அலாரம் பாடல்கள்...
விடை தெரியாத காத்திருப்பில், நெரிசல் நிறைந்த பேருந்து பயணத்தில், உழைத்த களைப்பில் தூக்கம் பிடிக்காத விழிப்பில், கோபத்தில், சோகத்தில், விரக்தியில், தனிமையில், அப்படிப்பட்ட சில பில், தில், யில் சந்தர்ப்பங்க...ளில் நமக்கு பிடித்த பாடல் எங்கிருந்தோ வந்து எதேச்சையாக நமது காதிற்குள் நுழைந்தால் நாம் என்ன செய்வோம்?...
நமது பிரச்சனைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு அந்த பாடலுக்கு செவி கொடுப்போம். ஒரு தியானம் போல, ஆசுவாசம் அடைந்தது போல, எதையோ மறந்தது போல, யாரையோ நினைத்தது போல, மேலும் சில போல... . அந்த பாடலில் மெய் மறப்போம். கைவிரல் தானாகவே தாளம் போடும், கால்களுக்கு இருப்பு கொள்ளாது, உதடு முணுமுணுக்கத் தொடங்கும். அட டா! என்ன பாட்டு ... ச்சே.. என மனதிற்குள் சொல்லிக் கொள்வோம்...
ஒரு பாடல் நமக்கு பிடிக்க காரணம். அதன் தேர்ந்த இசை, இயல்பான வரிகள், நல்ல குரல் வளம், என எல்லாம் இருக்க, அந்த பாடலை நாம் கேட்ட தருணங்களே அதனை சிறப்பானதாக ஆக்குகிறது. அது ஒரு ரேடியோ காலம், ஒலியும் ஒளியும் காலம், பள்ளி, கல்லூரி இளமைக் காலம் என கால நினைவுகளாக அது தங்கி விடுகிறது. 'இப்பெல்லாம் வர பாட்ட கேட்கிற மாதிரியா இருக்கு' என அங்கலாய்க்க அதுவே காரணம். அவனுக்கு அல்லது அவளுக்கு இந்த பாடல் பிடிக்கும், என நம்மை பிரிந்தவர்களைக் கூட ஒரு பாடல் நினைவு படுத்தக் கூடும்...
அத்தகைய நமக்கு பிடித்த பாடல்களை நாம் கேட்க என்ன செய்யலாம்?.
நம்முடன் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் செல்போனில் ஒரு சில நிமிடங்களில் பதிவிரக்கம் செய்து சேமித்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றை கேட்க தனியாக நேரம் ஒதுக்க நம்மால் முடிவதில்லை. செக்குமாடு போல் உழன்று கொண்டிருக்கிறோம், சவாரி குதிரையைப் போல் ஒரு எல்லையை வைத்திருக்கிறோம், கழுதை பாரத்தை தூக்கியபாடியே திரிகிறோம், யானையளவு யாசக தேவை நமக்கு இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு நாளின் நேரம் போதுவனா என்கிறது. இந்த போதுவனா நேரத்தில் நமக்கு பிடித்த பாடலை முன்பே சொன்னது போல் எதேச்சையாக கேட்க ஒரு வழியும் இருக்கிறது...
நம்மிடம் எப்போதும் வெளி உறுப்பு (Out side orgen) போல ஒட்டியிருக்கும் செல்போனில் அலாரம் என்ற பகுதி இருக்கிறது. தூக்கி விழிக்க மட்டும் பயன்படுத்தும் அதனை நமக்கு பிடித்த பாடல்களை குறிப்பிட்ட நேரத்தில் ஒலிக்கும்படி செய்யலாம்...
அதிகாலை,
அலுவலக காலை,
பதினோரு மணி டி டைம்,
மதியம் சா.மு,
மதியம் சா.பி,
அந்தி மாலை,
வீடு திரும்பல்,
விழி மூடும் முன்
என, ஒரு நாளின் நேரத்தை சில பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். அந்த பகுதியின் குறிப்பிட்ட நேரத்தை அலாரமாக உருவாக்கி, உங்களுக்கு பிடித்த பாடல்களை அலாரம் டோனாக வைத்துவிடுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும், என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், வேண்டாம் என்றாலும், உங்களுக்கு பிடித்த பாடல் உங்களை வந்தடையும். ஒரு தியானம் போல, ஆசுவாசம் அடைந்தது போல, எல்லாவற்றையும் மறந்தது போல, யாரையோ நினைத்தது போல அந்த நேரத்தின் அழுத்தத்திலிருந்து விடுபட அது நிச்சையம் உதவும். வாரம் ஒருமுறை பாடல்களை மாற்றியும் அமைத்துக் கொள்ளலாம்...
அதிகாலையில் - மார்கழிப் பூவே (மே மாதம்)
அலுவலக காலையில் - பில்லி ஜீன் (மைக்கேல் ஜாக்சன்)
பதினோரு மணி - நிலா காய்கிறது (இந்திரா)
மதியம் சா.மு - கேளடி கண்மணி (புதுபுது அர்த்தங்கள்)
மதியம் சா.பி - கரிசல் தரிசல் (தாஜ்மஹால்)
அந்தி மாலை - ஜாவோ பாக்கி போலோ (அந்தாகின்)
வீடு திரும்ப - கேந்தாஃபூல் (டெல்லி 6)
விழி மூடும் முன் - பூவே செம்பூவே (சொல்ல துடிக்குது மனசு)...
இவைகள் அடியேன் வைத்திருக்கும் அலாரம் பாடல்கள். நீங்களும் முயற்சித்து பாருங்களேன்...