ஆப்பிரிக்கா வித் அடே அடெபிடன்.


லகின் பிரபலமான ஊர்களுக்கு சென்று, அங்கிருக்கும் இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, குடித்து கும்மாளமிட்டு, உணவகங்களில் கண்டவற்றை ஓசியில் வாங்கி வயிற்றை நிரப்பி, தின்ற கொழுப்பில் தொந்தி பிதுங்க Explore என்ற பெயரில் அரைக்கால் டவுசரில் தாறுமாறாக உளறித் தொலைக்கும் தறுதலைகளுக்கு மத்தியில் நைஜீரியாவை சேர்ந்த "அடே அடெபிடன்" என்பவர் வித்தியாசமாகத்தான் தெரிகிறார். அவரது "Africa with Ade Adepitan"
என்ற டாகுமெண்டரி தொடரும் இதுவல்லவோ அசல் Explore எனவும் தோன்றுகிறது.

ஆப்பிரிக்கா கண்டம் கிட்டத்தட்ட ஐம்பது வெவ்வேறு நாடுகளால் ஆனது. அதில் சிக்கலான மக்கள், அவர்களது இனங்கள், கலாச்சாரம், மொழிகள், உணவுகள், பழக்க வழக்கங்கள், இயற்கை அமைப்புகள் என கலந்து இருக்கிறது. மேலும் அழகும், பண்முகத் தன்மையும், வளமும் நிறைந்திருக்கிறது.  அவற்றையெல்லாம் ஆராய்வது அளப்பறிய செயலாக இருக்கும். அடே (அடே அடெபிடன்) அடடே! என அதைத்தான் அவரது இந்த டாகுமெண்டரி தொடரில் செய்திருக்கிறார். 



இந்த டாகுமெண்டரி தொடரில், அடே அடெபிடன் தான் பிறந்த நாடான நைஜீரியாவில் லாகோலிஸ் நகரத்திலிருந்து பயணத்தை தொடங்கி மேற்கிலிருந்து வடக்கு நோக்கி ஆப்பிரிக்கா முழுவதிற்கும் செல்கிறார். அங்கிருக்கும் மக்களை சந்திப்பதோடு தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையையும் அறிந்து கொள்கிறார். தனது கண்டமான ஆப்பிரிக்கா எவ்வாறு நவீனமாக மாறி வருகிறது, அது எங்கு செல்லக்கூடும் என்பதை அவர் ஆராய்கிறார். கடந்தகால நிகழ்வுகளை அசைபோடும் அவர், ஆபத்தான இடங்களுக்கும் செல்கிறார். ஒரு ஊர் அல்லது நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பலரையும் சந்திக்கிறார், அவர்களை உலகின் பார்வைக்குபடும்படி செய்கிறார். புதிய தலைமுறையும், நவீன காலமும் ஆப்பிரிக்காவை மாற்றும் என்ற நம்பிக்கையை அவர் பெறுகிறார். அத்துணை பயண நிகழ்வுகளையும் ஊணமுற்ற தனது இரண்டு கால்களையும் சுமந்து கொண்டே செய்து முடிக்கிறார். 

Africa with Ade Adepitan
Documentary (TV Series) 
2019

ஒவ்வொன்றிற்கும் ஒருமணிநேரம் மொத்தம் நான்கு மணிநேரம் நான்கு எபிசோடுகள் நிறைந்த இந்த டாகுமெண்டரி தொடரில் ஆப்பிரிக்கா முழுவதையும் சுற்றிய அனுபவம் ஏற்படுகிறது. வெறும் பத்து நிமிடங்களில் ஒரு ஆப்பிரிக்க நகரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள முடிகிறது. ஆப்பிரிக்கா நாடுகள் எப்படி இருக்கிறது, எவ்வாறு மாறி வருகிறது, எதை நோக்கி செல்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஆப்பிரிக்கா நாடுகள் என்றால் பசி, பஞ்சம், வறட்சி, நோய், உள்நாட்டு போர்கள், என்ற பார்வையிலிருந்து சற்று விலகிக்கொண்டிருப்பதை உணரமுடிகிறது. எனது மண் எப்படியும் மாறிவிடும் என்ற அடே அடெபிடனின் அந்த நம்பிக்கை இந்த டாகுமெண்டரி தொடரை காணும் நமக்கும் தோன்றுகிறது.  இந்த டாகுமெண்டரி BBC earth தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பப்பட்டு தற்போது மறு ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. Sony liv மற்றும் யூடியூபிலும் காணக் கிடைக்கிறது. இங்கு இப்பொழுது நாமெல்லாம் பாதுகாப்பாக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, ஒருகாலத்தில் நம் மூதாதையர்கள் தோன்றிய இடத்தின் மாற்றங்களை ஒரு ஜாலியான Explore என இந்த டாகுமெண்டரி தொடரின் மூலம் புரிந்து கொள்வது சற்று ஆறுதலாகவும் இருக்கும் அல்லவா.