கண் கூடு கூழை.
இந்த ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு?..
ஒரு திருமண நிகழ்விற்கு தயாராகும் முன்பு அடியவளிடமிருந்து எழுந்த கேள்வி இது.
பீயூட்டி பார்லர் கைவண்ணம்,
மாதம் ஓரிருமுறை வழக்கமாக வரும் கூந்தல் செலவு, இது ஒருபுறமிருக்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றால், இன்றைய நாள் துலாம் இராசிகாரர்களுக்கு அற்புதமான நாள், பல காரியங்கள் கை கூடும் நாள், என நெற்றியில் பெரிய பட்டையும், கழுத்தில் கலகலவென பல கொட்டையும், காவி சட்டையும், போட்ட டீவி ஜோசியர் சொன்னதெல்லாம் பொய்யாகிவிடும். மேலும், சார்... ஒரு ஃபேமிலி பங்ஷன் நாளைக்கு ஒருநாள் லீவு வேணும் என குழைந்ததும் வீணாகிவிடும். ஆகவே, உன் கூந்தல்
கண் கூடு கூழை
என்றேன்.
பதிலை கேட்டதும், வஞ்சப்புகழ்ச்சியா?.. அப்படின்னா ஏதாவது உள்ளர்த்தம் இருக்கும், என்று முகம் கோணினாள்.
இல்லை.. இல்லை புகழ்ச்சிதான் ...
முற்பகுதி அகண்டும் பிற்பகுதி குறுகியும் பின்னப்படும் ஒருவகை சிகை அலங்காரம் கலித்தொகையில் கண் கூடு கூழை என குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூழை என்றால் குட்டையான, மயிலிறகு என்ற அர்த்தமெல்லாம் இருக்கிறது. அதை வைத்து உன் ஹேர்ஸ்டைல் அப்படி இருக்கிறது என்றேன்...
கண் கூடு கூழை.
காண்பவர்களை சுண்டியிழுக்கும் சிகையலங்காரம்.
உனக்கு வேண்டுமானால் கலித்தொகையிலிருக்கும் அந்த பாடலை விளக்கவா? என கேட்க,
போஹோ, ஃபிஷ்டைல் பன், ஆஃப் பன், மெஸ்ஸி, ஸ்லீக் லோ பன், போனி டெயில், பிரஞ்ச் பிளாட், (இவையெல்லாம் லேடிஸ் சாய்ஸ் தலைமுடி பின்னல் வகைகள்) போன்றவற்றைப் பற்றி தெரிந்து வைத்திருக்கும் அவள்
அய்யோ! சாமி... ஆளவிடு என்றாள்...
கபிலர் இயற்றிய அந்த பாடல் தலைவன் ஒருவன் தான் கண்ட பெண்ணின் அழகில் மயங்கி அவளை வர்ணிப்பதாக அமைந்தது. ஜீன்ஸ் படத்தில்வரும் அன்பே அன்பே கொள்ளாதே பாடல் வரிகளுக்கு இந்த பாடல் முன்னுதாரணமாக இருக்குமோ? என சந்தேகிக்கும் அளவிற்கு அமைந்தது. அதனால் இஷ்டமிருந்தால் கேளு என்றபின் ஒருவழியாக சம்மதித்தாள். வர்ணணைகளுக்கு செவி மடுக்காமல் பெண்கள் இருப்பார்களா என்ன? ...
கலித்தொகை பாடலின் முன்கதையோடு அதனை ஆரம்பித்தேன்.
குறிஞ்சி திணையிலிருக்கும் தலைவன், தான்செல்லும் வழியில் முதன்முதலாக ஒரு பெண்ணை காண்கிறான். பேரழகு கொண்ட அவள் யாராக இருப்பாள்? என மனதிற்குள் நினைக்கிறான். அவளை தடுத்து நிறுத்தி அவளது அழகை வர்ணிக்கிறான். அவள் கேட்காதது போல் பாசாங்கு செய்ய, வர்ணிப்பின் உச்சத்திற்கே செல்கிறான். இறுதியில் அவள் அங்கிருந்து சென்றுவிட அவளை படைத்தது இறைவனின் தவறு என்கிறான். அவன் அவளைப்பற்றிய இந்த வர்ணிப்பு பாடலில் கூந்தல் அழகு மட்டுமல்லாது தலை முதல் கால் வரை அத்தனை அழகும் இருக்கிறது.
ஊர்க்கால் நிவந்த பொதும்பருள்,
நீர்க் கால்,
கொழு நிழல் ஞாழல் முதிர் இணர்
கொண்டு,
கழும முடித்து, கண் கூடு கூழை
சுவல்மிசைத் தாதொடு தாழ, அகல்
மதி
தீம் கதிர் விட்டது போல, முகன்
அமர்ந்து,
ஈங்கே வருவாள் இவள் யார் கொல்? ஆங்கே, ஓர்
வல்லவன் தைஇய பாவைகொல்?
நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள்கொல்? வெறுப்பினால்,
வேண்டு உருவம் கொண்டதோர்
கூற்றம்கொல்? ஆண்டார்,
கடிது, இவளைக் காவார் விடுதல்:
கொடி இயல்,
பல் கலை, சில் பூங் கலிங்கத்தள்
ஈங்கு, இது ஓர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்!
இவளைச் சொல்லாடிக் காண்பேன்,
தகைத்து
நல்லாய்! கேள்:
ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடைஎன,
தூதுணம் புறவு என, துதைந்த நின்
எழில் நலம்
மாதர் கொள் மான் நோக்கின் மட
நல்லாய்! நிற் கண்டார்ப்
பேதுறூஉம் என்பதை அறிதியோ?
அறியாயோ?
நுணங்கு அமைத் திரள் என, நுண்
இழை அணை என,
முழங்கு நீர்ப் புணை என, அமைந்த
நின் தட மென் தோள்
வணங்கு இறை, வால் எயிற்று, அம்
நல்லாய்! நிற் கண்டார்க்கு
அணங்காகும் என்பதை அறிதியோ? அறியாயோ?
முதிர் கோங்கின் முகை என, முகம்
செய்த குரும்பை என,
பெயல் துளி முகிழ் என, பெருத்த
நின் இள முலை
மயிர் வார்ந்த வரி முன்கை மட
நல்லாய்! நிற் கண்டார்
உயிர் வாங்கும் என்பதை
உணர்தியோ? உணராயோ?
என ஆங்கு,
பேதுற்றாய் போலப் பிறர் எவ்வம் நீ
அறியாய்,
யாது ஒன்றும் வாய்வாளாது
இறந்தீவாய்! கேள், இனி:
நீயும் தவறு இலை; நின்னைப்
புறங்கடைப்
போதர விட்ட நுமரும், தவறு இலர்;
நிறை அழி கொல் யானை நீர்க்கு
விட்டாங்கு,
பறை அறைந்தல்லது செல்லற்க!’
என்னா
இறையே தவறு உடையான்...
அகத்தை ஆழமாக ஆராயும் இலக்கியம் இந்த கலித்தொகை. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என அமைப்பாக இன்றைய புதுக் கவிதைக்கு அடிப்படையாக அமைந்தது. துள்ளலோசையில் கொண்டது. கலிப்பா என சொல்லக் கூடிய இலக்கண வகை. 'கற்றோர்கள் ஏத்தும் கலி' என்ற புகழ்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு பாடலும் தனித்துவம் நிறைந்தது. காதலிசம், இன்பத்துப்பால், என கிறுக்க நினைத்தால் கலித்தொகையை கையிலெடுக்கலாம். சரி! இந்த பாடலின் பொருளுக்கு வருவோம்.
ஊரில் இருக்கும் வாய்க்கால்,
வாய்க்காலை உடைய பூஞ்சோலை,
பூஞ்சோலை வாய்க்காலில் ஓடும் நீர், அந்த நீரின் அருகில் கொழுமையான நிழல், அது ஞாழல் மரத்தின் நிழல்
(பொன்னாவரசு அல்லது புலிநகக் கொன்றை என பெயர் பெற்ற சிறிய மரம், ஆங்கிலத்தில் tigerclaw tree/ Cassia Sophera /Senna sophera) அந்த ஞாழல் மரத்தின் பூங்கொத்துக்களைத் தன் கூந்தலில் வைத்து கூழை என்னும் சிண்டு போட்டிருக்கிறாள் (மஞ்சள் நிற பூச்சிண்டு).
அது "கண்கூடு கூழை"..
என்னை போன்றோரின் கண்ணைக் கூட்டி இழுக்கும் கூழைச் சிண்டு.
அது தோளின் மேல் தொங்கும் சிண்டு.
அகன்ற முழுநிலவின் இனிய நிலவொளி போல அவள் முகத்தில் ஒளி வீசுகிறது. அவள் இங்கே வருகிறாள்.
அவள் யாராக இருப்பாள்?
மேலுலகத்தில் வல்லவன் ஒருவன் செய்து அனுப்பிவிட்ட இயங்கும் பொம்மையோ? ஒவ்வொரு பெண்ணும் ஓரழகு, ஒவ்வொரு பெண்ணுக்கும் எதோவொன்று அழகு. அப்படி இருக்கும் ஒவ்வொரு அழகு பெண்களின் உறுப்பழகெல்லாம் திரட்டி இயற்றப்பட்டவளோ?
ஆசையால் வேண்டிய உருவம் எடுத்துக்கொண்டு என்னைக் கொல்ல வந்துள்ள எமனோ?
ஆளும் அரசன் இவளைத் தடுத்துக் காப்பாற்ற முடியாமல் விட்டுவிட்டானோ?
கொடி போன்ற இயல்பினை உடையவளாக இருக்கிறாள்.
பல மடிப்புகளை உடைய பூ பொறித்த ஆடை அணிந்திருக்கிறாள்.
ஆதலால், இவள் வறுமையில் வாடும் ஒருவனின் செல்வ மகள் (சாதாரணமானவள் ஆனால் பேரழகானவள்)
இவளைத் தடுத்து நிறுத்தி பேச பார்க்கிறேன்..
நல்லவளே
நில்
கேள்
அவன்
Well
Stop
listen
இவள்
Full
Stop
Walk
(அவன் விடுவதாக இல்லை)
மென்மையான இறகு கொண்ட அன்னம் போலவும்
அழகிய மயிலில் பெண்மயில் போலவும்
கல்லில் மேயும் தூது செல்லும் புறா போலவும்
உன் அழகு நலம் காணப்படுகிறது.
ஆசை மூட்டும் மதமதப்பும் மான் போன்ற பார்வையும் கொண்ட நல்லவளே
உன்னைக் கண்டவர் பித்துப் பிடித்துப் போவார்கள் என்பது உனக்குத் தெரியுமா, தெரியாதா?...
திரண்டிருக்கும் மூங்கில் போலவும்
நுட்பமான இழைகளால் அமைக்கப்பட்ட தலையணை போலவும்
தண்ணீரில் மிதக்கும் படகு போலவும்
அமைந்திருக்கும் உன் அகன்ற மென்மையான தோள்,
அதன் தொடர்ச்சியான பின்கழுத்து,
வெள்ளை வெளேர் என்ற பல்வரிசை
ஆகியவற்றைக் கொண்டிருக்கிறாய்.
இவை உன்னைக் கண்டவர்களை பீடிக்கும் மையல் நோயாக (infection of love) இருக்கும் என்பது உனக்குத் தெரியுமா தொரியாதா?
கோங்கம் பூவின் முதிர்ந்த மொட்டுப் போலவும், (ஒருவகை இலவ மரத்தின் பூ. சங்க இலக்கியத்தில் இருக்கும் கோங்கம் பூவை பற்றி தனியே எழுதலாம்)
முகம் காட்டும் தென்னங் குரும்பை போலவும்,
மழைத்துளியில் தோன்றும் நீர்க்குமிழ் போலவும்,
பெருத்திருக்கும் உன் இளமை ததும்பும் முலை
(அவ் அளவுதான் பெரிய எதிர்பார்ப்பு வேண்டாம்)
சிறு சிறு முடிகளைக் கொண்ட உன் முன்னங்கை
இவற்றை உடைய மடமை குணம் நிறைந்த நல்லவளே
இவையெல்லாம் உன்னைக் கண்டவரின் உயிரை வாங்கும் என்பதை நீ அறிவாயா, அறியமாட்டாயா?
Do you know or not that these will kill life of the one who sees you...
என்றல்லாம் சொல்லும்படி உன் அழகு இருக்கிறது.
Your beauty is beyond words...
பித்துப் பிடித்தவள் போல பிறர் படும் துன்பத்தை அறியாதவளாக நீ இருக்கிறாய்.
யாதொன்றும் என்னிடம் பேசாமல் என்னைக் கடந்து செல்கிறாய்.
இதனைக் கேள்
நீயும் தவறு செய்யவில்லை.
இப்படிப்பட்ட அழகுடன் உன்னை வெளியில் நடமாடும்படி விட்ட உன்னைப் பெற்றவர்கள் மீதும் தவறு இல்லை.
கட்டுப்பாட்டு சங்கிலியை அவிழ்த்து மதம் கொண்ட யானையை நீராட விடும்போது “யானை வருகிறது” என்று பறை முழக்கம் செய்விட்டுப் பின்னர் யானையை விடுவார்கள். அதுபோல் உன்னைப் பறை முழக்கத்துக்குப் பின்னர் வெளியில் நடமாடவிடாமல், அவிழ்த்துவிட்ட இறைவனே தவறு உடையவன்...
Finaly its god fault...
என்று அவன் முடிக்கிறான். நியாயமாக பார்த்தால் அவனது வர்ணிப்பில் அல்லது பிதற்றலில் அவள் மனமுறுகி காதலில் விழுந்திருக்க வேண்டும்.
சங்க இலக்கியம் - கலித்தொகை
பாடல் - 56
பாடியவர் - கபிலர்
திணை - குறிஞ்சி
இந்த ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு?..
என்ற கேள்விக்கு பதில் கலித்தொகை பாடலோடு இவ்வளவாக நீண்டது. அந்த நாளும் இனிமையாக கழிந்தது. காலம் கடந்தும் சாதாரண நடைமுறைகளை இலக்கியங்களோடு ஒப்பிட முடியும் என்றால் அதற்கு தமிழ்