மார்கழி கிறுக்கல்கள்...
மார்கழி மாத அழகில் கோலமும் ஒன்று. இரை பொறுக்கும் சிற்றெறும்பென அந்த கோலத்தை வளையச் சுற்றி வர, இந்த கோலத்தை விட அந்த கோலம் அழகென கிறுக்கியவை இவைகள்...
ஒரு நாள் மயில்
ஒரு நாள் முயல்
ஒரு நாள் கிளி
வாத்து
குருவி
தாமரை
அல்லி
ரோஜா
ஒருநாள் பொம்மையென
நீயிட்ட கோலமெல்லாம்
நீயாக
மாதம் பன்னிரண்டும்மார்கழியாக வேண்டும்...
முப்பத்திரண்டில் தொடங்கி
எட்டு வரிசை
இரண்டில் முடியும்
புள்ளிகளை
மேலிருந்து கீழ்
கீழிலிருந்து மேல்
இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
வளைந்து
நெளிந்து
நகர்ந்து
நீயிணைக்கும்
சிக்குக் கோடு
மார்கழியையும்
சூடாக்கி தகிக்க
நாளையாவது
ரங்கோலி போடேன்...
நெற்றியில் நீலம்
மூக்கின் மீது பச்சை
உதட்டிற்கு கீழ் சிவப்பு
கன்னத்தில் கொஞ்சம் மஞ்சள்
கரம் சிரம் வெள்ளையென
இந்த கோலம்
அந்த கோலத்தை விட
அழகு...
இரை பொறுக்கும்
சிற்றெறும்பென
உன் கோலத்தையே
வளையச் சுற்றி வருவதெல்லாம்
வரைந்த போது
அவள் என்ன பேசினாள்
என்பதை
தூக்கிச் செல்லத்தான்...