நவரத்தினம் யாருக்கு? ஒரு கதையும் சில நீதிகளும்.

ரு நாட்டை ராஜா ஒருவர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். அந்த ராஜாவுக்கு விலை மதிப்பில்லாத நவரத்தினம் ஒன்று கிடைத்தது. அந்த நவரத்தினத்தை நாட்டின் சிறந்த குடிமகனுக்கு கொடுக்க அவர் விரும்பினார். அதுவே நமது ராஜாவாக இருந்தால் அந்த நவரத்தினத்தை நான்காக உடைத்து தன்நலம் விரும்பிகளுக்கு தானமாக கொடுத்திருப்பார். அதுபோல் இல்லாமல் இந்த ராஜா அவசரமாக சபையை கூட்டி தனது விருப்பத்தை தெரிவித்தார். சபை சிறிது நேரம் அமைதியானது. 

நவரத்தினம் யாருக்கு?

முதன் மந்திரி முதலில் எழுந்தார். 

மன்னா! நானே நாட்டின் முதன் மந்திரி, நீங்கள் அந்தப்புரம் இந்தப்புறம் எந்தப்புறம் இருந்தாலும் நான்தான் இந்த நாட்டை பொறுப்பாக காத்து வருகிறேன். ஆகவே, நவரத்தினம் எனக்கு கொடுக்க சிறந்தது என்றார்.

அடுத்ததாக படைத் தளபதி, நானே பல நாடுகளை போரிட்டு வென்றேன். சென்ற போரில் விலாவில் சொருகிய வேல் கம்பு காயம் கூட இன்னமும் ஆறவில்லை, நானே வீரன், சிறந்த குடிமகன் என்றார்.

ராஜகுரு தன் பங்கிற்கு நானே ராஜாவின் குரு, நானே சிறந்த குடிமகன் என்றார்.

காக்கா பிடிப்பவர்கள், கால் பிடிப்பவர்கள், கூஜா தூக்குபவர்கள், துதி பாடுபவர்கள், தூபம் போடுபவர்கள், கூன் விழுந்தவர்கள் என பலர் ராஜ சபையில் இருப்பார்கள் அல்லவா?.. அவர்களும் தம் பங்கிற்கு நவரத்தினத்தை வேண்டினர்.. ஆனால் இவர்களில் யாருக்கும் கொடுக்க ராஜாவிற்கு விருப்பமே இல்லை.

அதே சபையில் நல்ல அமைச்சர் ஒருவர் இருந்தார். மன்னா!.. யார் ஒருவன் தன்னலம் பார்க்காமல், எந்தவொரு பலனும் எதிர்பாராமல் சேவை செய்கிறானோ அவனுக்கு இந்த நவரத்தினத்தை கொடுங்கள் என்று ஒரு யோசனையை கூறினார். மன்னருக்கும் அதுதான் சரியெனப் பட்டது... 

தன்னலம் பார்க்காதவன் யார்?

அரண்மனையில் அப்படி யாருமே இல்லை. நீதி, நேர்மை, நியாயம் என ஒருசிலர் இருந்தாலும், அரசவேலை செய்பவர்களுக்கு கிடைக்கும் வெகுமதியைப் பற்றி சொல்லவா வேண்டும். ஆகவே, அந்த ஒருவனைத் தேடி மன்னர் ஒரு சிறு படையுடன் ஊருக்குள் சென்றார். 

ஊரில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு வேலையை செய்து வந்தனர். அதற்கான பலனை பெற்று வந்தனர். ராஜா தேடிய ஒருவன் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் அவர் அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் அவருக்கு யோசனை ஒன்று தோன்றியது. 

ராஜா தனது படை வீரர்களை கூப்பிட்டார். வழியில் ஒரு ஓரத்தில் இருந்த பெரிய பாறாங்கல்லை சாலையின் நடுவே நகர்த்தி வைக்கச் சொன்னார். பாறாங்கல் அசையாமல் இருக்க அதன் அடியில் ஒரு சிறு கல்லை வைத்து அவற்றை சருகுகளால் மறைக்கச் சொன்னார்.. தான் உட்பட அனைவரையும் ஓரிடத்தில் ஒளித்துகொண்டு அந்த பாறாங்கல்லை 'யார் ஒருவன் அப்புறப்படுத்தி பாதையை சரிசெய்கிறான்' என பார்க்கச் சொன்னார். அவ்வாறு செய்பவனுக்கே இந்த விலைமதிப்பில்லாத நவரத்தினத்தை கொடுக்கப் போகிறேன் என்றார்.

யார் அவன்?

முதலாவதாக அந்த வழியே ஒருவன் வந்தான். பாதையிலிருக்கும் பாறாங்கல்லை அவன் சட்டைசெய்யவே இல்லை. ஒரு ஓரமாக ஒதுங்கிச் சென்றான்.

இரண்டாவதாக ஒருவன் வந்தான். 'இது என்ன பாறை இங்க கிடக்கு?'... என அதனை சுற்றி வந்தான். சிறிது நேரம் அதனை பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவனும் ஒதுங்கிச் சென்றான்.

அடுத்ததாக நான்கு நண்பர்கள் அந்த வழியில் வந்தனர். பாறாங்கல் பாதையில் கிடப்பதைப் பற்றி போசினார்கள். நண்பர்களில் ஒருவன் 'நாமெல்லாம் ஒன்னா சேர்ந்து இந்த கல்லை அந்தப் பக்கம் நகர்த்தலாம்' என்றான். அதற்கு ஒருவன் 'நமக்கு எதுக்கு தேவையில்லாத இந்த வேலை, இதனால் நமக்கு என்ன கிடைக்க போகுது, வாங்க போகலாம்' என்றான். அவர்களும் அங்கிருந்து சென்றனர்.

மன்னர் பொறுமையிழந்தார். சரி! இன்னும் சிறுதுநேரம் மறைந்திருக்கலாம் என நினைத்தார்.

மாட்டுவண்டி ஒன்று அந்த வழியில் வந்து நின்றது. அதிலிருந்து வண்டிக்காரன் ஒருவன் இறங்கி அந்த பாறாங்கல்லைப் பார்த்தான். அதன் பக்கத்திலிருக்கும் இடத்தையும் பார்த்தான். அங்கிருந்த செடிகொடிகளை அகற்றி ஒரு புதிய பாதையை ஏற்படுத்தினான். மாட்டுவண்டியை ஓட்டிக்கொண்டு கல்லைச் சுற்றி சென்றான். 

மாட்டுவண்டிக்கு பிறகு சிறிது நேரத்தில் குதிரைவண்டி அந்த வழியில் வந்தது. எந்த சிரமமும் இல்லாமல் மாட்டுவண்டி ஏற்படுத்திய புதிய தடத்தில் அது வேகமாக சென்று மறைந்தது. 

மறைந்திருந்த மன்னருக்கு ஏமாற்றமாக இருந்தது. சரி! எல்லோரும் அரண்மனைக்கு புறப்படலாம் என நினைத்த வேளையில், அந்த வழியில் ஒருவன் வந்தான். பாறாங்கல்லை நெருங்கினான், சுற்றி வந்தான், அதனை நகர்த்த முயற்சி செய்தான். 

மன்னருக்கு ஆர்வம் தலைக்கேறியது. அவன் என்ன செய்கிறான் என அனைவரும் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். 

அவனோ பாறாங்கல்லை நகர்த்த படாதபாடு பட்டு களைத்துப் போனான். வியர்வை சிந்த அந்த கல்லின் அடியில் சாய்ந்தான். அவன் கையில் அந்த பாறாங்கல் நகராமல் இருக்க வைக்கப்பட்ட சிறிய கல் தென்பட்டது. அடடா!  என எழுந்து அந்த சிறிய கல்லை எடுத்துவிட்டு பாறாங்கல்லை உருட்டி பாதையை சரி செய்தான். 

ராஜா துள்ளி எழுந்தார். 'தூக்குங்கடா செல்லத்தை' என்றார். நவரத்தினத்தை சொன்னபடி அவனுக்கே கொடுத்தார்.

ராஜபார்வையில் பார்த்தால் தன்னலம் பார்க்காமல் தன்வேலை செய்பவனுக்கு எல்லாம் கிடைக்கும் என்பது இந்த கதையின் பொது நீதி ஆகும். ஆனால் ஆழ்ந்து பார்த்தால் மேலும் சில நீதிகள் இந்த கதையில் இருக்கின்றன. நவரத்தினத்தை யாருக்கு கொடுக்கலாம் என ராஜா பாறாங்கல்லை வழியில் வைத்தார் அல்லவா! அந்த வழியிலிருந்து அந்த சில நீதிகளை பார்க்கலாம் வாருங்கள்.

முதலாவதாக அந்த வழியில் வந்த ஒருவன், ராஜா வைத்த பாறாங்கல்லை கண்டுகொள்ளவே இல்லை. 

நீதி 1- எதையும் சட்டை செய்யாதவனுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

இரண்டாவதாக வந்த ஒருவன் பாறாங்கல்லைச் சுற்றி வேடிக்கை பார்த்துவிட்டு சென்றான். 

நீதி 2 - வேடிக்கை மட்டும் பார்ப்பவனுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

மூன்றாவதாக நான்கு நண்பர்கள் அவ்வழியே வந்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு அந்த பாறாங்கல்லை நகர்த்தும் எண்ணம் இருந்தது. ஆனால் அவனது நண்பர்களின் பேச்சைக் கேட்டு வேண்டாத வேலை என அவன் சென்றுவிட்டான். 

நீதி 3 - தன்னைச் சுற்றி சரியில்லாத நபர்களை  பெற்றிருக்கும் ஒருவனுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.

அடுத்ததாக மாட்டுவண்டிக்காரன் தனக்கென ஒரு குறுக்கு வழியை ஏற்படுத்தி பாறாங்கல்லை சுற்றி சென்றான்.

நீதி 4 - குறுக்கு வழியில் செல்பவன் தற்காலிகமாக பாதையை கடந்தாலும், நிரந்தரமாக எதுவும் கிடைக்கப் போவதில்லை. 

அடுத்ததாக குதிரைவண்டிக்காரன் மாட்டுவண்டிக்காரனை பின்பற்றியே சென்றான்.

நீதி 5 - ஏன்? எதற்கு? எப்படி? என ஆராயாமல் அடுத்தவன் ஏற்படுத்திய வழியில் செல்பவனுக்கு எதுவும் கிடைப்பதில்லை. 

கடைசியாக வந்தவனுக்கு மேற்கண்ட எந்த பலவீனமும் இல்லை. முயற்சி செய்தான். நவரத்தினத்தை பெற்றான். 

இந்த கதையில் ராஜா வைத்த பாறாங்கல்லைப் போல நம் வாழ்க்கைப் பாதையிலும் தடங்கல்கள் வரலாம். அதை நாம் கண்டுகொள்ளாமல் செல்லக் கூடாது. வேடிக்கை பார்க்கக் கூடாது. அதனை கடக்க நல்ல நபர்களை பொற்றிருக்க வேண்டும். குறுக்கு வழியையும், யாரோ ஏற்படுத்திய வழியையும் ஆகவே ஆகாது. கடைசியாக வந்தவன் பாறாங்கல்லை நகர்த்த முயற்சித்தது போல தடங்கல்களை எதிர்கொள்ள வேண்டும். களைத்துபோய் சோர்ந்து உட்கார அவனுக்கு கிடைத்த சிறிய கல்லைப் போல ஒரு பெரிய தடங்கலை கடக்க சிறியதொரு துருப்பு கிடைக்கும் அதை கண்டுபிடித்துவிட்டால் வாழ்க்கையின் விலைமதிக்க முடியாத நவரத்தினம் நமக்குதான்...