தொய்யில் எழுதுதல்...


கொஞ்ச நேரம் ஒதுக்கி 
கூந்தல் ஒதுக்கி 
குறிப்பு எழுந்துங்கள் 
எந்தன் தோளில்
பீலி ஒன்றை எடுத்து 
தேனில் நனைத்து 
கையொப்பம் இடுவேன் 
உந்தன் மாா்பில்... 

பீலி என்றால் இறகு. இங்கு மயிலிறகு. அதனை தேனில் நனைத்து மார்பில் கையொப்பமிடல். அழகான பாடல் வரிகள். மேலோட்டமாக பார்த்தால் Fore play போன்று தோன்றலாம் ஆழமாக ஆராய்ந்தால் Fair play. சங்க இலக்கியங்களில் வரும் தொய்யில்  எழுதுதல் போன்றது.

அது என்ன தொய்யில் ?

தொய்யில் என்பது, பெண்களின் கைகளில், மார்பில், முலைகளில், தோளில் அல்லது உடல் முழுவதும் சந்தனக் குழம்பால் இலை, பூ, கொடி, கோலம் போன்ற வடிவங்களை வரைந்து அழகுபடுத்தும் ஒரு பழங்கால ஒப்பனை கலை வடிவம். பழங்கால டாட்டு வரைதல் என வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது Temporary டாட்டு அழித்துவிடலாம் அல்லது அதுவாகவே அழிந்துவிடும். தொய்யில், விழாக்கள், திருமணங்கள், சுப நிகழ்வுகளில் பெரும்பாலும் செய்யப்பட்டிருக்கின்றன. இதனை செய்வதற்கென தொய்யில் மகளீர் என தனியாக இருந்தனர்... 

பீலி ஒன்றை எடுத்து 
தேனில் நனைத்து 
கையொப்பம் இடுவேன் 
உந்தன் மாா்பில்... என்பதற்கு பொருந்துவது போல காதலின் உச்சத்தில் காதலனே தன் கைப்பட தொய்யில் வரைந்த குறிப்பும் சங்க இலக்கியத்தில் இருக்கிறது. புணர்ச்சிக்கு முன், புணர்ச்சிக்குப் பின் என மூன்றாம்பால் விளையாட்டாகவும் இருந்திருக்கிறது. 

சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி,
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல,

சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தோளில் கரும்பு, கொடி ஆகிய உருவங்களைத் தொய்யிலாகக் கோவலன் எழுதினான்.. 
மிகப்பிரபல இலக்கிய ஜோடியான கோவலன் கண்ணகியே தொய்யிலுக்கு பெரும் சாட்சியாக இருக்கின்றனர். 

நீராடல், 
ஆடை அணிதல், 
கூந்தலை அகிற்புகையூட்டி அழகுபடுத்தல், 
தொய்யில் எழுதுதல், 
அணிகலன்களால் தங்களை அழகுபடுத்தல், 
என்பது சங்கால பெண்களின் ஐந்து ஒப்பனை வரிசையாகும். இதில் தொய்யிலும் இருக்கிறது. 

மகிழ் செய் தே மொழித் தொய்யில் சூழ் இள முலை" 

மகிழ்ச்சியைத் தரும் தேன் போன்ற இனிய சொற்களை உடையவளும், சந்தனத்தால் ஆன தொய்யிலால் சூழப்பட்ட இளமையான மார்பகங்களை உடையவளுமான பெண்ணே" என கலித்தொகையில் தலைவன் ஒருவன் தலைவியை வருணிக்கிறான். ஆடையைத் தவிர்த்து பெண்களின் மார்பு முழுவதையும் மறைக்கும் அளவிற்கு தொய்யில் எழுதப்பட்டிருக்கிறது. 

தடமெங்கும் புனல்குடையும்தையலார் தொய்யில்நிறம்.

நீராடும் பெண்களின் தொய்யில் நிறம் ஆற்றில் கரைந்து போகிறது என்பதை இந்த திருத்தொண்டர்புராண வரிகள் எடுத்துக்காட்டுகிறது. 

வெறும் சந்தன குழம்பு மட்டுமல்லாது தொய்யில் எழுத பல வண்ணப் பொருட்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

சந்தனம், குங்குமம், செம்பஞ்சுக் குழம்பு, பச்சைக் கருப்பூரம் ஆகியவை தொய்யில் எழுதப் பயன்பட்ட மூலப்பொருட்களாக இருந்தன. மருதாணியும் சேர்ந்திருந்திருக்கலாம். 

செய்ய வாய் வெளுப்ப, கண் சிவப்புற,மெய் அராகம் அழிய, துகில் நெக,தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்,பொய்கை, காதல் கொழுநரும் போன்றதே! 

செய்ய வாய் வெளுப்ப, கண் சிவப்புற:

பெண்கள் நீரில் விளையாடுவதால், அவர்களின் சிவந்த உதடுகள் வெளுத்தும், கண்கள் சிவந்தும் காணப்படுகின்றன.

மெய் அராகம் அழிய:

அவர்களின் உடலில் இருந்த சிவப்பு நிறம் நீரில் கரைந்து அழிகிறது.

துகில் நெக:

அவர்களின் ஆடைகள் நழுவுகின்றன.

தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்:

குளிர்ந்த நீரில் பெண்களின் பெரிய மார்பகங்கள் அமிழ்வதால், அந்த நீர் குளிர்ந்தும், பெண்களின் அழகைக் காட்டுவதாலும்,
...
...
சென்சார் கட்...
...
கம்பராமாயணத்தில் நீர் விளையாட்டு படலத்தில் வரும் பாடல் வரிகள் இவை. (இந்த படலத்தை ஒரு நாள் தனியே ஆராய வேண்டும்).

நல் இள வன முலை அல்லியொடு அப்பியும்,           
பெருந் தோள் தொய்யில் வரித்தும், 

அகநானூற்று தோழிக்கு தலைவி பாடிய வரிகளிலும் தொய்யில் இருக்கிறது. 

கடைசியாக இந்த கலித்தொகை பாடலுக்கு வருவோம்.

அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப,
பிரிந்து உறை சூழாதி ஐய! விரும்பி நீ,
என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்
மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்:
சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது;     
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்;
இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ ? உள நாள்,
ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்,            
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிதுஅரோ,
சென்ற இளமை தரற்கு!

சங்க இலக்கியம் - கலித்தொகை
பாடல் - 18
பாடியவர் - பாலை பாடிய பெருங்கடுங்கோ
திணை - பாலை

தாகம் எடுப்பது போல, பொருள் தேடவேண்டும் என்ற ஆசை துரத்துகிறது என்பதற்காக ஐயனே! என்னைப் பிரிந்து வாழ நினைக்க வேண்டாம். விருப்பத்தோடு என் தோளில் தொய்யில் எழுதினாயே அதனை எண்ணிப்பார். அது உன் மார்பில் கோடுகளாகப் பதிந்ததே அதனையும் எண்ணிப்பார். ஆற்றில் தண்ணீர் மொள்ளுவதைப் போல மொண்டுகொண்டு வர பொருள் எங்கும் கொட்டிக் கிடப்பதில்லை. பொருளீட்டாதவர்கள் உண்ணாமல் பட்டினி கிடப்பதில்லை. இளமையும் காமமும் இணையப் பெற்றவர் விரும்பும் செல்வம் வேறொன்று உண்டோ? உயிரோடு உள்ள வரையில் ஒரு கையால் துணைவரைத் தழுவிக்கொண்டு, மற்றொரு கையால் அவிழ்ந்து கிடக்கும் ஆடையை எடுத்து உடுத்திக்கொள்ளும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை. இளமை போய்விட்டால் திரும்ப வராது. எனவே இளமையைத் துய்த்துக்கொள். 

தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் தேட வெளியூர் புறப்படுகிறான். பிரிவை எண்ணி தலைவி கலங்குகிறாள். வாழ்வதற்கு பொருள் தேவை இருக்கிறது. பொருளைவிட தேவையும் வாழ்க்கையில் இருக்கிறது. 
Money make many things, but many things not made by money என்பதை இந்த பாடல் மூலம் தலைவனுக்கு அவள் உணர்த்துகிறாள். இந்த பாடலில் 
விருப்பத்தோடு என் தோளில் தொய்யில் எழுதினாயே அதனை எண்ணிப்பார். அது உன் மார்பில் கோடுகளாகப் பதிந்ததே அதனையும் எண்ணிப்பார் என்கிறாள். 

என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்
மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்:

என தொய்யில் பற்றி குறிப்பிடுகிறாள்.

தொய்யில் என்பது
ஒரு கலை
ஒப்பனை
பாரம்பரியம்
ரசனை
மற்றும் 
அழகியல் ...