ஒரு மீனவனும் வேற்று கிரக உயிரினமும்.

ந்த உலகம் அழிவதற்கான ஐந்து காரணங்களில் மூன்றாவதாக இருப்பது Strange Matters. அதாவது எரிகற்கள் மற்றும் வேற்று கிரக உயிரினங்கள்.  எரிகற்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு வேற்று கிரக உயிர்களிடம் வருவோம். 

வேறொரு கிரகத்திலிருந்து ஒரு உயிரினம் பூமிக்கு வருமா?... அது வந்து இங்கு இருப்பவர்களை அழித்து விடுமா? ... அட! ஏன்! வேற்று கிரகத்தில் நம்மை மிஞ்சிய உயிரினங்கள் இருக்கின்றனவா?...

இந்த பிரபஞ்சம் பெறும் வெடிப்பால் உண்டானவை. பிரபஞ்சத்தில் இயற்பியல் விதிகள் எல்லாம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், உயிர் வாழ்க்கைக்கான விதிகளும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். அப்படி பார்த்தால்  வேற்று கிரக உயிரினங்கள் நட்சத்திர மண்டலங்களுக்குள் எங்காவது இருக்கலாம். அவைகள் மனிதர்களைப் போன்று அல்லாமல் வேறு வடிவில் இருக்கலாம். ஒரு நுண்ணுயிரியைப் போல அல்லது எளிதில் காற்றில் கரைந்துவிடும் பொருளைப்போல இருக்கலாம் என்பது அறிவியலாளர் ஸ்டீவன் ஹாக்கிங்ஸின் கருத்தாக இருக்கிறது. அதன்படி வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அதற்கான ஆதாரங்கள் இதுவரை எதுவும் கிடையாது. வேற்று கிரக உயிரினங்களைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றும் தகவல்கள் வந்தாலும் அவையெல்லாம் கதைகளாகவே இருக்கின்றன. புத்தகம், சினிமா, நாடகம், போன்றவற்றிற்கு தீனி போடுகின்றன. இந்த குறும்படத்தின் கதையும் வேற்று கிரக உயிரினங்கள் பூமிக்கு வருவதை அடிப்படையாக கொண்டதுதான்.

ஹாங்காங் துறைமுகத்தில் வசிக்கும் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மீனவனான வாங்கிற்கு நவீனகால வளர்ச்சிகளோடு வாழ்வது சிரமமாக இருக்கிறது. தான் வைத்திருக்கும் படகிற்கு வாடகை செலுத்த முடியாத பொருளாதார நெறுக்கடியும் ஏற்படுகிறது. அதனை சரிசெய்ய ஒரு இரவு, தான் இருக்கும் துறைமுகத்திலிருந்து சற்று வெளியே சென்று மீன் பிடித்துவர நினைக்கிறான். அன்றிரவு அவனது தூண்டிலில் வினோதமான ஒன்று சிக்குகிறது. அது வேற்று கிரக உயிரினமாக இருக்கிறது. மேலும் சிறிதுநேரத்தில் மற்றொரு உயிரினமும் அவனது தூண்டிலில் சிக்குகிறது. இந்தமுறை அந்த உயிரினம் முன்பை விட பெரிதாக இருக்க, அதனுடன் போராடி அதனை கொன்று துறைமுகத்திற்கு திரும்பி வருகிறான். அதனால் அதிஷ்டம் கிடைக்கும் என நினைத்திருக்க அவனுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. 



கிழவனும் கடலும் சாண்டியாகோவைப் போல இந்த குறும்படத்தின் நாயகனின் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. கடல் தன்னை எப்படியும் கைவிடாது என நம்பும் துரதிஷ்டம் பிடித்த மீனவன் ஒருவனது கதை. வேற்று கிரக உயிரினத்தை தவிர்த்துப் பார்த்தால் அது அவ்வாறே ஒத்திருக்கிறது. இரவு நேரத்தில் மின்னும் ஹாங்காங் துறைமுகம் மற்றும் அமைதியான கடலின் ஒளிப்பதிவு அற்புதமாக இருக்கிறது. நீரலை அவ்வபோது ஒலிக்கும் ரேடியோ, இடி, மின்னல் என சிறப்பு சப்தங்கள் துள்ளியமாக இருக்கிறது. நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும் குறும்படம் இயல்புத் தன்மை மாறாமல் இருக்கிறது. வாங் என்ற ஒற்றை மனிதனையே கதை சார்ந்திருக்க நாயகனின் நடிப்பும் சிறப்பாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட 35 சர்வதேச விருதுகள் 200 க்கும் மேற்பட்ட குறும்பட விழாக்களில் கலந்து கொண்ட இந்த குறும்படம் ஒரு புதுவித அனுபவத்தை தரும். 

The Fisherman 
Directed by - Alejandro Suárez Lozano
Written by - Alejandro Suárez Lozano
Music by - Pablo Vega
Cinematography - Pablo Bürmann
Country - Hong Kong
Language - Cantonese
Year - 2015.

"அல் வோர்டன்' என்ற விஞ்ஞானி ஒருவர் நாசாவில் வேலை செய்தார். 1971-ல் அப்பல்லோ 15 திட்டத்தில் நிலவுக்கு பயணம் செய்து, விண்வெளியில் 15 நாட்கள், நிலாவில் ஒரு 40 நிமிடம் நடந்த அவர், தன் கடைசி காலத்தில் ஒரு செய்தியை கூறிவிட்டு இறந்து போனார். அதைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்க, அது இந்த குறும்படத்திற்கு ஏகப் பொருந்தமாக இருக்கிறது. அவரது செய்தி....

"மனிதர்களே ஒரு வேற்று கிரகவாசிகள் தான்"...