உலகின் வயதானவர்கள்...

ழ்கடல் பஞ்சு 500 வயது, நீர்வாழ்வன சில 200 வயது, ஆமை 150 வயது, மனிதனை எடுத்துக் கொண்டால் 100 வயது. மற்றவைகள் 100 வயதிற்குள் உயிர் வாழ்கின்றன. இவைகளைத் தவிர்த்து உலகின் அதிக வயதானவர்கள் இருக்கிறார்களா என்றால்? ஆம் எனலாம். அவர்கள் மரங்கள். சுமார் 4500 வயதிற்கு மேலாக வாழ்ந்துவரும் மரங்கள் இந்த உலகில் இருக்கின்றன. இயற்கைச் சீற்றம், காலநிலை மாற்றம், நாகரீகம், கலாச்சாரம், நவீனம் மற்றும் "டேய் மனுசா எப்படி இருந்த நீ இப்படி மாறிட்ட" என மனிதகுல வளர்ச்சி இவற்றையெல்லாம் இருந்த இடத்திலிருந்து அவைகள் பார்த்து வருகின்றன. எது நிகழ்ந்தால் எனக்கென்ன என இத்துணை வருடங்களாக நிலைத்து நிற்கும் அந்த உலகின் வயதானவர்களைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

மெத்துசேலா

கிழக்கு கலிபோர்னியாவில் உள்ள இன்யோ கவுண்டியின் வனப்பகுதி வெள்ளை மலைகளில் இருக்கும் "மெத்துசேலா" என்ற பெயர் கொண்ட "கிரேட் பேசின் பிரிஸ்டில் கோன் பைன்" மரமே உலகின் அதிக வயதான மரமாகும். கி.மு 2833 -ல் விதைக்கப்பட்டது என நம்பப்படும் அதன் வயது 2024 கணக்குப்படி 4856. அது இருக்கும் அந்த வனப்பகுதியில் மேலும் சில பைன் மரங்கள் இருக்கின்றன. அவைற்றுள் சில மெத்துசேலாவை விட அதிக வயது கொண்டவை என்ற சர்ச்சையும் இருக்கிறது. பைன் மரமான இது தற்போது மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. பைபிளில் வரும் "மெத்துசேலா" என்பவர் 986 ஆண்டுகள் வாழ்ந்தாராம். அதனால் மரத்திற்கு இந்த பெயர் வைத்திருக்கிறார்கள். அவரையும் தாண்டி வாழ்ந்து அம்மரமே உலகின் வயதானவர்கள் பட்டியலில் முதலில் இருக்கிறது... 

சர்வ்-இ அபார்க்


"வயசானாலும் அழகும் கம்பீரமும் இன்னும் குறையல" என்பது ஈரானின் யாஸ்த் மாகாணத்தில் இருக்கும் "சர்வ்-இ அபார்க்" என்ற மரத்திற்கு சர்வ பொருந்தும். "சைப்ரஸ்" வகை மரத்தை சார்ந்த இதன் வயது 4000 ஆண்டுகள். இத்துணை வயதிலும் இது கம்பீரமாக இன்றும் நிற்கிறது. ஈரானிய மத சீர்திருத்தவாதி மற்றும் ஜோராஸ்ட்ரியனிசத்தின் ஆன்மீக நிறுவனராக "ஜராதுஷ்ட்ரா ஸ்பிதாமா பொதுவாக ஜோராஸ்டர்" என அழைக்கப்படுபவரே இந்த மரத்தை நட்டார் என்ற கதை இருக்கிறது. இந்த மரம் ஈரானின் தேசிய சின்னம் ஆகும். அதுமட்டுமல்லாது ஆசியாவின் அதிக வயது மரம், உலகின் இரண்டாவது வயதான மரம் என்ற பெருமையும் இதற்கு இருக்கிறது...

லாங்கர்னிவ் யூ

முதல் இரண்டு அதிக வயதான மரங்கள் மட்டுமல்லாது உலகின் எந்த மரத்தோடும் போட்டிப் போடத் தயார் என இந்த "யூ" மரம் இங்கிலந்தின் நார்த் வேல்ஸ் லாங்கர்னிவ் கிராமத்தில் உள்ள "செயிண்ட் டிகெய்ன்ஸ் தேவாலயத்தில்" நின்று கொண்டிருக்கிறது. Brown Age என சொல்லக் கூடிய வெண்கல யுகத்தில் சுமார் 4000 வருடத்திற்கு முன்பு நடப்பட்ட இதன் மையப்பகுதி தற்போது சிதைந்திருந்தாலும் கிளைகளை ஊன்றி வாழ்ந்து வருகிறது. தேவாலயத்தில் இருப்பதால் இந்த மரத்தைப் பற்றிய கதைகளுக்கும் பஞ்சமில்லை. வேல்ஸ் புராணத்தின் படி ஏஞ்சலிஸ்டர் என்ற தூய ஆவி இந்த மரத்தில் வசிப்பதாக கருதப்படுகிறது. இதனை ஒருகாலத்தில் வேப்பமரத்தில் மாரியம்மாள் இருக்கிறாள் என்பதை கேலி கிண்டல் செய்த பிரிட்டிஷ் வம்சா வழியினர் நம்பி வருகின்றனர்...  

கிராண்ட் அபுலோ

ஸ்பானிய மொழியில் கிராண்ட் அபுலோ என்றால் "பெரிய தாத்தா" என்று பொருள். இந்த தாத்தாவிற்கு வயது மூவாயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என தாவரவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். ஆண்டிஸ் மலைகளை பூர்வீகமாகக் கொண்ட ஒரு உயரமான மர இனமான "ஃபிட்ஸ்ரோயா குப்ரெசாய்டுகளுக்கு" "அலெர்ஸ்" என்பது ஒரு பொதுவான பெயர் இருக்கிறது. கிராண்ட் அபுலோவும் ஒரு அலெர்ஸ் மரம்தான். சிலியின் அலெர்ஸ் கோஸ்டெரோ தேசிய பூங்காவிற்குச் சென்றால் இந்த பெரிய மரத்தை சந்திக்கலாம். இந்த மரத்தின் பல பகுதிகள் சிதைந்து 28 சதவீதம் மட்டுமே மீதமிருக்கின்றன... 

பாட்ரியர்கா டா ஃப்ளோரெஸ்டா


பிரேசில் நாட்டில் வாசுனுங்கா மாநில பூங்காவில் இந்த மரம் அமைந்துள்ளது. காட்டின் மூதாதையரான இந்த மரம் 3,020 ஆண்டுகள் பழமையானது. மழைக்காடுகளை உருவாக்கும் "மங்கிபாட்" குடும்பமான லெசிதிடேசியேவில் இந்த மரம் இருக்கிறது. ஊசியிலை அல்லாத இந்த மரத்தின் பெயர் "கரினியானா லீகலிஸ்". பிரேசில் மட்டுமல்லாது கொலம்பியா மற்றும் வெனிசுலாவில் இந்த மரங்கள் பரவலாக இருக்கின்றன. ஆனால் அவைகள் வெட்டப்பட்டு பல  புஷ்பாக்களால் கடத்தப்படுவதால் வேகமாக அழிந்துவருகின்றன. 

செனட்டர் 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் "பிக் ட்ரீ பார்க்" பூங்காவில் இந்த செனட்டர் மரம் சோகத்துடன் இருக்கிறது. சோகத்திற்கான காரணத்தை கடைசியில் பார்க்கலாம். அமெரிக்காவின் மிக வயதான மற்றும் மிகப் பெரிய சைப்ரஸ் மரம் இதுதான். செமினோல் இந்தியர்கள் மற்றும் பிற பூர்வீக பழங்குடியினருக்கு ஒரு காலத்தில் இந்த மரம் அடையாளமாக இருந்தது. 1927 ஆம் ஆண்டு அந்த பகுதியில் செனட்டராக இருந்த "செனட்டர் எம்.ஓ. ஓவர்ஸ்ட்ரீட்" என்பவர் தமக்கு சொந்தமான இந்த மரத்தையும் மேலும் சில பகுதியையும் பூங்கா அமைக்க இலவசமாக கொடுத்தார். அதற்கு பிறகுதான் இந்த மரம் பிரபலமானது. மேலும் செனட்டர் என்ற பெயரும் இதற்கு வந்தது. 1925 ஆம் வருட சூராவளியில் இதன் உயரம் பாதிக்கப்பட்டது. இருந்த போதிலும் அது வாழ்ந்து வர, 2012 ஆம் ஆண்டு போதை பெண் ஒருத்தி சிகரெட்டினால் ஏற்படுத்திய தீ விபத்தினால் இந்த மரம் முற்றிலும் தேசமடைந்து விட்டது. தற்போது புளோரிடாவில் இருக்கும் பூங்காவிற்கு சென்றால் தீயினால் தேசமடைந்து கருகிய மரத்தின் சிறு பகுதியை மட்டுமே காணமுடியும் என்பதுதான் சோகக் கதை. இதன் மரபனுவை வைத்து புதிய மரத்தை உருவாக்க முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது...

வௌவ்ஸ் ஆலிவ் மரம்



கிரேக்க தீவுகளில் ஒன்றான கிரீட்டில் உள்ள சானியா பிராந்திய அலகில், கோலிம்வாரி நகராட்சியின் அனோ வௌவ்ஸ் கிராமத்தில் இருக்கும் ஒரு ஆலிவ் மரம் இந்த பட்டியலில் அடுத்ததாக இருக்கிறது. இந்த மரத்திற்கு வயது 2000 - 3000. "சௌனதி" என்ற ஒருவகை ஆலிவ் மரத்துடன் ஒட்டுதல் செய்யப்பட்ட இந்த மரமே உலகின் பழமையான ஆலிவ் மரமாகும். அதோடு இந்த மரம் தற்போது வரை ஆலிவ் பழங்களை வழங்கி வருகிறது. மேலும் இந்த மரத்தின் ஆலிவ் பழங்களுக்கு கிராக்கியும் இருக்கிறது. 2004 ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் மற்றும் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த ஆலிவ் மரத்தின் கிளைகளிலிருந்து மாலைகள் செய்து கௌரவித்தனர்...

ஜோமன் சுகி.

எல்லாவற்றையும் விட எங்கள் தீவு மரம்தான் பழமையானது என ஜப்பான்காரர்கள் இன்றும் சண்டைபோட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் வயது 7000 வருடம் இருக்கலாம். ஆனால் ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஜப்பானின் யாகுஷிமாவில் அமைந்துள்ள "ஜோமன் சுகி" தீவில் இருக்கிறது இந்த மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய "கிரிப்டோமேரியா" மரம். கிரிப்டோமேரியா (அதாவது "மறைக்கப்பட்ட பாகங்கள்") என்பது சைப்ரஸ் குடும்பமான குப்ரெசேசியேவில் உள்ள கோன் மரங்களின் ஒரு இனமாகும். இதில் கிரிப்டோமேரியா ஜப்பானுக்கு மட்டுமே சொந்தமானதாகக் கருதப்படுகிறது...

நூறு குதிரை கஷ்கொட்டை மரம்

ஸ்பானிஷ் இராணி "கியுவானா" தனது நூறு மாவீரர்களுடன் இத்தாலியின் சிசிலியில் உள்ள மவுண்ட் எட்னா மலைப் பக்கம் சென்றுகொண்டிருந்தாள் அப்போது இடி மின்னலுடன் கடுமையாக மழை பொழிந்தது. அதனை கண்டு பயந்த அவள் தனது படையுடன் ஒரு மரத்தின் அடியில் தஞ்சம் புகுந்தாள். நூறு குதிரைகள் ஒதுங்கும் அளவிற்கு அந்த மரம் பரந்து விரிந்திருந்ததால் அன்றிலிருந்து "நூறு குதிரை கஷ்கொட்டை மரம்" என அழைக்கப்படுகிறது. இந்த புராணக் கதைக்கு வயது மூவாயிரம் ஆண்டுகள். அப்படியானால் இந்த மரத்திற்கு வயது அதைவிட அதிகம் இருக்கலாம்.

நம்பர் 6, 
லிங்குவாக்லோசா சாலை, 
சாண்ட்'ஆல்ஃபியோ,
எட்னா மலை கிழக்கு சரிவு,
சிசிலி,
இத்தாலி,
 
என்ற முகவரிக்குச் சென்றால் இந்த மரத்தைக் காணலாம். நூறு குதிரைகளை உள்ளடக்கும் அளவிற்கு இல்லாமல் முப்பது குதிரை அளவிற்கான சுற்றளவை இந்த மரம் கொண்டிருக்கிறது. உலகின் மிக அகலமான மரம் என்ற கின்னஸ் சாதனையையும் இது படைத்திருக்கிறது...  

ஜெனரல் ஷெர்மன்

உலகின் மிகப் பெரிய பத்து மரங்கள் அமெரிக்காவின் முக்கிய பூங்காவான "செக்கோயா" தேசியப் பூங்காவில் இருக்கிறது. கலிபோர்னியாவின் விசாலியாவின் கிழக்கே தெற்கு சியரா நெவாடாவில் இருக்கும் அந்த பூங்காவில்தான் அவைகளுக்கான தலைவனாக 2500 வயதான "ஜெனரல் ஷெர்மன்" மரமும் நிற்கிறது. "செக்வோயா (செக்வோயாடென்ட்ரான் ஜிகாண்டியம்)" என்ற ஒற்றைத் தண்டு மரமே இந்த ஜெனரல் ஷெர்மன். அமெரிக்க ஜெனரல் "வில்லியம் டெகும்சே ஷெர்மனின்" நினைவாக இந்த மரத்திற்கு ஜெனரல் ஷெர்மன் என்று பெயரிடப்பட்டது. உலகில் தற்போது இருக்க்கூடிய மரங்களில் மிகப்பெரிய மரமான இதன் சிறிய கிளை ஒன்று 2006 ஆம் ஆண்டு முறிந்து விழுந்தது. அந்த கிளையின் நீளம் 98 அடி, விட்டம் 6.6 அடி...

ஒரு மரம் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிடமிருக்கும் எல்லாவற்றையும் இயற்கைக்காக கொடுக்கிறது. ஆயிரம் ஆயிரம் வருடங்களாக அதை செய்துவரும் இந்த உலகின் பத்து வயதானவர்களை இயற்கை உலகிற்காக கொடுத்திருக்கிறது...