ எவ்வளவு கிடைக்கிறதோ Make the most of it" என அவள் சொல்கிறாள்.  எதையோத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கைக்கு தேவையான செய்தியாக அது இருக்கிறது. 

ஒரு பிரபல காஃபி தூள் தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பரம் இது. Make Your World (உங்கள் உலகை உருவாக்குங்கள்) என்ற மையக்கருத்தில் அவர்கள் பல விளம்பரங்களை எடுத்திருந்தாலும். நேரத்தை முன்னிருத்திய இது முதல்தரம். நமக்கான நேரத்தை நாம் உருவாக்கினால் Make Your World
நிச்சையம் சாத்தியம் எனத் தோன்றுகிறது. 

(Yes...i make my time..it's always golden time, so கண்ட கண்ட கஸ்மாலத்திற்கு அனுமதியில்லை). 

ஒரு காஃபி விளம்பரத்தில் உணர்ந்துகொண்ட வை...