வைல்ட் தமிழ்நாடு - ஒரு டாகுமெண்டரியின் டிரைலர்.
சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒரு டாகுமெண்டரியின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.
வைல்ட் தமிழ்நாடு.
பல்லுயிர்கள் வாழும் குறிப்பிடத்தக்க இயற்கை நிலப்பரப்புகளான மலைகள், மழைக்காடுகள், வயல்வெளிகள், பவளப்பாறைகள் மற்றும் பாலைவனங்கள் என அனைத்தும் இந்தியாவில் ஒரே மாநிலத்தில் இருக்கிறதென்றால் அது தமிழ்நாட்டை சொல்லலாம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என சங்க காலத்திலேயே ஐவகை நிலங்களாக பிரித்து வாழ்ந்து வந்த இடம் என்பது மிகையில்லை. இந்த டாகுமெண்டரி அத்தகைய ஐவகை நிலங்களை அடிப்படையாகக் கொண்டு அங்கு வசிக்கும் உயிரினங்களை பற்றி எடுத்துரைக்கிறது.
இந்த டாகுமெண்டரி, யானை, சிறுத்தை, புலி போன்ற கம்பீரமான விலங்குகள் முதல் மின்மினி பூச்சிகள், பல்லிகள், சிங்கவால் மக்காக்குகள், கண்ணுக்குத் தெரியாத முள்ளம்பன்றிகள், வரை கவனிக்கப்படாத பல உயிரினங்கள் வசிக்கும் சூழலில் பயணிக்கிறது. மேலும், தமிழ்நாட்டின் வளமான பல்லுயிர் பெருக்கத்தைப் பற்றிய கதைகளைச் சொல்வதையும் தாண்டி, அந்தந்த நிலத்திற்கு ஒரு மனமார்ந்த மரியாதையை செலுத்துவதோடு, அதன் அழகையும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தையும் கொண்டாடும் விதமாக படைக்கப்பட்டிருக்கிறது.
பிபிசி, நேஷனல் ஜியோகிராஃபிக், டிஸ்கவரி போன்ற முக்கிய சேனல்களில் ஒளிபரப்பான பல டாகுமெண்டரிகளை இயக்கிய "கல்யாண் வர்மா" இதனையும் இயக்கியிருக்கினார். காட்டுயிர்கள் தொடர்பான வைல்ட் கர்நாடகா, டிஸ்னி டைகர் மற்றும் ப்ராஜெக்ட் டைகர் போன்றவற்றிலும் இவரது பங்களிப்பு இருக்கிறது.
3 முறை கிராமிவிருது வென்றவர், பத்மஸ்ரீ விருது பெற்றவர், அமெரிக்க பில்போர்டு கலைஞர், ஐக்கிய நாடுகள் சபையின் "நல்லெண்ண தூதர்" அதையும் தாண்டி சுற்றுச்சூழல் ஆர்வலரான "ரிக்கி கேஜ்" இசையமைத்திருக்கிறார்.
சஞ்சீவி ராஜா, ராகுல் டெமெல்லோ, தனு பரண், ஜூட் டெகல், சிவ குமார் முருகன், சுமன் ராஜு, கணேஷ் ரகுநாதன், பிரதீப் ஹெக்டே, பூஜா ரத்தோட் போன்ற காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்கள் இந்த டாகுமெண்டரியில் இணைந்திருக்கின்றனர்.
காட்டு ராஜா சிங்கத்தை போன்ற தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரான நடிகர் "அரவிந்த் சுவாமி" கதை சொல்பவராக இருக்கிறார்.
சில தனியார் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க, தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பாக இந்த டாகுமெண்டரி விரைவில் வெளிவர இருக்கிறது..
இன்றைய நிலவரப்படி காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. மலைகள் மண்ணுக்காகவும் சுற்றுலா மேம்பாட்டிற்காகவும் கரைக்கப்பட்டு வருகின்றன. விளை நிலங்கள் வீட்டுமனைகளாகவும், வெட்ட வெளி பாலைகள் குப்பை மேடுகளாகவும் மாறிவிட்டன. கடல்நீர் கழிவுநீர் கலக்கும் பொது இடமாகிவிட்டது. இவற்றை சார்ந்து வாழும் உயிரினங்கள் பல அழியும் விளிம்பில் இருக்கின்றன. காக்கைககளின் எண்ணிக்கை குறைந்து விட்டன, தும்பிகள் தொலைந்து பல வருடங்கள் ஆகின்றன. அடிக்கடி பார்க்கும் அணிகள் தென்படுவதில்லை, தவளைகளுக்கும், தண்ணீர் பாம்புகளுக்கும் என்னவாயிற்று தெரியவில்லை. யானையும், சிறுத்தையும், கரடியும் ஊருக்குள் வந்துபோகும் கதைகள் மட்டும் உலாவிக் கொண்டிருக்க, தெருநாய்கள் கூட, தேவையா? இல்லையா? என்ற சிக்கலில் இருக்கின்றன. தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என மனிதன் சர்வாதிகாரம் செய்யும் இத்தகைய உயிர் சூழலுக்கு இந்த டாகுமெண்டரி தேவை எனப்படுகிறது. டிரைலர் வெளியாகி உலத்தரத்துடன் இருக்க, நம்மை சுற்றி இருக்கும் உயிர் சூழலை தெரிந்துகொள்ள முழு டாகுமெண்டரியையும் காணும் ஆவல் ஏற்படுகிறது...