உலகளாவிய கழிவுகள்.

கடுகு -100
வெந்தையம் - 100
சீரகம் - 50
...
...
நல்லெண்ணெய் 1 லி
...
ஏம்பா எண்ணெய்க்கு பாத்திரம் இருக்கா?...

என்பதெல்லாம் ஒரு காலம்..

தற்போது அனைத்தும் பாலி எத்திலீன் குடும்பத்தின் பாக்கெட் மயமாகிவிட்டது. காகிதத்தில் பொட்டலம் மடித்த மளிகை கடைகளை பெரும் மால்கள் விழுங்கி விட்டன. பெருமால்கள் புண்ணியத்தில் 5000 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கினால் 2 கிலோவிற்கு அதிகமான பாலி எத்திலீன் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு வருகிறோம். மன்னிக்கவும் தள்ளிக்கொண்டு வருகிறோம். மளிகை மட்டுமல்லாது எது வாங்கினாலும் அனைத்தும் ஒரு தபா (One use) மட்டும் என்ற நிலையாகிவிட்டது. பாட்டில்களும் இதில் அடக்கம். அவையெல்லாம் நேரடியாக குப்பைக்கே செல்கின்றன. ஒரு நாட்டில் ஒரு நகரம் அளவிற்கு குப்பைகள். ஒரு நகரில் ஒரு ஊரளவிற்கு குப்பைகள். ஒரு ஊரில் ஒரு தெரு அளவிற்கு குப்பைகள், ஒரு தெருவில் ஒரு வீடு அளவிற்கு குப்பைகள், என மலை மலையாக குப்பைகள் இருப்பதை நாம் காணலாம். போதாத குறைக்கு சேகரிப்படாத குப்பைகளும் கடவுள்களைப் போல எல்லா இடத்திலும் நீக்கமற  நிறைந்திருக்கின்றன. விவசாய கழிவுகள், உணவுக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள்,  எலெக்ட்ரானிக் தொடங்கி, ஆடை முதல் அழகுசாதனப் பொருட்கள் வரை அனைத்து கழிவுகளும் இந்த குப்பைகளோடு சேர்கின்றன. 

சரி!... இந்த குப்பைகளை என்ன செய்யலாம்? 

என்ன செய்கிறார்கள்? 

இவற்றை குட்டி குட்டியாக விவரிக்கும் டாகுமெண்டரி தொடர்தான் World Wide Waste. 

கடற்கரையில் ஒதுங்கும் பாசியிலிருந்து பாலி எத்திலீனுக்கு மாற்றாக பாக்கெட்டுகளை எப்படி தயாரிக்கின்றனர்?... 

அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுளிலிருந்து உறுதியான செங்கல்கள் எப்படி தயாரிக்கின்றனர்... 

பல் துலக்கும் பேஸ்ட் தொடங்கி, தலைக்கு போடும் கிரீம், முகத்திற்கு அப்பும் மாவு, முடிக்கு தடவும் கலர், நகத்திற்கு பாலிஸ், உதட்டிற்கு சாயம் வரை இருக்கும் அழகுசாதனப் பொருட்களின் கழிவுகளிலிருந்து உறுதியான பிளைவுட் எப்படி தயாரிக்கின்றனர்?... 

அன்னாசிப் பழ கழிவுகளிலிருந்து நுரை வராத சுற்றுச்சூழலுக்கு உகந்த சோப்புகளை எப்படி தயாரிக்கின்றனர்?... 

அதே அன்னாசி பழ சக்கையிலிருந்து ஆடைகள், காலணிகள் மற்றும் தட்டு, குவளை போன்ற பொருட்களை எப்படி தயாரிக்கின்றனர்?...

Invasive Species என சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட சூழல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நண்டுகள், பாம்புகள், மீன்கள் இவற்றைக் கொண்டு உணவு, விஸ்கி, தோல் பொருட்கள், பொம்மைகள் எப்படி தயாரிக்கின்றனர்?... 

இனம், மதம், மொழி, கடவுள், கருப்பு, சிவப்பு, அட! ஏன்? ஆண் பெண் பாகுபாடின்றி அனைவரும் அணியும் உலகப் பொது கீழாடையான ஜீன்ஸ் பேண்டுகள் எவ்வாறு மறு சுழற்சி செய்யப்படுகின்றன?...

ஒருமுறை உபயோகித்த பின்பு ஹோட்டல்களில் தூக்கியெறியப்படும் சோப்புகள் மறுசுழற்சி செய்யப்பட்டு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? ...

காளான்கள் ஒரு அற்புத உணவு, ஐந்து இலட்சம் மதிப்பு காளான்கள் இருக்கிறது, அதைத்தான் ஏழைத்தாயின் மகன் ஏப்பம் வரும்வரை சாப்பிடுவார், என்ற கதையெல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே. அத்தகைய காளான்களின் உபயோகமற்ற  தண்டு பதியைக் கொண்டு பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் மாற்றாக பொருட்களை எப்படி தயாரிக்கின்றனர்?...

சர்க்கரை உற்பத்தியில் இந்தியாதான் இரண்டாமிடம். இருந்த போதிலும் அதனை தயாரிக்க பிழியப்படும் கரும்பு சக்கைகளை என்ன செய்கிறார்கள்?...

வாழை நாரிலிருந்து சுகாதாரமான நாப்கின்கள் எப்படி தயாரிக்கின்றனர்?..

உலகையே சுழல வைத்த சக்கரத்தின் அப்டேட் வெர்ஷனான பழைய டயர்கள் என்னவாகின்றன?...

இன்றைய யுத்த பூமியான பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கிடைக்கும் குப்பைகளை (இஸ்ரேலின் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது) நூலிழையாக எவ்வாறு மாற்றுகின்றனர்?...

அறுந்துபோன, நாய்கடித்த, நமக்கு பிடிக்காமல் போன, 
தூக்கியெரியப்படும் செருப்புகளிலிருந்து அழகான கலைநயமிக்க பொம்மைகளை கென்யாவை சேர்ந்தவர்கள் எப்படி தயாரிக்கின்றனர்?...

அழுகிய காய்கறிகள் பழங்கள் பூக்களிலிருந்து மாற்று எரிபொருளான பயோ கேஸ் எப்படி தயாரிக்கின்றனர்? அது எவ்வாறு உதவுகிறது?...

வீணாகும் சிகரெட், கார்பன் கழிவுகள், பெயிண்ட், இவைகள் என்னவாகின்றன?...

என குட்டிகுட்டியாக இந்த டாகுமெண்டரிகளில் விவரிக்கின்றனர். அவற்றில் சில புதுமையாகவும் வியப்படையச் செய்வதாகவும் இருக்கிறது.

அதனோடு, 

இந்தோனேஷியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய குப்பை கிடங்கில் தேவையான பொருட்களை எப்படி சேகரிக்கின்றனர்?..

கரை தட்டிய கப்பலின் பாகங்களை எப்படி உடைக்கின்றனர்?... 

கடலில் மிதக்கும் குப்பைகளை எவ்வாறு சேகரிக்கின்றனர்?...

என்பனவற்றைப் பற்றி, குப்பைகளை சேகரிக்கும் பலரின் வாழ்வியலோடு கலந்தும் விவரிக்கின்றனர். 

உச்சகட்டமாக,  ஓய்ந்துபோன துப்பாக்கி, வெடிக்காத குண்டு,  சிதைந்துபோன பீரங்கி, காலாவதி கண்ணிவெடி என ஆப்கானிஸ்தான் நாட்டின் போர் குப்பைகள் பற்றிய டாகுமெண்டரி பகுதி வியக்க வைக்கிறது...

INSIDER செய்தி நிறுவனத்தின் மற்றுமொரு நேர்த்தியான அவசியமான படைப்பு என இவற்றை சொல்லலாம். இந்த குப்பைகளைப் போல தேவையற்றவைகளை போதிக்கும் அடுத்த தலைமுறைக்கு பாடமாகவும், நமக்கு நல்ல விழிப்புணர்வாகவும் இந்த டாகுமெண்டரிகள் இருக்கும். எதற்காக வாங்குகிறோம் எனத் தெரியாமல் வீட்டிற்கு கொண்டுவரும் சில பொருட்களைப் பற்றிய புரிதலும் கிடைக்கும். அப்பாடா! என் வீட்டு குப்பை குறைந்தது.. என அடுத்தமுறை எதையாவது தூக்கியெரியும் போது மண்டைக்குள் மணியடிக்கவும் செய்யும்... 


இன்றைய நிலவரப்படி ஒவ்வொரு ஆண்டும் நாம் 2.12 பில்லியன் டன் குப்பைகைளை கொட்டி வருகிறோம். Reduce, Reuse, Recycle என்பது குப்பைகளை கட்டுப்படுத்தும் மந்திரமாக இருக்க Recycle என்பது அதிக பயன் தரக்கூடியதாக இருக்கும். எடுத்துக்காட்டாக குளிர்பானங்கள் தொடங்கி அனைத்து உபயோகப் பொருட்களின் Pet பாட்டில்களை Synthatic fiber என்ற நூலாக மாற்றி அதனில் ஆடைகளை தயாரிப்பது தற்போது பிரபலமாக இருக்கிறது. குப்பைகளிலிருந்து மதிப்பு கூட்டும் பொருட்களை தயாரிப்பது வியாபாரம் மட்டுமல்லாது இந்த புவிக்கு செய்யும் மிகப் பெரிய தொண்டாகவும் இருக்கும்...