அஃறிணை பத்து.

ஆறறிவு கொண்ட மனிதர்களைவிட கீழானவைகளை அஃறிணை என்கிறோம். அவைகளைவிட மேம்பட்டவையா நாம்?..
நாய் வளர்ப்போரை 
சபித்துக் கொண்டே
பூனை வளர்க்கிறேன்
கிளி வளர்ப்போரின்
சாபத்தோடு...
எப்போது சாவாய் 
துரத்திக் கொண்டிருந்த
அந்த எலி
செத்த பின்பு
பாவம்...
ஏனிந்த காகம்
மற்ற பறவைகளை விட
இவ்வளவு
அழகாக இருக்கிறது...
பாம்பின் கால்
நிலமறியும்...
பெருங் கலவிக்குப் பின் 
மாயும் 
ஆண் சிலந்தியின்
காதற் கொடுப்பினை 
எதற்கு வாய்க்கும்...
இலக்கடைய
பருந்தாக வேண்டும்...
கனவிற்கும்
நிஜத்திற்கும்
இருவாழ் தாவும்
நினைவுத் தவளை...
பகலில் ஈ
இரவில் கொசு...
என் எடைக்கு
இயலாத பாரத்தை
தூக்கிக் கொண்டு
ஊர்கையில்
எறும்பை 
நினைத்துக் கொள்வேன்...
கரிச்சான் 
தொடங்கிய பகல்
ஆந்தையின் 
அலறலோடு
முடிகிறது...