அந்த சிறகு முளைக்கட்டும்.

ரு நல்லது கெட்டதுக்கு வெளிய தெருவுக்கு போக முடியுதா?.. ஊருடா இது?... ச்சேச்சே..சே..சே..(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்).

ஓரிரு நாட்கள் மழை பொழிந்தால் நமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. விவசாயம், உற்பத்தி, வியாபாரம், வேலை, படிப்பு, பயணம் என எல்லாவற்றிலும் தேக்கம் ஏற்பட்டுவிடுகிறது. மேற்கண்ட ஊராடா இது? சலிப்பும் வந்துவிடுகிறது. வருடம் முழுவதும் இத்தகைய நிலை ஓரிடத்தில் நீடித்தால் எப்படியிருக்கும்?.. 

அப்படிப்பட்ட இடங்கள் இந்த உலகில் இருக்கின்றன. இயல்பு வாழ்க்கை என்னவென்றே தெரியாத மக்கள் அங்கு வசிக்கின்றனர். வடகொரியா, சிரியா, பாலஸ்தீனம், சூடான், சோமாலியா, ஈராக், ஏமன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் பல இடங்கள் என பெரும் பட்டியலே இருக்கிறது. இங்கெல்லாம் இயற்கை விளையாடுவதில்லை இயற்கைக்கு மாறாக எதை எதையோ காரணம் காட்டி ஆட்சியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் காலங்காலமாக திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த பட்டியலில் நமது காஷ்மீரும் இருக்கிறது. 

ஆமாம்!.. காஷ்மீர் நமதா?.. 

இந்த கேள்விதான் அங்கு இன்றுவரை தொடரும் பிரச்சனையின் மையப்புள்ளி. இதனை தீர்க்க ராட்க்ளிஃப் பென்சிலையும் மவுண்ட்பேட்டன் டைரியையும் தேட வேண்டும். 

ஒரு காலத்தில் காஷ்மீர் உலகின் சொர்க்கம் என போற்றப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்னர் அது வாழத் தகுதியற்ற இடமாக மாறிப்போனது. 

விடுதலைக் கிளி 
கூண்டில் 

இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் காஷ்மீர் ஒரு அரசியல் விளையாட்டுக்களம். அந்த விளையாட்டிற்கு நடுவே அங்குள்ள மக்கள் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து பல வருடங்கள் ஆகிறது. அதைத்தான் இந்த குறும்படமும் சொல்கிறது. 

காஷ்மீரில் வசிக்கும் ஏழு வயது சிறுமி ஒருத்தி பள்ளிக்குச் செல்ல புறப்படுகிறாள். அவளது அம்மாவிடம் "சாப்பாட்டு பை எங்கிருக்கிறது" என கேட்கிறாள். எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அவள் அம்மா இருக்க, ஒருவித பேரமைதியுடன் இந்த குறும்படம் தொடங்குகிறது. பின்னர், அந்த சிறுமி ஒரு வெறிச்சோடிய தெருவைக் கடக்கிறாள். அங்கு கடைகள் அனைத்தும் அடைத்திருகின்றன. கதவு மற்றும் சுவர்களில் "ஆசாதி" மற்றும் "கோ இந்தியா கோ பேக்" போன்ற வாசகங்கள் வரையப் பட்டிருக்கின்றன. அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில், இரண்டு சிறுவர்கள் அவளிடம் “நவ்ஷீன் சீக்கிரம் வா, இல்லாவிட்டால் பள்ளியிலிருந்து உன்னை நீக்கிவிடுவார்கள்" என எச்சரிக்கிறார்கள். அவள் திடீரென நிற்கிறாள். பழைய நினைவுகள் அளுக்கு வருகிறது. முன்பொருநாள் தனது ஊரில் ஏற்பட்ட வன்முறையில் இருந்து அவள் தப்பியது நிழலாடுகிறது. அவள் வேகத்தை கூட்டி வீட்டிற்கு திரும்புகிறாள். 

மறுநாள் நவ்ஷீன் தனது அம்மாவை அழைக்கிறாள். அவர் பதிலளிக்காமல் இருக்கிறார். பின்னர் தனது சிறிய சகோதரன் அஹ்சானை எழுப்பி அழைத்துக்கொண்டு காஷ்மீரின் சலனமற்ற தெருக்களில் புகுந்து பள்ளிக்குச் செல்கிறாள்.

நீல நிரத்திலிருக்கும், அதனை சுற்றி சோலைகள் இருக்கும். அங்கு வசிக்கும் மக்கள் அமைதியாக இருப்பார்கள். நல்ல காற்று, உணவு, பழங்கள் எல்லாம் அங்கு கிடைக்கும். என அம்மா அன்றைய நாள் "வுலர்" என்ற ஏரியைப் பற்றிய கதை ஒன்றை சொல்கிறாள்.

விசித்திரமான சூழலுக்கு மத்தியில், நவ்ஷீனும் அஹ்சனும் ஒளிந்து விளையாடுகிறார்கள். ஒரு அலமாரிக்குள் கூட தனது தம்பியை தேடுகிறாள். அக்கா - தம்பி இருவரும் சண்டை போடுகிறார்கள், உடைந்த கட்டிடத்தின் மீது நடந்து செல்கிறார்கள், எதிரொலிக்கும் வகையில் ஒருவருக்கொருவர் பெயரைச் சொல்லி கூச்சலிடுகிறார்கள். அவர்களது செயல் காஷ்மீரின் வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது. அது கடினமான சூழ்நிலையிலும் இயல்பாக இருக்கும் குழந்தைகளின் மனதை காட்டுகிறது. காஷ்மீரில் இன்றுவரை தொடரும் கலவரங்களில் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அது இந்த கட்சிகளோடு பொருந்திப் போகிறது. 

ஒரு நாள் நவ்ஷீன் பூங்காவிற்கு செல்கிறாள். அங்கு ஒரு கூட்டுப் புளு அவள் கவனத்தை ஈர்க்கிறது. அவள் அதை வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு ஜாடிக்குள் அடைக்கிறாள். அதனுடன் உறங்குகிறாள், மேளம் வாசித்து அதனை எழுப்புகிறாள். சூரியனின் கதிர்களின் கீழ் அதை வைத்திருக்கிறாள், இரவில் பனி விழும்படி பார்த்துக்கொள்கிறாள். மின்னும் கண்களுடன் அதனை வளர்த்து வருகிறாள்.  

அடுத்தநாள் நவ்ஷீன் ஜாடியை எடுத்துக்கொண்டு நதிக்கு செல்கிறாள். அந்த நதி வுலர் ஏரியை சென்றடையும் என்ற நம்பிக்கை அவளுக்கு இருக்கிறது. ஒருநாள் ஜாடியில்லிருக்கும் கூட்டுப்புழுவும் சிறகு விரிக்கும், அது வுலர் ஏரியில் பழங்களை உண்டு அமைதியாக வாழும், என ஜாடியை ஆற்றிற்குள் விடுகிறாள். அவள் வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் என்றாவது ஒருநாள் அமைதி திரும்பி சாதாரண வாழ்க்கை சிறகு விரிக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த குறும்படமும் நிறைவடைகிறது. 


அய்யோ பாவ நிகழ்வுகள், பாதிப்புகளின் பதிவுகள், நேர்காணல், உண்மைக் கதை, கொஞ்சம் மசாலா கலந்த உண்மைக் கதை, ஒடுக்கப்பட்ட நிலை, பக்கம் பக்கமாய் வசனங்கள், இது எதுவும் இல்லாமல் பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுமியின் வாயிலாக இதுதான் காஷ்மீரின் அன்றாட வாழ்க்கை, இப்படித்தான் இங்கிருப்பவர்களின் நாட்கள் நகர்கிறது, என இந்த குறும்படத்தின் இயக்குனர் பதிய வைக்கிறார். ஒருநாள் இயல்பு வாழ்க்கை மாற சலித்துக்கொள்ளும் நம்மை அவர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறார். உண்மையில் நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே.

PANPOMPAR
Directed By - Archana Phadke
Written By - Archana Phadke
Music - Shane Mendonsa 
Cinematography - Awani Rai
Country - India
Language - Hindi
Year - 2019 

காஷ்மீரின் இடங்கள், கலவரம், அதனை தொடர்ந்து பேரமைதி, சிறப்பான காட்சிகள், ஒளிப்பதிவு, இயக்கம், குட்டிப் பெண் நவ்ஷீன் என இந்த குறும்படத்தைப் பற்றி ஆராய நிறைய விசயங்கள் இருக்கிறது. ஆனால் அந்த சிறுமியின் பட்டம்பூச்சி ஆசையைப் போல அங்கு வசிக்கும் மக்களின் சுதந்திர சிறகு முளைக்காதா? என்ற ஆவலே மேலோங்கி இருக்கிறது. காஷ்மீர் மட்டுமல்லாது உலகெங்கும் இந்த புதிய வருடத்தில் அந்த சிறகு முளைக்கட்டும்...