மழையை ரசிக்கலாம் வாருங்கள்.
மழையை ரசிக்கலாம் வாருங்கள் என்றால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். உனக்கென்னப்பா! சுகவாசி, safe, secure, incubator வாழ்க்கை வாழ்கிறாய் என்பார்கள். சென்னை பெங்களூர் போன்ற நகரவாசிகள் அடிக்கவே வந்துவிடுவார்கள். மழை ரசனை நம்மிடமிருந்து சற்று தூரம் தள்ளிப் போய்விட்டது. அதற்கு காரணம் ஓடிக்கொண்டே இருக்கும் இந்த நவீன வாழ்க்கை, மழை ஏற்படுத்தும் சேதங்கள், மற்றும் மழை செய்திகளை பரப்பும் பயம் தின்று கொழுக்கும் ஊடகங்கள். இவையெல்லாம் இணைந்ததால் மழைக்காலம் வந்தாலே ஒருவித வெறுப்பு வந்துவிடுகிறது. ஒருகாலத்தில் பருவகாலமாக இருந்த அது பயந்த காலமாக மாறிவிட்டது. மற்றபடி மழை அப்படியேதான் பொழிகிறது. உள்ளுக்குள் மழை பிடிக்கத்தான் செய்கிறது. இந்த நேரத்தில் சிறுவயதில் கிராமத்தில் மழைக்காலத்தில் இருந்த நினைவுகள் வருகிறது. அதனை வைத்து கிறுக்கியும் இருக்கிறேன்.
இதோ வந்துட்டேன் என
லெட்சுமியின் குரலுக்கு
தலையில் கித்தான்
போட்டுக்கொண்டு
கொட்டிலுக்கு ஓடுகிறார்
அப்பா,
சனியன் இங்கேயே
புலுக்க போட்டுடிச்சி என
அம்முவை திட்டிக் கொண்டே
அதற்கான
தழையைப் போடுகிறாள்
அம்மா,
எதோவொரு பாடலையும்
வறுத்த கடலையையும்
கொறித்துக்கொண்டே
அடைகாக்கும் சிட்டுவிற்கு
நொய்யரிசி வைக்கிறாள்
அக்கா,
எப்போதும்
சண்டையிட்டுக்கொள்ளும்
புஜ்ஜிக்கு
கக்கத்தை இறுக்கி
கதகதப்பை
தந்துகொண்டிருக்கிறது
மணி,
நனைந்து களைத்த
கருச்சிட்டானுக்கு
மறைக்கவும்
துடைக்கவும்
இலையை நீட்டுகிறது
பூவரசு,
எல்லோருக்கும்
பொழியும் மழை
எதையோ நினைவுபடுத்த
ஏதுமற்ற சடலமாய்
வானத்தையும்
விழும் துளிகளையும்
வெறித்துக் கொண்டிருக்கிறேன்
நான்.
அத்தகைய நினைவுகள் தொடர, சமீபத்தில் Rain walk என சொல்லக் கூடிய சில வீடியோக்களை காண நேர்ந்தது. அது விலகிப்போன மழை ரசனையை அருகில் கொண்டு வந்தது. அந்த வீடியோக்களில் இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற உலகின் சில நாடுகளின் கிராமங்களில் பொழிந்த மழையை அழகாக காட்சி படுத்தியிருந்தனர். மழை சப்தத்துடன் அதனை ரசிக்க ஒரு வித புதுவித சிலிர்ப்பைத் தருகிறது. இந்த வீடியோக்களை யூடியூப் சேனல் நடத்தும் சாதாரண நபர்கள் பலர் எடுத்திருக்கிறார்கள். எங்க ஊரில் எப்படி மழை பொழிகிறது பாருங்கள் என காட்டியிருக்கிறார்கள். இந்த வீடியோக்களில் மழை பிரதானமாக இருந்தாலும் அவற்றிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் கிராமம் சார்ந்த ஏழ்மை நிலையையும் காணமுடிகிறது. ஆனால் மழை எல்லோருக்கும் பொதுவானது. அதை அங்கு வசிப்பவர்கள் ஏற்கொண்டு வாழ்வதை உணரமுடிகிறது.
தன்னை சபிக்கும்
உயிர்களுக்கும்
மழை
வரம்
என்பது உண்மைதானே. வேண்டாம் என்றாலும் மழை மழைதான். அதைத்தான் இந்த வீடியோக்கள் காட்டுகின்றன. உங்களுக்கும் மழை பிடிக்கும் என நினைக்கிறேன். இந்த வீடியோக்களும். சரி!... மழையை ரசிக்கலாம் வாருங்கள்.