பெரியோனே என் ரஹ்மானே.

லையாளம்
தமிழ்
தெலுங்கு
இந்தி

இதில் எது சிறந்தது?...

மொழி சண்டைக்கு வரவில்லை. மொழி என்பது வசதிக்கு உட்பட்டது. வாழுமிடத்தை பொறுத்தது. அது ஒரு கருவி (Tool). சமீபத்தில் இந்த நான்கு மொழியிலும் "ஆடுஜீவிதம்" (Goat Life) என்ற திரைப்படம் வெளிவந்திருக்கிறது. நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். நல்ல திரைப்படம் எடுக்க தைரியம் வேண்டும். அதைவிட நாவலை தழுவுவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். சில நாட்களுக்கு இந்த திரைப்படம் போசு பொருளாக இருக்கும். புத்தகமும்தான். விமர்சனத்திற்கு உள்ளாகும். கொலை, கொள்ளை, சைக்கோத்தனம், போதை, இளம்வயது அஜால் குஜால் அரிப்பு கதைகளுக்கு மத்தியில் வாழ்வியல் தாங்கிய கதைகளை திரைப்படமாக எடுப்பது ஆரோக்கியமான விஷயம். 

நிற்க...

இந்த திரைப்படத்தில் "பெரியோனே என் ரஹ்மானே" என்ற பாடல் இடம்பெற்றிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அதிகமுறை 

கேட்கும் பாடல்,  
முணுமுணுக்கும் பாடல்,
குறுகுறுக்கும் பாடல்,

ஒரு காலி புட்டியில் காற்றை ஊத பாடல் தொடங்குகிறது. அந்த புட்டி காற்றால் நிரம்புவதைப்போல மனதை நிரப்புகிறது. வெற்றிடத்திற்கு வேலையில்லை. 
பெரியோனே என்றால் "பெரிய கடவுள்" என்று பொருள் (யார் கடவுள் பெரியது? என்பதுதான் இங்கு பிரச்சனையே). கடவுளைத் தொழும் ஆன்மீகப் பாடல் போல தொடக்கம்  இருக்க, தனி ஒருவனின் சுய பச்சாதபத்தோடு முடிகிறது.  சுட்டெரிக்கும் வெய்யில், மணல்,  ஒட்டகம், ஆடு, பறந்த வானம், காணல் நீர், கூடவே தனிமையும் நினைவும் என பாலைவன வாழ்க்கையை ஒற்றைக் குரலின் வலி நிறைந்த சோகத்தோடு விவரிக்கிறது. 

எத்தனை தூரம் கரையோ
எத்தனை தூரம் பிறையோ
எத்தனை தூரம் நிழலோ
எத்தனை தூரம் பிரிவோ

பென்யாமினின் ஆடுஜீவிதம் நாவலை வாசித்தவர்களுக்கு இந்த பாடல் இன்னும் நெருக்கத்தை கொடுக்கும். நாயகன் நஜீபின் வலி கண்முன் வந்துபோகும். 

இந்த பாடலை எல்லா மொழிகளிலும் "ஜித்தின் ராஜ்" படியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலை ஆல்பம் போல மான்டேஜ் காட்சிகளை சேர்த்து உருவாக்கி இருக்கிறார்கள். அதுவும் அழகாக இருக்கிறது. காவி கண்ணாடி போடாமல் பார்த்தால் தேசிய விருது வாங்கும் பாடல். 

எல்லா மொழிகளிலும் பாடல் கேட்பதற்கு அற்புத உணர்வை தருகிறது. ஆகவே அதனை தொகுத்து வைத்திருக்கிறேன்.

மலையாளம்
தெலுங்கு
தமிழ்
ஹிந்தி

பெயரளவிற்கு இதில் எது சிறந்தது? என்ற கேள்வியும் வைத்திருக்கிறேன்.

நீங்களும் கேட்டுப் பாருங்களேன்...