தீர்ப்பு நாள்.

கம் அவமதிக்கப்படும்போது புறம் முன்னுக்கு நிற்கும். புறத்தோற்றத்தை வைத்துதான் நாம் புழங்கிக் கொண்டிருக்கிறோம். அவலட்சணமான முகம், ஊணமுற்றவர்கள் அல்லது ஒழுங்கற்ற உடலமைப்பு கொண்ட மனிதர்களை நாம் தீண்டத் தகாதவர்களாக கீழான நிலையிலேயே வைத்திருக்கிறோம். பொதுவெளியில் அவர்களிடமிருந்து சற்று தள்ளியே இருக்கிறோம். நமது புறநானூறும், ஏளனப் பார்வைகளும், கேலி கிண்டல்களும், அலட்சியப்படுத்துதலும் பழக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கென்று அகம் இருக்கிறது அதில் முழுவதும் ஆன்மா நிறைந்திருக்கிறது. அதனை அழகாக சுட்டிக் காட்டும் எகிப்து நாட்டு திரைப்படம்தான் "Yomeddine".

எகிப்தின் பாலைவனப்பகுதியில் ஒதுக்குப் புறமாக இருக்கும் தொழுநோயாளிகளுக்கான முகாமில் "பெஷாய்" என்பவன் பல வருடங்களாக வசித்துவருகிறான்.  தொழுநோயிலிருந்து மீண்ட அவன் சிறுவயதில் தன்னை முகாமில் சேர்த்துவிட்ட தனது தந்தையைப் பற்றி தெரிந்துகொள்கிறான். தனக்கென ஒரு சொந்தமும் சொல்லிக்கொள்ள ஒரு ஊரும் பந்தமும் இருக்கிறது என்ற மகிழ்வில் அதனைத்தேடி நகரத்திற்கு புறப்படுகிறான். அவனது பயணத்தில் "ஒபாமா" என்ற பத்து வயது அனாதை சிறுவனும் ஒரு கழுதையும் இணைகிறார்கள். இவர்கள் மூவரும் பாலைவனம் தாண்டி நகரத்தை அடைந்தார்களா? அவர்களுக்கு வழியில் கிடைத்த அனுபவம் எத்தகையது? அவர்கள் சந்தித்த மனிதர்கள் எப்படிப் பட்டவர்கள்? என்பதுதான் இந்த திரைப்படம்.

Rode Side Movie என ஒருவரியில் இந்த திரைப்படத்தை விமர்சித்துவிடலாம். ஆனால் அதன் தாக்கம் கொஞ்சம் அழுத்தமானவை. இந்த திரைப்படத்தில் நடித்த அனைவரும் புதியவர்கள். முதன்மை கதாபாத்திரமான பெஷாய் கூட நிஜத்தில் தொழுநோயிலிருந்து குணமடைந்தவர். முகத்தில் தழும்புகளுடன் கை கால்களில் விரல்களற்ற நிலையில் கதையுடன் பயணிக்கும் அவரது கதாபாத்திரம் அய்யோ! பாவம் என காட்டாமல் இயல்பாக படைக்கப்பட்டிருக்கிறது. அவரது அறிமுக காட்சியிலேயே நாம் அவருடன் இணைந்துவிடுகிறோம். புத்திசாலித்தனம், இயலாமை, வெறுப்பு, கோபம், நோய்வாய்ப்பட்ட தனது மனைவி மற்றும் சிறுவன் ஒபாமாவிடம் காட்டும் மென்மை என பெஷாய் மனதில் நின்றுவிடுகிறார். அதைப் போலவே மற்ற கதாபாத்திரங்களும் இருக்கிறார்கள். கழுதை வண்டி, லாரி, படகு, பேருந்து என கதையின் பயணத்தில் ஒளிப்பதிவும் பின்தொடர, பாலைவனம், கிராமங்கள், நகரம் என அழகாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு இசை பக்கபலமாக இருக்கிறது. எங்கும் எந்த நிமிடமும் சிறிதளவு இயல்புத் தன்மை மாறாமல் திரைப்படம் அதன் போக்கிலிருக்கிறது. ஒரு திரைப்படத்தின் இயல்பான பாணி அதன் கதையை உண்மையாக்கும். இந்த திரைப்படமும் அதைத்தான் செய்கிறது. 



உறவைத்தேடி நகரத்திற்கு தனியாக புறப்பட்ட நிலையில் என்ன "மறந்துட்டியா பெஷாய்?" என சிறுவன் ஒபாமா கேட்கும் தருணம்... அதில் என்ன இருக்கிறது என ஒருவன் "எல்லாம் குப்பை" என வேடிக்கையாக குப்பை பொறுக்கும் பெஷாய் சொல்லும் தருணம். "நானும் மனிதன்தான்" என இறுதியில், தனிமையில் மலைகள் எதிரொலிக்க பெஷாய் கத்தும் தருணம், "நான் அவளைக் குணப்படுத்த அனுப்பினேன், அவள் சவப்பெட்டியில் திரும்பி வந்தாள்"
என பெஷாய் மருத்துவரிடம் சொல்லும் தருணம், பெஷாயின் சிறுவயது பிளாஷ்பேக் என மனதை நெகிழச் செய்யும் காட்சிகள் திரைப்படத்தில் ஏராளம் இருக்கின்றன. அது நம்மை உறைந்துபோகச் செய்கின்றன. அது உள்ளுக்குள் எது குடும்பம்? எது நட்பு?எது அழகென்ற? கேள்விகளை எழுப்புகின்றன. 

Yomeddine
(Day of Judgement)
Directed by - Abu Bakr Shawky
Written by - Abu Bakr Shawky
Cinematography - Federico Cesca
Music by - Omar Fadel
Country - Egypt
Language - Arabic
Year - 2018

பெஷாய் தனது பயணத்தில் பலரை சந்திக்கிறான். அவர்களில் சிலர் அவனது தோற்றத்தை கண்டு விலகிச் செல்கின்றனர். சிலர்  பயங்கொள்கின்றனர், சிலர் இயல்பென இருந்துவிடுகின்றனர். அதிஷ்டவசமாக இயல்பென இருப்பவர்களே பெஷாயுடன் தங்கிவிடுகின்றனர். எகிப்திய சமூகம் உடல் ஊணமுற்றவர்கள், நோயாளிகள், கைவிடப்பட்டவர்களை எவ்வாறு நடத்துகிறது என இயக்குனர் சொல்ல முயன்றாலும், இனம், மதம், ஜாதி, உயர்ந்தவன், தாழ்ந்தவன், கருப்பு, சிவப்பு, லட்சணம், அவலட்சணம் என  எந்தவொரு அடையாளமும் இல்லாமல் "மனிதனை சக மனிதனாக பார்ப்பவர்களுக்கே இந்த உலகம் சொந்தம்" என இந்த திரைப்படம் சொல்லாமல் சொல்கிறது.

துளிகள்:

🖊️... ஒரு ஆவணப்படத்திற்காக "ராடி கமல்" என்ற தொழுநோயாளியை இயக்குனர் சந்திக்க, அவரே இந்த திரைப்படத்தின் நாயகன் பெஷாய்.

🖊️... சிறுவனான ஒபாமாவும் (அஹ்மத் அப்தெல்ஹாஃபிஸ்) பெஷாயும் திரைப்படம் முழுவதும் உலவுகிறார்கள். 

🖊️... எகிப்திய மொழியில் "யோமடின் (Yomeddine)" என்பதற்கு தீர்ப்புநாள் என்று பொருள்.

🖊️... இந்த திரைப்படம் 2018 ஆம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டது.

🖊️... "Hajjan" மற்றும் "Sea of Sands", இயக்குனர் அபுபக்கர் ஷாவ்க்கியின் அடுத்த தயாரிப்புகளாகும்.