மனிதன் இல்லாத பூமி...

ல மில்லியன் வருடங்களுக்கு முன்பு இந்த பூமி வெற்றிடமாக இருந்தது. பிறகு வாயுவாக, பாறையாக, நீராக இருந்தது. பிறகு மீன்களாக, தாவரங்களாக, பூச்சிகளாக, டைனோசர்களாக, விலங்குகளாக நிறைந்திருந்தது. தற்போது மனிதர்களால் நிரம்பியிருக்கிறது. இந்த பூமி முழுவதும் வியாபித்திருக்கும் மனிதன் மற்றதைக் காட்டிலும் சிறந்தவன். எப்படி தோன்றியது? அதிலிருப்பவைகள் எவ்வாறு உருவாகின? நாம் எங்கிருந்து வந்தோம்? என எல்லாவற்றையும் அவன் தெரிந்து வைத்திருக்கிறான். அதனால் அவனது கட்டுப்பாட்டிற்குள் இந்த பூமி இருக்கிறது. சொல்லப் போனால் இந்த பூமியை ஆள்பவன், புத்திசாலித்தனமான, சுயநலம் மிக்க, பேராசை பிடித்த, கேளிக்கை நிறைந்த, அக்கறையற்ற, அலட்சியமான மனிதன். கடவுளும் அவன்தான். அந்த மனிதன் தனது தேவைக்காகவும் தன்னை நிரூபிக்கவும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இயற்கைக்கு மாறாக பல செயல்களை செய்து ஆட்சி செய்து வருகிறான். அத்தகைய மனிதன் இந்த பூமியில் திடீரென இல்லாமல் போகிறான் என வைத்துக் கொண்டால் என்னவாகும்? .. அதனை அழகாக விவரிக்கும் டிவி தொடர்தான் "Life after People".

இந்த பூமியில் மனிதன் இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறதா?.

Human extinction

விண்கற்கள் அல்லது சிறு கோள்களின் தாக்குதல்கள், எரிமலை வெடிப்பு, உலகளாவிய அணு அழிவு, உயிரியல் போர்கள், பேரழிவு ஆயுதங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு, காலநிலை மாற்றம் இவற்றினால் மனித அழிவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் அல்லது சுய-பிரதி செய்யும் நானோபோட்டுகள், போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களாலும் மனிதன் அழிந்து போவான். இயற்கையை காட்டிலும் செயற்கையாக மனிதனே மனிதனை அழித்துக் கொள்வதற்கு அதிக வாய்புகள் பிரகாசமாக இருக்கிறது. 

மனிதன் இல்லாத பூமி எப்படி இருக்கும்?...

பூமி காலப் போக்கில் மாறத் தொடங்கும். அதாவது மனிதன் தனக்காக உருவாக்கி வைத்திருப்பதை அழிக்க சில வருடங்கள் அது எடுத்துக் கொள்ளும். தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் பல்கிப் பெருகும். சுருக்கமாக தன் வளர்ச்சியிலிருந்து அது பின்னோக்கிச் செல்லும். 

டிவி தொடருக்கு வருவோம்.  

இந்த தொடர் மனிதன் இந்த பூமியில் இல்லாமால் போக அவன் உடல் சிதைவதில் தொடங்குகிறது. பிறகு அவன் வசிப்பதற்காக உருவாக்கிய நகரங்கள் என்னவாகிறது என்பதை காட்டுகிறது. 

அமெரிக்கா தொடங்கி அமிஞ்சிக்கரை வரை இருக்கும் கட்டிடங்கள் என்னவாகும், அவையெல்லாம் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும். 

திடீரென விழுவதும் முளைப்பதுவுமாக உலகமெங்கும் இருக்கும் பெரும் சிலைகள் என்னவாகும். மேலும், உலக அதிசயங்கள், நினைவுச் சின்னங்கள், புராதான இடங்கள், மத வழிபாட்டு தளங்களின் கதி என்ன?

இராணுவ தளவாடங்கள், ஆராய்ச்சி கூடங்கள், அணுஉலைகள், வின்வெளி நிலையங்கள், அணைக்கட்டுகள், மின்நிலையங்கள்,  இவைகளெல்லாம் என்னவாகும். 

சுற்றுலா தளங்கள், கேளிக்கை விடுதிகள், மிருக காட்சி சாலைகள் என்னவாகும். என்பதை இந்த தொடர் விவரிக்கிறது. 

அதனோடு மனிதன் பாதுகாத்துவரும் அணு ஆயுதங்கள், அணுக் கழிவுகள் மற்றும் அபாயகரமான வேதி பொருட்கள் இவற்றால் எத்தகைய பாதிப்பு நிகழும், பிளேக் கொரோனா, சார்ஸ் போன்ற நுண்ணுயிர்களும், பூஞ்சைகளும், பாசிகளும் இந்ந பூமியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என அறிவியல் பூர்வமாகவும் இந்த தொடர் விளக்குகிறது.

பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் காணாமல் போனால் என்ன நடக்கும்? இது நாம் எப்படி மறைந்து போகிறோம் என்பது பற்றிய கதையல்ல... நாம் விட்டுச் செல்லும் உலகம் என்னவாகும் என்பது பற்றிய கதை.



உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மேலும் சில வல்லுநர்கள் இணைந்து மனிதன் விட்டுச் சென்ற பூமியின் நிலையை இந்த தொடர் முழுவதும் விவரிக்கின்றனர். அவற்றை இந்த பூமி சந்திந்த முந்தைய நிகழ்வுகளோடு ஒப்பிடுகின்றனர். மொத்தம் இரண்டு சீசன்கள் 20 எபிசோடுகள் என 2009 ஆம் ஆண்டு ஹிஸ்ட்ரி சேனலில் ஒளிபரப்பான இந்த தொடர் அதே சேனலில் அவ்வபோது மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அமேசான் பிரைமிலும் கிடைக்கிறது. சுற்றசூழலை எடுத்துக்கொண்டால் நமக்கு பிறகு பெயர், புகழ், பணம் இவைகள்தான் நிலைத்திருக்கும். (அதை நோக்கிதான் நம் ஆட்டமும், பாட்மும், ஓட்டமும் இருக்கிறது).  அதனை போலவே சுற்றுச்சூழலை எடுத்துகொண்டால் நமக்கு பிறகு நாம் வசித்த பூமி எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள இந்த  தொடர் உதவும்...