போர் தொழில் பழகாதே...

லகம் சந்தித்த இரண்டு பெரிய போர்களுக்கு பின்பு நாட்டாமை நாடுகளுக்கு எட்டியது என்னவென்றால் "போர் என்பது ஒரு தொழில் War is a business". இன்று உலகில் எங்கேனும் போர் என  நிகழ்ந்தால் அது அந்நாடுகளுக்கு கொள்ளை இலாபம் ஈட்டித் தரும். ஆங்கிலத்தில் War என்றால் குழப்பம் அல்லது குழப்பம் விளைவித்தல் என்று பொருள். இலாபத்திற்காக எங்கு வேண்டுமானாலும், எதன் மூலமானாலும் குழப்பம் விளைவிக்கலாம். அப்படியிருக்க, ஏதோ ஒரு நாட்டின் இலாபத்திற்காக எதற்காக சண்டையிட வேண்டும்?... அதனோடு இன்றைய காலகட்டத்தில் நன்கு பண்பட்ட மனிதகுலத்தின் குழப்பத் தீர்வுக்கு போர் என்பது பயன்படாத ஒன்று War is useless, என்பதுவும் தெரியும். இருந்தாலும் இந்த நிமிடம்கூட எங்காவது ஒரு மூலையில் துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

சரி!...

ஒரு இனம் அழிக்கப்படுகிறது...

ஒரு இடம் அபகரிக்கப்படுகிறது...

ஒரு கலாச்சாரம் நசுக்கப்படுகிறது...

அதனை கண்டு போராடாமல் வேடிக்கை பார்க்க முடியுமா என்றால்?... 

போர் எதற்கும் தீர்வாகாது War doesn't solve anything. வரலாற்று அனுபவத்தில் உலகம் உணர்ததும் அதுதான். 

புத்தகம் சினிமா மற்றும் நடப்பு சம்பவங்களில் போர்களைப் பற்றிய செய்திகளை அறிந்துகொண்ட போது அதுதான் அடியேனுக்கும் தோன்றியது. அதனை வைத்து போர் எதற்கும் தீர்வாகாது என கிறுக்கியதுதான் இவைகள்... 

எத்தொழிலினும் 
போர் தொழில் பழகாதே 
Don't practice war... 
சிறுதுளி மழை
ஒரு தெரு வியாபாரியின்
அன்றாட வாழ்வை 
சீர்குலைக்கும் போது
பெரும் குண்டு மழை 
பொழியும்
போர்கள் எதற்கு?...
இரத்தம் பாய்ந்த
நிலத்தில்
எந்த பூக்களையும்
அறுவடை செய்யமுடியாது...
ஆயுத வியாபாரத்திற்கு
அப்பாவி உயிர்கள் 
மூலதனம்...
போராளிகளுக்கு
எதற்கு
பொதுமக்கள் 
முதுகு?...
அழிப்பதற்கான 
மூளையை
மூலையில் 
வைப்போம்...
கடவுளும் 
கைவிட்டது 
தெரிந்தபின்
மிஞ்சியிருப்பவனின்
கடைசி வேண்டுதல்
என்மீதும் 
ஒரு குண்டு...
அன்பெனும்
ஒன்றை
உயர்த்திப் பிடிக்க
ஆபத்தான
அனைத்து ஆயுதங்களும்
செயலிழந்துவிடும்...
எவ்வளவு 
அவசியமானாலும்
அவ்வளவு 
நியாயமானாலும்
இவ்வளவு
காரணமானாலும்
போர்கள்
குற்றமே...
அனைத்து 
உயிர்களையும்
நேசிக்க பண்பட்டதுதான்
மனித குலம்...
இறந்தவர்களின் 
எண்ணிக்கையால்
விடுதலைக்கு
பயனில்லை...
எத்தொழிலினும்
போர் தொழில்
பழகாதே...