கொழுத்த ஒட்டகம்...
வழக்கமாக சாப்பிடுவதைவிட ஒரு ரெண்டு பெக் எக்ஸ்ட்ரா சாப்பிட்டால் என்ன வரும்? ... அதேதான்.... தத்துபித்துக்களின் தொகுப்பு இரண்டாம் பகுதியாக...
தனக்கு தேவையானது அங்கிருக்கிறதா?
அங்கிருப்பது தனக்கு தேவையா?
அவ்வளவுதான் தேடல்.
இறுதியில்
இன்றில் முடிவதுதான்
நாளை.
சுத்த சைவம் என திமிங்கிலங்கள் சொல்வதை
மீன்கள் நம்புவதேயில்லை.
பிரளயம் வந்தால்
படகு விற்பவனுக்கு
கொள்ளை லாபம்.
கலைந்துவிடும் மோசமான
கெட்டப் பழக்கம் கொண்டது
கனவுகள்.
பெறுவதற்கும்
பெற்றதற்கும் மட்டுமே
பிரார்த்தனை .
புலி பதுங்க ஒரே காரணம்.
கழுதைப்புலிக்கு
காரணம் ஆயிரம்.
குண்டுச் சட்டிக்கூட பரவாயில்லை
குதிரைக்கு பதில்
கழுதை எனும்போதுதான்!...
பிறருக்காக சிலை வைத்தால்
தன் சிலை
தானே தயாராகிவிடும்...
தினம் ஒரு வேடமிடுபவனனுக்கு
நிஜமுகம்
நினைவிருக்காது.
காட்டுவதெல்லாம்
பார்ப்பதற்கு தானே..
அதிஷ்டத்தில் அரசனான குள்ளநரிக்கு
சிங்க நடை
சிரமமாகத்தான் இருக்கும்...
குளிருக்கு பயந்தவன்
போகிற இடத்திலெல்லாம்
நெருப்பை பற்ற வைப்பான்.
கடைசிவரைக்கும்... அட!
கடைசியும்
அனுபவம்தான்.
பிணம் தின்று செரிப்பவனுக்குத்தான்
சுடுகாட்டு இராஜ்யம்...
தடுக்கி விழும்வரை
தனக்கென தனி விதி இருப்பது
தெரியாமல் போய்விடுகிறது...
பகலின் கண்ணோட்டத்தில்
ஆந்தை
படு சோம்பேறி ...
பொய்தான் புது துணி உடுத்தி திரியும்.
உண்மையின் கோலம்
அம்மணம்.
மறைக்கப்பட்ட
உண்மைகள்
ஒவ்வொருவருக்குள்ளும்
இருக்கின்றன.
வளைந்து வளர்வதுதான்
புடலங்காயின் இயல்பு.
இயற்கையின்
புணர்ச்சி விதியை மதிக்காத
ஒரே உயிரினம்
மனிதன்...
மேலோட்டமாக பார்த்தால்
எதுவுமே மாறவில்லை...
ஒரு வயதிற்கு மேல்
"இன்று வாழ்ந்தோம்"
என்பது மட்டும்
இன்றைக்கு போதுமானதாக இருக்கிறது...
நாஜிக்கள் நம்பியது
ஹிட்லர் கடவுள்...
இழப்பதும் மறப்பதும்
இருப்பதற்கு மேல்...
கொழுத்த ஒட்டகம்
பொதி சுமக்காது...