ஹேண்ட் பான் டிரம்மும் தெய்வீக இசையும்.

டை சுடும் எண்ணெய் சட்டியை கவிழ்த்தார் போன்ற வடிவம், ஆப்ப சட்டியின் அப்டேட் வெர்சன். கொஞ்சம் பெரிதான குழிப்பணியார சட்டி, நவினமாக யோசித்தால் ஏலியன்கள் உலாவருவதாக நம்பப்படும் பறக்கும் தட்டைப் போன்ற அமைப்பை கொண்ட ஒன்றை மடியில் வைத்து தட்டிக் கொண்டிருக்கிறார்களே! அந்த இசைக்கருவி என்னவாக இருக்கும்? என நினைத்ததுண்டு. 

ஹேண்ட் பான் டிரம்
(Handpan drum)

நவின காலத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரு தாளக் கருவியாகும்.

தாளக் கருவியில் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் தோன்றிய "ஸ்டீல் டிரம்" மிகப் பிரபலம். அதன் தாயகம் ஆப்பிரிக்கா. எஃகு உலோகத்தால் செய்யப்பட்ட  இதனை "ஸ்டீல்பன்" என அழைக்கிறார்கள்.  சுவிட்சர்லாந்தை சேர்ந்த "ரோஹ்னர்" மற்றும் "சபீனா ஸ்கேரர்" ஆகியோர் அந்த ஸ்டீல்பன்னில் சில மாற்றங்களை செய்து எளிமையாக ஒரு தாளக் கருவியை உருவாக்கினர். அதுவே "ஹேண்ட் பான் டிரம்" ஆகும்.  இதற்கு "ஹாங்" என்ற பெயரும் உண்டு. ஜெர்மன் மொழியில் கை அல்லது மலைப்பகுதி என இரண்டு அர்த்தங்களை கொண்டது. 

இந்த இசைக்கருவி எஃகு நைட்ரேட்டினால் செய்யப்பட்ட இரண்டு அரை உலோக தட்டுகள் இணைந்ததாக இருக்கிறது. மேற்பகுதி "டிங் (Ding)" என அழைக்கப்படுகிறது. அதில் ஏழு அல்லது எட்டு டோன் புலன்கள் இருக்கிறது. அதனை விரல்களால் தட்டுவதன் மூலம் அற்புதமான இசை பிறக்கிறது. வெற்று பரப்பைக் கொண்ட அடிப்பகுதி "கூ (Gu)" என அழைக்கப்படுகிறது. மேளம், மிருதங்கம், கடம் போல மடியில் வைத்து வாசிக்கும்படியாக இந்த இசைக்கருவி இருக்கிறது. இதிலிருந்து வெளிப்படும் இசை வீணை மற்றும் மணியோசையை கேட்பது போல் இருக்கிறது. அது ஒருவித தெய்வீக உணர்வை ஏற்படுத்துகிறது. D3 Ding, A3, B♭3, C4, D4, E4, F4, A4 என இதனை வாசிக்க அடிப்படை குறிப்புகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஆராயாமல் கண்ணை மூடிக்கொண்டு இதன் இசையை ரசித்து, கரைந்து, உறைந்து, மெய்சிலிர்த்துப் போகலாம். 

இந்த புதுமையான இசைக்கருவி தற்போதுதான் பிரபலமாகிவருகிறது. இதனை இசைப்பவர்களும் வெகு சிலரே இருக்கின்றனர். அவர்களில் "டேனி கட்" மற்றும் "மார்கஸ் ஆஃப்பீட்" என்ற இருவர் கில்லாடிகளாக இருக்கிறார்கள். சொல்லப்போனால் இவர்களால்தான் இந்த இசைக்கருவி வெளியுலகிற்கு தெரிய வந்தது எனலாம். இவர்கள் இருவரும் 2011 ஆம் ஆண்டு "Hang Massive" என்ற பெயரில் இசைக்கோர்வையை யூடியூபில் வெளியிட, அது அமோக வரவேற்பை பெற்றது. இன்று அவர்கள் மடியில் ஹேண்ட் பான் டிரம்மை கட்டிக்கொண்டு கலவரமில்லாத அமைதியான இசை நிகழ்சிக்காக உலகமெங்கும் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். 


எண்ணெய் சட்டி, ஆப்ப சட்டி, குழிப்பனியார சட்டி, பறக்கும் தட்டைப் போன்ற அமைப்பை கொண்ட ஒன்றை மடியில் வைத்து தட்டிக் கொண்டிருக்கிறார்களே! அந்த இசைக்கருவி என்னவாக இருக்கும்? என்பதை "டேனி கட்" மற்றும் "மார்கஸ் ஆஃப்பீட்" இவர்களது வீடியோக்களை பார்த்துதான் அடியேன் தெரிந்துகொண்டேன். அதை இந்த பட்டியல் (Playlist) மூலம்  அறிமுகப்படுத்துகிறேன். ஒரு புதுவித இசைக் கருவியையும், மற்றும் அதன் தெய்வீக இசையையும் நீங்களும் உணர்ந்து பாருங்களேன்.