பத்து பணக்கார பழங்கள்.


ன்னது! ஆப்பிள் ஒரு கிலோ  250 ரூபாயா? 

மாதுளம் பழம் 150 ரூபாயா?

திராட்சை 100, 

சாத்துக்குடி 90, 

சப்போட்டா 80 ரூபாயா?...

'முன்ன பின்ன மார்க்கெட் பக்கம் வந்தா தெரிஞ்சிருக்கும்' என அன்பானவளின் அதட்டலுக்கு பிறகு பழங்களின் விலையை தெரிந்து கொண்டேன். அதைப் பற்றி யோசித்தேன். கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு எல்லாவற்றின் விலையும் ஏணியில் ஏழுபடியை ஒரேடியாக தாண்டியது போல் ஏறியிருக்கிறது. பற்றாக்குறைக்கு மூச்சு வாங்குவதைத் தவிர எதை வாங்கினாலும் ஏக போக வரி விதிப்பு வேறு. இதற்கு பழங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? என நினைத்தேன். அதனோடு நாம் சாதாரணமாக உண்ணும் பழங்களே இவ்விலை இருக்க, உலகின் விலையுயர்ந்த பழங்களைப் பற்றிய எண்ணமும் வந்தது. தேடுதலுக்கு பின்பு அவற்றைப்பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

இயற்கையின் அற்புத வரம் பழங்கள். நான்வெஜ் சலித்து நடுவே நான் வெஜ் என இடைவெளி விட்டபோது மனிதன் ஊட்டச்சத்திற்காக பழங்களையே எடுத்துக்கொண்டான். பழத்தை கடித்ததால்தான் இன்றைய மனிதன் உருவாகினான் என்ற பழம்-பெறும் கதைகளும் இருக்கிறது. பழங்கள் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அத்தகைய பழங்களில் அவற்றின் சுவை, வடிவம், மற்றும் அரிதான தன்மைக்காக விலையுயர்ந்ததாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட உலகின் விலையுயர்ந்த பத்து பணக்கார பழங்களைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள். 


யூபாரி கிங் மெலன்.

இதில் முதலாவதாக இருப்பது ஜப்பானில் விளையும் "யூபாரி கிங் மெலன்" என்ற ஒரு முலாம்பழமாகும். ஹெக்டர் தீவுகளில் விளையும் இந்த பழம் அதித சுவை கொண்டது. கலப்பினமான இது புதுமையான முறையில் பயிரிடப்படுகிறது. ஜப்பான் காலண்டரின் ஏழாவது மாதத்தில் கொண்டாடப்படும் பேய்களுக்கான திருவிழாவில் இந்த பழம் பரிசாக வழங்கப்படுகிறது (பேய்களுக்கல்ல, பிடித்தவர்களுக்கு). அப்போதுதான் இது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு திருவிழாவில் இந்த முலாம்பழம் ஜோடி 2490000 ரூபாய்க்கு ஏலம் போனது. இன்றும் இந்த பழம்தான் உலகின் விலையுயர்ந்த பழமாக இருக்கிறது. சாதாரண நாட்களில் இதை வாங்க நினைத்தால் கூட 830000 ரூபாய் வேண்டும். இலட்ச ரூபாய் பழமான அது நிஜமாகவே கிங்தான்... 


டென்சுக் தர்பூசணி.

அடுத்ததாக "டென்சுக் தர்பூசணி" உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த பழங்களின் பட்டியலில் இருக்கிறது. பொதுவாக தர்பூசணிகளின் வெளிப்புறம் பச்சை நிறத்தில் இருக்கும். இந்த டென்சுக் தர்பூசணி கருப்பு நிறம் கொண்டது. ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் பிரத்தியேகமாக பயிரிடப்படும் இந்த தர்பூசணிகள் அவற்றின் தனித்தன்மை மற்றும் அலாதியான இனிப்பு சுவைக்காக கொண்டாடப்படுகிறது. அதிகபட்சம் 11 கிலோ எடை கொண்ட இதன் விலை 506300 ரூபாய். இதன் விதைகளை ஹொக்கைடோ தீவிலிருந்து எடுத்து வந்து வேறு சில இடங்களில் பயிரிட்டனர். "ஜப்பான் கருப்பு  தர்பூசணி வாங்கலையோ" என கூவி கூவி விற்றனர். இன்றும் விற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் ஹொக்கைடோ தீவின் டென்சுக் தர்பூசணி சுவையை அடித்துகொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் அது விளையும் தீவின் மண் வளமும் தட்பவெட்பநிலையும் ஆகும். அதுமட்டுமல்லாது வருடத்திற்கு நூற்றிற்கும் குறைவான தர்பூசணி மட்டுமே அங்கு பயிரிடப்படுகிறது...


ரூபி ரோமன் திராட்சை.

இந்த ஜப்பானியர்களுக்கு பழ சாகுபடியில் அவ்வளவு ஆர்வம் ஏனோ?. ஒருவேளை பழயனைவற்றை மறக்காமல் இருக்கிறார்களோ?. அந்த வகையில் ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் வளர்க்கப்படும் "ரூபி ரோமன்" என்ற திராட்சை உலக பணக்கார பழ பட்டியலில் மூன்றாவதாக இருக்கிறது. சிவப்பு நிறத்திலிருக்கும் அது இனிப்பிற்கு பெயர் போனது. ரூபி ரோமன் திராட்சை விற்பனைக்கு கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு திராட்சையும் 20 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும். மற்றும் 18% சர்க்கரை இருக்க வேண்டும். முழு பழ கொத்து குறைந்தது 700 கிராம் எடையும் இருக்க வேண்டும். இப்படி பல வேண்டும்களுக்கு பிறகே அது வேண்டியவர்களுக்கு போய் சேரும். அதிலும் பிரீமியம் திராட்சை என வருடா வருடம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. 2010 ஆண்டு வெறும் ஆறு திராட்சை மட்டுமே பிரீமியம் அந்தஸ்து பெற்றது. 2016 -ல் இந்த திராட்சை ஒரு கிலோ 697200 ரூபாய்க்கு விலைபோனது. திராட்சை கொத்திலிருக்கும் ஒரு பழத்தை வாங்க வேண்டுமானாலும் 13944 ரூபாய் தேவைப்படும்...


தையயோ நோ தாமகோ மாம்பழம். 

மறுபடியும் ஜப்பானுக்கு போவோம். 2017 ஆம் ஆண்டு அங்கு ஏலம் போன இரண்டு மாம்பழத்தின் விலை 310752 ரூபாய். "தையோ நோ தாமகோ" (Taiyo no Tamago - சூரியனின் முட்டை) என்பது "மியாசாகி" மாகாணத்தில் வளர்க்கப்படும் ஒருவகை மாம்பழமாகும். சிவப்பு தோல், ஆரஞ்சு சதையுடன் இருக்கும் அது ஜப்பான் மட்டுமல்லாது தற்போது உலகமெங்கும் பிரபலமாக இருக்கிறது. ஆனால் ஜப்பான் சுவைக்கு ஈடு வராது. அவர்களைப் போல அன்பு கலந்து அதனை வளர்க்க எவராலும் முடியாது. அந்த மாம்பழம் குட்டை ரகத்தை சார்ந்தது. அதிகபட்சம் ஒன்னரை அடி மட்டுமே வளரக்கூடியது. இவ்வளவு விலையிருக்கும் இந்த மாம்பழத்தை இலவசமாக சாப்பிட ஒரு வழி இருக்கிறது. அதாவது ஒவ்வொரு வருடமும் மே மாதம் 25 ஆம் தேதி மியாசாகி மாகாணத்தில் மாம்பழ தினம் என்று கொண்டாடுகின்றனர். அப்போது விழாவில் ஒரு துண்டு மியாசாகி மாம்பழத்தை தருகிறார்கள். மேலும் அந்நாளில் திருமணம் செய்பவர்கள் மற்றும் குழந்தை பெறுபவர்களுக்கு இந்த மாம்பழத்தை இலவசமாக கொடுக்கின்றனர். மியாசாகி ரேஷன் கார்டு அவசியம்... 


தி லாஸ்ட் கார்டன்ஸ் அன்னாசி.

இங்கிலாந்தின் "தி லாஸ்ட் கார்டன்ஸ் ஆஃப் ஹெலிகனில்" வளர்க்கப்படும் அன்னாசி பழம் இந்த பட்டியலில் ஐந்தாவதாக இருக்கிறது. பாரம்பரிய விதைகளின் மூலம் நூற்றாண்டை கடந்து அங்கு சிறப்பான கவனிப்புடன் பயிரிடப்படுகிறது. இதன் வரலாறு விக்டோரியா மகாராணி காலத்திலிருந்து தொடங்குகிறது. ராணி காலையில் எழுந்தவுடன் 'என்ன அண்ணாச்சி அன்னாசிக்கு தண்ணி விட்டியலா?' என அக்கறையோடு கேட்கும்படியாக இன்றும் வளர்க்கப்படுகிறது. இதனை சாப்பிடுவது அல்லது உணவு மேசையில் வைப்பது மிகப்பெரிய அந்தஸ்தாக கருதப்படுகிறது. ஒரு காலத்தில் அரண்மனைக்கு மட்டும்தான் என்றிருந்த அது தற்போது சந்தைகளிலும் கிடைக்கிறது. என்ன! அதை வாங்க 124500 ரூபாய் தேவைப்படும்...


சதுர தர்பூசணி. 

ஜப்பானை சேர்ந்த "டோமோயுகி ஓனோ" என்பவர் ஒரு கிராபிக் டிசைனர். 1978 ஆம் ஆண்டு அவர் கார்டூன் தொடருக்காக பந்துபோல் இருக்கும் தர்பூசணியை சதுர வடிவில் தனது கனிணியில் வரைந்து கொடுத்தார். அதோடு நில்லாமல் தர்பூசணி ஏன் சதுரமாக காய்க்கக் கூடாது? எனவும் யோசித்தார். அதற்காக ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையில் தனது தோட்டத்தில் வளர்ந்த தர்பூசணி பிஞ்சை ஒரு பெட்டிக்குள் அடைத்தார். அது முழு வளர்ச்சியடைந்த போது சதுரமாக (Cube) இருந்தது. சதுர தர்பூசணி அதன் வடிவத்திற்காக புகழ்பெற, அதற்கு முறையாக காப்புரிமையையும் அவர் பெற்றார். இந்த தர்பூசணி அதன் வடிவத்திற்காகவும் ஒரு நாகரீகத்திற்காகவும் இன்றும் வாங்கப்படுகிறது. அதனால் அதன் விலையும் சற்று கூடுதலாகவே இருக்கிறது. இதன் ஒன்றின் விலை 66400 ரூபாய்...


நியோஹூ ஸ்ட்ராபெர்ரிகள். 

ஒவ்வொன்றும் ஒரே அளவு வடிவம், தெளிவான இளம் சிவப்பு நிறம், இரத்தினங்களைப் போல பளபளப்பு, வேறெதிலும் இல்லாத தித்திப்பு, ச்..சீ.. புளிக்கும் என்பதையும் தாண்டிய சுவை, இவற்றைக் கொண்ட இராணியாக கருதப்படும் "செம்பிக்கியா குயின் ஸ்ட்ராபெர்ரிகள்"
(நியோஹூ ஸ்ட்ராபெர்ரிகள்) பட்டியலில் ஏழாமிடத்தில் இருக்கிறது. செம்பிக்கியா என்பது ஜப்பானிலிருக்கும் ஒரு பழமையான புகழ்பெற்ற கடையாகும். 1834 -ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கடையில் மட்டுமே குயின் ஸ்ட்ராபெர்ரிகள் விற்கப்படுகின்றன. 12 நிறைந்த அவற்றின் விலை 7055 ரூபாய் ஆகும். குறிப்பிட்ட சூழலில், காலநிலையில், பாதுகாப்பில், வேளாண்முறையில் அவைகள் வளர்க்கப்படுகின்றன...


சிட்ரஸ் அன்ஷியூ.

"கோரி டகே ஓ தபெனை தே, சுகினமோனோ ஓ தபேட் குடைசை" (எத வேனும்நாலும் தின்னு இத மட்டும் திங்காதே) என "சிட்ரஸ் அன்ஷியூ" என்ற ஆராஞ்சு பழத்திற்கு ஜப்பானில் ஒரு காலத்தில் தடை போட்டிருந்தனர். அதற்கு காரணம் அந்த ஆரஞ்சு பழத்தை தின்றால் குழந்தை பிறக்காது என்ற நம்பிக்கை நீண்ட காலமாக நிலவியது. அதற்கும் காரணம் இருக்கிறது அந்த ஆரஞ்சு பழத்திற்கு விதைகளே கிடையாது. ஆனாலும் அந்த பழம் சுவை நிறைந்தது, இனிப்பானது, சொர்கத்தின் பழம் என்றெல்லாம் புகழ் பெற்றது. ஜப்பான் மட்டுமில்லாமல் உலகமெங்கும் இது தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது. பழைய கொட்டை நம்பிக்கையை தகர்த்து பணக்கார பழ பட்டியலிலும் இடம் பெற்றிருக்கிறது. இந்த ஆரஞ்சு பழம் ஒன்றின் விலை 1104 ரூபாய் மட்டுமே...


செகாய் இச்சி ஆப்பிள்கள். 

சிவப்பு நிற தோல், உள்ளே வெளிறிய மனசு, 11 செ.மீ உயரம், 46 செ.மீ விட்டம் கொண்ட மற்றதைவிட கொஞ்சம் தடிமனான "செகாய் இச்சி ஆப்பிள்கள்" பணக்கார பழ பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இதுவும் ஜப்பானில்தான் விளைகிறது. இந்த ஆப்பிளின் நுட்பமான நறுமணம்தான் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இந்த ஆப்பிள் ஒன்றின் விலை 1743 ரூபாய். செகாய் இச்சி ஆப்பிள்கள் பாரம்பரியமாக சிறப்பான நாட்கள் மற்றும் வணிக பரிவர்த்தனைகளுக்கு பரிசுகளாக வழங்கப்படுகின்றன. மேலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஆடம்பரப் பழமாக வழங்கப்படுகின்றன. இந்த ஆப்பில் 1930 ஆம் ஆண்டில் ஜப்பானின் மோரியோகாவில் உள்ள "ப்ரிஃபெக்சுரல்" பரிசோதனை நிலையத்தில் உருவாக்கப்பட்டது. ஜப்பானிய மொழியில் செகாய் இச்சி என்றால் "உலகின் சிறந்த" அல்லது "உலகின் முதல் இடம்" என்று பொருள். அதற்கு தகுந்தாற்போல் ஆப்பிள்களில் இது முதலிடத்தில் இருக்கிறது...


புத்தர் வடிவ பேரிக்காய்.

சதுரமான தர்பூசணிக்கு பிறகு இதய வடிவ ஆப்பிள், பெண்ணின் பின்புறம் போன்ற பீச் பழம், நட்சத்திர வடிவ வெள்ளரி என பழங்கள் வளர்வதற்கு முன்பு அதன் வடிவத்தை மாற்றியமைக்கும் முறை பிரபலமாக இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் புத்தர் வடிவ பேரிக்காய். சீனாவிலிருக்கும் "ஃப்ரூட் மோல்ட்" என்ற ஒரு நிறுவனம் கூப்பிய கைகள், பருத்த வயிறுகள் மற்றும் தியான புன்னகையுடன் கூடிய புத்தரின் அச்சைக் கொண்டு அதனை வளர்க்கின்றனர். ஆசிய நாடுகளில் புத்தர் பேமஸ் என்பதால் இந்த பேரிக்காயும் ஏக பேமஸ். வியட்னாம் மக்கள் இதை விரும்பி வாங்குகின்றனர். அங்கு இதன் ஒன்றின் சந்தை மதிப்பு 742 ரூபாய் ஆகும்...

இந்த பட்டியலில் இருக்கும் பழங்களே உலகின் பத்து பணக்கார பழங்கள் ஆகும். இவற்றுள் சிலவற்றை நம்மால் வாங்கவே முடியாது. அட ஏன்! பார்க்கக் கூட முடியாது. இந்த பட்டியலில் இருக்கும் பழங்கள் பெரும்பாலும் ஜப்பானில் வளர்க்கப்படுகிறது. அப்படி என்ன ஜப்பானில் விசேஷம் இருக்கிறது? அதற்கான காரணத்தையும் பார்த்துவிடுவோம்.

தட்பவெப்பநிலை,

மண்வளம்,

புதுமையாக சிந்திக்கும் முறை,

பாரம்பரிய வேளாண்மை,

அக்கறையான வளர்ப்பு,

இறுதியாக ஜப்பானியர்கள் அதிக விளைச்சலை எதிர்பார்ப்பதில்லை.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு மரத்தில் எத்தனை ஆப்பிள்கள் விளைகிறது என ஆராயாமல், எத்தனை ஆப்பிள்கள் சுவைக்கிறது என பார்க்கிறார்கள். பழம் மட்டுமல்லாது எல்லவற்றிலும் அவர்கள் இதனை கடைபிடிக்கின்றனர். அதனால்தான் அவர்கள் தரத்தில் முதலிடத்தில் இருக்கிறார்கள்...