எழுந்த பெருங்கோபம்...

னம், மதம், சாதி, அரசியல் என நம்மை பிரித்துப் பார்க்க ஒரு கூட்டம் இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் அதனை ஏதோ ஒரு வகையில் பிடிங்கித் தின்ன வியாபார உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. போதாத குறைக்கு வழுக்கி விழுந்தால் அதற்கும் வரி. உப்பு, உளுந்து, சர்க்கரை எல்லாவற்றிலும் கலப்படமும் போலியும் நிறைந்திருக்கிறது (காசு காசு என அலையும் மனிதனும் கலப்பட போலி). 

எதைப் பார்க்க வேண்டும், 
என்ன உடுத்த வேண்டும், 
என்ன குடிக்க வேண்டும் (சாராயம் உட்பட),
என்ன சாப்பிட வேண்டும், 
எங்கு சாப்பிட வேண்டும், என்பதையெல்லாம் யாரோ முடிவு செய்கிறார்கள். 

நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களைக் கொண்டு யாரோ சம்பாதிக்கிறார்கள். அற்புத படைப்பு, நுணுக்கம், கலைநயம் எதுவுமில்லாமல் வெறும் புளித்துப்போன கேளிக்கையை நிரப்பி ஒரு கூட்டம் கூத்தடித்துக் கொண்டிருக்கிறது. சிறந்த படைப்பாளிக்கு கோணி சாக்கும், பைத்தியக்காரனுக்கு பஞ்சு மெத்தையும் கிடைக்கிறது. கொலையும், கொள்ளையும், கற்பழிப்பும் வெகு இயல்பாக நடக்கிறது. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய சட்டமும் அதிகாரமும் சாக்கடையில் கிடக்கிறது. வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய ஊடகங்களோ தர்மத்தை ஆவிழ்த்து விட்டு ஆதித் தொழிலான விபச்சாரத்திற்கு சென்றுவிட்டது. இவை எல்லாமுமாக இறுகப் பற்றி கழுத்தை நெரிக்க, 

நாம் வாழ்ந்தால் போதும்
நாள் வாழ்ந்தால் போதும் 

என்ற மனம் மட்டுமே நமக்குள் நிறைந்திருக்கிறது. அதனோடு என்ன பாவம் செய்தால் என்ன? எத்துணை பாவம் செய்தால் என்ன?..  'கடவுளுக்கு காணிக்கை கொடு' என எல்லா மதமும் போதிக்கிறது. 

இவையெல்லாம் நம்மை சுற்றி நிகழ்கிறாதா? இதற்கெல்லாம் நாமும் ஒரு மூல காரணமா? என தெரியாமல்
சினிமா, கிரிக்கெட், சோசியல் மீடியாக்களில் மூழ்கியிருக்க, புத்தியெல்லாம் புறம்போக்காக திரும்பியிருக்க,
இதில் எதிலும் ஒட்டாமல் 
தனித்திருந்தால்?.... 
இருக்க நினைத்தால் ?.... 
எழுந்த பெருங்கோபம்தான்
இந்த கிறுக்கல்கள்...
எங்கள் சாதிக்காரனை விட 
நாங்கள் 
எவருடனும் புழங்குவதில்லை.

எங்கள் சாதிக்காரன் 
தானியங்களை
எங்கள் சாதிக்காரனே 
அறுவடை செய்கிறான்.
எங்கள் சாதிக்காரன் 
துணிமணிகளை 
எங்கள் சாதிக்காரனே 
துவைத்து வெளுக்கிறான்.
எங்கள் சாதிக்காரன் 
மயிரை 
எங்கள் சாதிக்காரனே 
சிரைக்கிறான்.
பிரசவம் முதல்
பித்தம், கபம், வாதம் வரை 
எங்கள் சாதிக்காரன்
நோய் நொடிக்கெல்லாம்
எங்கள் சாதிக்காரனே
பண்டுவம் பார்க்கிறான். 
எங்கள் சாதிக்காரன் 
மலத்தை 
எங்கள் சாதிக்காரன் 
அள்ள,
இறுதியாக 
எங்கள் சாதிக்காரன் 
பிணத்தை
எங்கள் சாதிக்காரனே 
எரிக்கிறான்.
சத்தியமாக நம்புங்கள் 
எங்கள் சாதிக்காரனை விட 
நாங்கள் 
எவருடனும் புழங்குவதில்லை...
நவீன யுக 
புறநானூற்று மாவீரர்கள் 
உருவாகும் கதை.

ஒரு மாவீரனை
நடுரோட்டில் 
வெட்டி சாய்த்துவிட்டு
ஒரு மாவீரன் உருவாகிறான்.
இறந்தவன் பழிக்கு 
பழி தீர்க்க
மற்றொரு மாவீரன் தோன்றுகிறான்.
மாவீரனை பெற்றவள்
மாரடித்துக் கொள்கிறாள்,
மாவீரனின் மனைவி
மண்ணில் புரள்கிறாள்,
மாவீரனின் பிள்ளைகள்
முதன்முறையாக
இரத்த வாடை நுகர்கிறார்கள்,
மாவீரனுக்காக மக்கள்
மறியல் செய்கிறார்கள்,
மாவீரனின் நினைவேந்தலில்
சாராயம் குடித்து,
கஞ்சா புகைத்து,
கறிசோறு தின்று,
மாவீரனாக வேண்டுமென
நண்பர்கள் 
சபதமெடுக்கிறார்கள்.
சட்டமும் சமுதாயமும் 
சகல நிகழ்வுகளை
வேடிக்கை மட்டுமே பார்க்க,
ஒன்றுபோல் இருக்கிறது
நவீன யுக 
புறநானூற்று மாவீரர்கள் 
உருவாகும் கதை... 
மாட்டுக்கறி சாப்பிட்டான்
என சந்தேகப்பட்ட 
ஒருவனின் சாவு.

மிரட்டிக் கேட்டார்கள்
அடித்துப் பார்த்தார்கள்
உதைத்தால்
உண்மை வருமென
எதிர்பார்த்தார்கள்
கழுத்தை இறுக்கி 
வாயை அகலத் திறந்து
பல்லிடுக்குகளில்
சிக்கியிருப்பதைத் 
தேடினார்கள்
ஆடைகளை களைந்து
ஆசன வாயில் 
மூக்கை வைத்து 
முகர்ந்தார்கள்
இறுதியாக
வீர வாளால் வயிறு கிழித்து
சரிந்து விழுந்த குடலில்
தங்கிய மலத்தை எடுத்து
தொட்டு
தடவி
சுவைத்து
உணர்ந்து
ஒருவழியாக முடிவு செய்தார்கள் 
இவன் 
மாட்டுக்கறி சாப்பிடவில்லை 
என்று... 
உயர்த்தப்பட்ட
உட்சபட்ச வரியை 
சரியாக செலுத்துபவன்.

பூண்டையும் வெங்காயத்தையும்
தீண்டாத குலமொன்றின் 
உத்தரவுபடி
தொழிலாளிகளின் எண்ணிக்கையை
குறைத்துக் கொண்டான் 
முதலாளி,
சம்பளப் போராட்டம் நடத்தி 
இழந்ததை பெற்றுக் கொண்டான் அரசாங்க ஊழியன்,
அந்நிய செலாவணியால்
அனைத்தையும் சரி செய்தான் 
கார்ப்பரேட் கனவான்,
அலங்காரத்தையும் ஆடம்பரத்தையும்
விட்டுக் கொடுத்தான்
நடுத்தர வாசி,
எது நிகழ்வினும்
எவ்வித மாற்றமின்றி
தப்பித்துக் கொண்டான்
நக்கிப் பிழைப்பவன்,
வாங்கிய பீடி கட்டிற்கும்
தீப்பெட்டிக்கும்
உயர்த்தப்பட்ட
உட்சபட்ச வரியை
சரியாக செலுத்தினான்
சாமானியன் ... 
ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்ககாசை சம்பாதித்தவன்.

எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள 
இளிச்சவாய் ரசிகன் 
இன்னமும் இருக்கிறான்  நம்பிக்கையில்
ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்ககாசை சம்பாதித்தவன் 
யோசிக்கின்றான்
மூத்திரம் 
விலைபோகுமா என்று... 
காட்டுவதெல்லாம்
பார்ப்பதற்குத் தானே.

கருமை கண்களைக் காட்டி
கடை திறக்கிறாள் ஒருத்தி,
ஆரஞ்சு சுளை உதட்டை பிழிந்து காட்டுகிறாள் ஒருத்தி,
காம்புகளை மறைத்து
முலாம்பழங்களை 
காட்டியபடி ஒருத்தி,
வாழைத்தண்டு கால்களையும்
வாகை மர தொடைகளையும்
காட்டியபடி ஒருத்தி,
ஒருபடி மேலே சென்று
பிட்டத்தை 
ஏற்றி இறக்கியபடி ஒருத்தி,
இவ்வளவுதான் இருக்கிறதென
மொத்தத்தையும் காட்டியபடி
ஒருத்தி இருக்க,
காட்டுவதெல்லாம்
பார்ப்பதற்குத் தானே
பார்ப்பதெல்லாம்
காசிற்குத் தானே... 
எதை தின்கின்றோம்? 
எங்கு தின்கின்றோம்?

கூட்டத்திலிருந்த பிரிந்த
பன்றி ஒன்று 
சென்ற இடமெல்லாம் மேய்கிறது. 
மேய்ந்த இடத்தில்
கிடைத்ததை தின்று கொழுத்த அது
தின்றதைப் பற்றி 
பெருமை பீற்றிக் கொள்கிறது.
கொழுத்த பன்றியின் வாய் ஜாலத்தில் மயங்கிய 
மற்ற பன்றிகள் 
அதனை பின்பற்றி
பின்புறத்தை 
நக்கியபடியே சென்றுவிட,
எதை தின்கின்றோம்? 
எங்கு தின்கின்றோம்?
எப்படி தின்கின்றோம்?
எது பாரம்பரிய சுவை?
என்பதை 
பன்றிகள் மறந்து பலங்காலமாகிறது... 
சாவது உட்பட
சகலமும் எப்படியென 
சொல்லிக் கொடுக்க 
ஆள் இருக்கிறார்கள்.

படுக்கையிலிருந்து 
எழுங்கள்,
கால்களை அடிக்கு குறையாது 
அகட்டிக் கொள்ளுங்கள்,
விரல்களை மூடி
இரண்டு கைகளை 
மேலே உயந்தும் நேரத்தில், தலையையும் 
சற்று உயர்த்துங்கள்,
அதே நிலையில் 
மெல்ல 
வாயைத் திறங்கள், 
பிறகு கைகளையும் தலையையும் இறக்கி 
வாயை மூடி 
கால்களை இணைத்து
விரல்களைத் தளர்த்துங்கள்...
எழுந்ததும் 
கொட்டாவி விடுவது எப்படியென பார்த்த நாம்
நாளை
நெட்டி முறிப்பதைப் பற்றி பார்க்கலாம்... 
சாமியாரின் 
ஆசிரம வியாபாரம்.

பாதி உருவ புகைப்படம் 
மலிவு விலையில் 
தொடங்குகிறது
சாமியாரின் 
ஆசிரம வியாபாரம்.
திருவுருவச் சிலைக்கு 
ஒரு விலை,
திருநீற்றுக்கு 
ஒருவிலை,
தீட்சை பெற்ற
உருத்திராட்சத்திற்கு 
ஒருவிலை,
சாமியார் குளித்த 
புனித நீர்,
சாமியார் கொப்பளித்த 
பன்னீர்,
சாமியார் கடித்த
முந்திரிக் கொட்டை,
சாமியார் உருட்டிய 
எலுமிச்சை, 
சாமியார் உதிர்ந்த
தாடி மயிருக்கு
ஒருவிலையென இருக்க,
திரி செய்து
விளக்கேற்றி
சுபிட்சம் பெற வேண்டி
சாமியார் கோவணத்திலிருந்து
பிரிந்த நூலை 
ஒரு விலைகொடுத்து
வாங்கி வந்தேன்...
கற்பழிப்பு 
ஒரு தேசிய விளையாட்டு.

அழிப்பதற்கு இதுதான் ஆத்திசூடிவென
கற்பழிக்கும் குறிகளை தாங்கிப் பிடிக்க
இனக் கைகள் இருக்கின்றன.
கருவரையில் சிறுமியையும்
கலவரத்தில் கற்பினியையும்
கற்பழிக்கும் குறிகளை தாங்கிப் பிடிக்க
மதக் கைகள் இருக்கின்றன.
கீழ்சாதி தீண்டத்தகாதவர்களை
கற்பழிக்கும் குறிகளை தாங்கிப் பிடிக்க
மேல்சாதி 
தீண்டத்தகுந்தவர் கைகள் இருக்கின்றன.
பள்ளி 
கல்லூரி
அலுவலக
புழங்கும்
பொது இடங்களில் கற்பழிக்கும் குறிகளை தாங்கிப் பிடிக்க
நீதிதேவதையின் கைகள் இருக்கின்றன
இதனோடு,
ஆளும் கைகள்,
அதிகார கைகள்,
அமைப்பு கைகள்,
ஊடக கைகள்,
ஊர்க் கைகலென,
அத்துணை கைகளும் கற்பழிக்கும் குறிகளை 
துவளாமல் 
தாங்கிப் பிடிக்க 
தயாராக இருக்க,
நாளுக்கு நாள் நிகழும்
கற்பழிப்பு 
ஒரு தேசிய விளையாட்டு...