நல்ல கார்ட்டூன் தேடல் - சில்லி சிம்பொனி.

ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்காக வாரம் முழுவதும் காத்திருந்த தருணங்கள்.

கேபிள் டீவி வந்த புதிதில் மங்களாகத்தான் இருக்கும் என எனத் தெரிந்தும் அந்த சேனலை தேடிய தருணங்கள்.

இன்றைக்கு என்ன புது கதை என ஆர்வத்துடன் பள்ளி விட்டதும் அவசர கதியில் ஓடிவந்த தருணங்கள். 

காணும் பொழுதெல்லாம் ஒரு புதுவித உலகிற்குள் சென்று திரும்பிய தருணங்கள்...

...

எப்ப பாத்தாலும் காச்மூச்சுன்னு கத்திகிட்டு இருக்கிற கார்ட்டூன் சேனலே கதியா இருக்கியே.. என திட்டும்போது அத்தகைய தருணங்கள் நினைவுக்கு வந்தன...

உண்மையைச் சொல்லப்போனால் இன்றைய கார்ட்டூன் தொடர்கள்
குப்பையானவை, சப்தங்களால் நிறைந்தவை, மனநிலையை குலைப்பவை, ஏதோ ஒன்றை வேண்டா விருப்பாக திணிப்பவை. சாகசங்கள் நிறைந்ததாக காட்டப்பட்டாலும் சோம்பிப் போக செய்யக் கூடியவை...

நல்ல காற்று
நல்ல மனிதர்கள்
நல்ல காபி
நல்ல ரவா தோசை பூரி மசால் 
நல்ல இசை
நல்ல சினிமா
நல்ல நாடகம் போல
நல்ல கார்ட்டூன்களும் ஒரு காலத்தில் இருந்தன... 

ஒன்றிற்கும் உதவாத இன்றைய கார்ட்டூன் தொடர்களுக்கு மாற்றாக குழந்தைகளுக்கு அத்தகைய நல்ல கார்ட்டூன்களை தேடி அறிமுகப்படுத்தலாமே என நினைக்கையில் கிடைத்த கிளாசிக் தொடர்தான் சில்லி சிம்பொனி (Silly Symphony). 

கார்ட்டூன்களின் தந்தையான வால்ட் டிஸ்னியின் ஆரம்பகால தயாரிப்பு இந்த சில்லி சிம்பொனி. அவரது மிக்கி மவுஸ் கார்ட்டூனுக்காக இசையமைக்க வேண்டா விருப்பாக தொடங்கப்பட்டது. மிக்கி மவுஸ் கார்ட்டூனைப் போல இல்லாமல் இதில் பல புதிய கதாபாத்திரங்கள் தோன்றி பிற்காலத்தில் புகழ் பெற்றன. 1929 -ல் கருப்பு வெள்ளையில் தொடங்கி பிறகு டெக்னிக் கலர் , மல்டிபிளேன் மோஷன் கேமரா என 1939 வரை மொத்தம் 75 தொடராக வெளிவந்து பலரையும் கவர்ந்தது. இதில் ஏழு தொடர்கள் ஆஸ்கர் விருதையும் தட்டிச் சென்றது. முழு நீள பேசும் சினிமா என்றொரு மாய உலகம் வளரத் தொடங்கிய காலகட்டத்தில் அதற்கு சற்று குறைவில்லாத வகையில் திரையரங்குகளில் போட்டி போட்டது. 

சிம்பொனி (Synbony) என்றால் இசை ஆக்கம். பலவித இசை தொகுப்பு (Musical Composition). தமிழில் 'ஒத்தின்னியம்'. அத்தகைய இசையை இந்த கார்ட்டூன் தொடர் அடிப்படையாக கொண்டிருந்தது. அக்காலத்தில் வெளிவந்த காமிக்ஸ் மற்றும் சிறுவர் புத்தாகங்களில் வெளிவந்த கதைகளையும், ஈசாப் நீதிகதை போன்ற புகழ்பெற்ற கதைகளையும் இந்த தொடர் கொண்டிருந்தது. கார்ட்டூன் என்ற தொழில்நுட்பத்தில் வால்ட் டிஸ்னிக்கு இந்த தொடர் புதியனவற்றை சோதித்து பார்க்கும் தளமாக இருந்தது. அது அவருக்கு முன்னோடியாகவும் அமைந்தது. இதிலிருந்த பல தொடர்கள் பின்நாட்களில் முழுநீள திரைப்படமாக எடுக்கப்பட்டது. சமீபத்தில் இன்றைய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஒரு நிமிட கார்ட்டூன்களைப் பற்றி ஆராயும் போது அவை பழைய கார்ட்டூன்களை ஒத்திருந்தது. குறிப்பாக இந்த சில்லி சிம்பொனியின் கார்டூன்களைப் போலவே இருந்தது. வால்ட் டிஸ்னிக்கு மட்டுமல்லது ஒரு நூற்றாண்டை கடந்த அடுத்த தலைமுறைக்கும் இந்த தொடர் முன்னோடியாகவே இருக்கிறது. கலாச்சார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் பாதுகாக்கப்பட வேண்டிய படைப்புகள் என சில திரைப்படங்களை அமெரிக்காவில் சேகரித்து வைத்துள்ளனர். அதில் சில்லி சிம்பொனியின் Three Little Pigs, The Old Mill, and Flowers and Trees என்ற மூன்று கார்ட்டூன்களும் இருக்கிறது. சிறந்த கற்பனையாக்கம், வரைகலை, இசை என Flowers and Trees கார்ட்டூன் கொண்டாடப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த நல்ல கார்டூன்களை நம் குழந்தைகளுக்கு முன் வைக்கலாம்தானே. 

சில்லி சிம்பொனியின் கார்ட்டூன்கள் சில தங்களின் பார்வைக்கும்.