ஒரு கிராமம் ஒரு சாலை...
கூடை முடையலையோ... கூடை..
கட்டில் பின்னுரது...
பழைய இரும்புக்கு கோல..மாவே...
அம்மி கொத்துர..தே...
பாய்... கோரப் பா...யே..
கூவி விற்கும் இந்த குரல்களை கேட்டு எத்தனை வருடங்கள் இருக்கும்?...
கிராமங்களில் கூட இத்தகைய குரல்களை கேட்பது அரிதாகிவிட்டது. அவர்கள் விற்கும் பொருட்களும் அழிந்து விட்டது. இன்னும் வளர்ச்சி எனும் பாதையில் யானையாக நாம் பயணிக்க சிற்றெறும்பென இவர்களை மிதித்துவிட்டு சென்று கொண்டிருக்கிறோம். எறும்புகளை கொன்றுவிட்டு எதற்கும் ஆகாத பூச்சிகளை வளர்த்து கொண்டிருக்கிறோம். அதற்கு
Modernity என்று பெயர் வைத்திருக்கிறோம். இந்த நவீனத்துவம் நகரத்திலிருந்து கிராமத்திற்கு பரவி அதன் வளர்ச்சியை பார்க்காமல் பொருளாதாரத்தோடு கலாச்சாரம், பண்பாடு மற்றும் அழகியலையும் அழித்ததே உண்மை. அத்தகைய அழிவில் மேற்கண்ட எளிய நபர்களும் தொலைந்ததும் உண்மை. இந்த நேபாள நாட்டுத் திரைப்படம் ஒரு கூடை முடைபவனின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டது. கிராமத்திற்கு வரும் புதிய சாலை வசதியினால் அவனது வாழ்க்கை எவ்வாறு தடம் மாறுகிறது என நமக்கு காட்டுகிறது. அவன் மட்டுமல்ல அவனது கிராம சூழலும் நிலைமாறும் உண்மையை இந்த திரைப்படம் உணர்த்துகிறது.
'மைலா' என்பவன் ஒரு கூடை முடையும் தொழிலாளி, அவரது மனைவி 'மைல்' மற்றும் ஏழு வயது மகன் 'பிந்த்ரே' ஆகியோர் கிழக்கு நேபாளத்தின் மலைப் பகுதியில் எளிமையான கிராம வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அவர்களது கிராமத்திற்கு புதிதாக சாலை வசதி செய்யப்படுகிறது. அதன் மூலம் பேருந்து ஒன்றும் நகரத்திலிருந்து வந்து போகிறது. தினமும் வந்துபோகும் பேருந்துடன் அதுவரை அந்த கிராமம் கண்டிராத கோகோ கோலா,பீட்சா, டிவி, சினிமா, செல்போன் போன்ற நவீன கால பொருட்களும் நாகரீகமும் மெல்ல தவழ்ந்து வருகிறது. அந்த புதிய நாகரீகத்திற்கு தன் வீடு உட்பட மொத்த கிராமமும் பழகத் தொடங்க, மைலாவின் வாழ்க்கை அவிழத் தொடங்குகிறது. அதுவரை தான் கடைபிடித்துவந்த பாரம்பரியம், நடைமுறை, வாழ்க்கைமுறை இவற்றையெல்லாம் மாற்றிக்கொள்ளும் நிர்பந்தம் ஏற்படுகிறது. அது இறுதியில் பேராபத்தில் கொண்டுவிடுகிறது.
A rural village encounters ‘modernity’ in this heart-wrenching and heart-warming story...
இது ஒரு தனி மனிதனின் கதை அல்ல, ஒவ்வொரு கிராமமும் தொலைந்த கதை, தொலைந்து போகிற கதை. ஒரு சாலை கிராமத்தையும் நகரத்தையும் நாகரீகமாக இணைக்கும் கதை. நாம் கண்முன் நிகழும், நிகழ்கிற கதை. ஒரு வளர்ச்சியானது ஒரு முழுமையான வழியில் பார்க்கப்படாவிட்டால் அது எவ்வாறு சமத்துவமின்மையைக் கொண்டுவருகிறது என காட்டும் கதை. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், பொருளாதார பங்கீடு, கிராமப்புற வளர்ச்சி, என்றெல்லாம் இருக்க, அவைகளெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் என சொல்லும் கதை. உலகின் 50 சதவீதத்திற்கு அதிகமான செல்வத்தை 100 பேர் மட்டுமே கட்டுப்படுத்துவதாக ஆக்ஸ்பாம் கூறுகிறது. அதன் விளைவுகளை எடுத்துச் சொல்லும் கதை. இல்லாதவற்களுக்கும் இருப்பவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை பிரிக்கும் கதை. மேலும், விளையாட்டு, கேளிக்கூத்து, ஆடம்பரம், பொழுதுபோக்கு சுய இன்பம் (சுய தேவை), மாய நாகரீகம் இவற்றிற்கு அடிமையாகி நாம் தொலைத்த எளிய மனிதர்களின் ஒட்டுமொத்த கதை இந்த திரைப்படம்.
Gaun Aayeko Bato
A Road to a Village
Directed By - Nabin Subba
Written By - Mahesh Rai, Nabin Subba
Cinematography - Josh Herum
Music by - Heidi Li
Language - Nepali
Country - Nepal
Year - 2023
நேபாள மலைத் தொடர், அதில் ரேகை போல ஓடும் புதிய சாலை, அந்த சாலையில் ஊரும் பேருந்து என தொலைதூர காட்சிகளாகட்டும், ஊணர்வுகளை கதாபாத்திரங்கள் பிரதிபலிக்க அதை அருகிலிருந்து பதிவு செய்த காட்சிகளாகட்டும், குளத்தில் தெரியும் மைலாவின் முகமாகட்டும், ஒளிப்பதிவு இந்த திரைப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதைப் பற்றி தனியே ஆராய்ச்சி செய்யலாம். நாயகன் அவனது மனைவி மற்றும் அந்த சிறுவன், பக்கத்து வீட்டுக்காரர் என இந்த திரைப்படத்திற்கு கதாபாத்திரங்கள் அற்புதமான தேர்வாக இருக்கிறது. சிறுவனை தவிர்ப்பது இயலாத காரியம். பின்னணி இசையும் பக்க பலமாக இருக்கிறது. தந்தை மகனுக்கு இடையேயயான உறவு மற்றும் கலங்க வைக்கும் முடிவு திரைப்படம் முடிந்த பின்பும் மனதில் நீடித்திருக்கிறது. எதையும் திணிக்காமல் வெகு இயல்பாக இருக்கிறது. அது, நாமெல்லாம் எதை தொலைத்துவிட்டு, யாரை தள்ளிவிட்டு, எதற்காக மாறிக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த திரைப்படம் ஒருவித வெறுமையை தரும். வளர்ச்சியின் நாகரீகத்தின் முதலாளித்துவத்தின் புரிதலை கொடுக்கும். அடுத்தமுறை
கூடை முடையலையோ... கூடை..
கட்டில் பின்னுரது...
பழைய இரும்புக்கு கோல..மாவே...
அம்மி கொத்துர..தே...
பாய்... கோரப் பா...யே..
என எங்காவது கேட்க நேர்ந்தால் ஒரு வித கலக்கத்தையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை...