கோரபக்.

பேய், பிசாசு, பூதம், ஆவி, இரத்தக்காட்டேரி இவைகளெல்லாம் இருபத்தோறாம் நூற்றாண்டிலும் உலகின் எல்லா இடங்களிளும் இருக்கின்றன. மதியம் வெளியே போகாதே பூதம் தின்னுடும், புளியமரத்தில் பிசாசு இருக்கும், இருட்டினால் பேய் வரும், நள்ளிரவு ஆவி அலைவதற்கான நேரம், இரத்தக்காட்டேரி வெளிச்சம் பட்டால் மறைந்துவிடும் என  அச்சுறுத்துவதற்காக சொல்லப்படும் கதைகளில் அவைகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய கதைகளை தாத்தா அப்பாவிற்கு சொல்ல, அப்பாவிடமிருந்து அதைக்கேட்டு நம் பிள்ளைகளுக்கு நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாட்டுப்புற தொன்மவியல் கதைகளிலிருந்து, புராண இதிகாச கதைகள் வரை அவைகளே நிரம்பியிருக்கின்றன. பேய் ஓட்டுகிறேன், பிசாசு பிடிக்கிறேன், ஆவியுடன் பேசுகிறேன் என கல்லாகட்டும் தொழிலும் ஒருபுறம் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. பயம்தான் மிகப்பெரிய வியாபார களம். பேய், பிசாசு, பூதம், ஆவிகளைப் பற்றிய பயம் போய்விட்டால் அவற்றின் கதைகள் சுவாரசியங்கள் நிறைந்தது. இந்த குறும்படமும் அத்தகையதுதான். சுவாரசியத்துடன் பார்க்கிறீர்களா அல்லது பயத்துடனா என்பது தங்களின் விருப்பத்திற்கு உட்பட்டது. 

அசாம் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் வசித்துவரும் "தபன்" என்பவனுக்கு மீன்பிடிப்பது தொழிலாக இருக்கிறது. அவனது மனைவி "மாலோதி" அவனைவிட மிகவும் இளையவளாக இருக்கிறாள். தபன் தினமும் நள்ளிரவில் ஆற்றில் மீன்பிடித்து அதை சந்தையில் விற்று வருகிறான். அதில் போதிய வருமானம் இல்லாதது ஒருபுறம், தன்னைவிட வயது குறைந்த மனைவியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத நிலை மறுபுறம், என அவன் மனைவியால் வெறுக்கப்படுபவனாக இருக்கிறான். 

ஒருநாள் தபன் மீன்பிடித்துவிட்டு வர, அதில் சிலவற்றை அவனது மனைவி திருடிக் கொள்கிறாள். அதை வாடிக்கையாக வைத்திருக்க, பிடிபட்ட மீன்கள் தினமும் காணாமல் போவதால் அவன் கவலையடைகிறான். மற்றொருநாள் மாலோதியின் தோழிகள் கிராமத்தில் நடைபெறும் நடன நிகழ்ச்சிக்கு அவளை அழைக்கின்றனர். "ஓஜபாலி" எனப்படும் அசாமின் பாரம்பரிய நடணத்தை தோழிகளுடன் அவள் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு அழகான ஆண் அவளை பார்த்து புன்னகைக்கிறான். மாலோதியும் பதிலுக்கு புன்னகைக்கிறாள். 

இதற்கிடையில் சந்தையிலிருந்து திரும்பிவரும் தபனுக்கு, கிராமத்தில் உள்ள ஒருசிலர் அங்கிருக்கும் எருமைகளும் பசுக்களும் மர்மமான முறையில் கழுத்தறுபட்டு இறந்துபோன சம்பவத்தை சொல்கின்றனர். இந்த செயலை அசாமில் இருக்கும் பழம்பெரும் உயிரினமான "கோரபக்" (பேய், பூதம் போன்றது) செய்திருக்கும் என சந்தேகிக்கின்றனர். மேலும் ஒருசிலர் தபனின் மனைவிக்கும் வேறொரு ஆணுக்கும் உள்ள கள்ள உறவைப் பற்றி பேசி வம்பு செய்கின்றனர். அதனை கேட்க பொருக்காது அவன் வீட்டிற்கு ஓடுகிறான். வழியில் கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடக்கும் எருமைகளை பார்த்து பயந்து போகிறான். அன்று நள்ளிரவு மீன்பிடிக்க செல்லுவதை தவிர்க்கிறான். தனது கணவன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதை மாலோதி கண்டிக்கிறாள். தபன் தான் கண்டதையும், தனது பயத்தையும் அவளிடம் கூறுகிறான். அதனை ஏற்க மறுக்காத அவள் அன்றிரவு அவனை திட்டி வலுக்கட்டாயமாக அனுப்புகிறாள். 

வெறும் வயிற்றோடு தபன் வலையை எடுத்துகொண்டு மீன்பிடிக்க செல்ல, சிறிதுநேரத்தில் வீட்டிற்குள் ஒரு ஆண் நுழைகிறான். நடன நிகழ்ச்சியின்போது மாலோதியை பார்த்து புன்னகைத்த ஆசாமியான அவன், அவளுக்காக புதுத்துணி ஒன்றை கொடுக்கிறான். மாலோதியும் தன் இரகசிய காதலனுக்காக தனது கணவன் பிடித்து வந்த மீனிலிருந்து திருடியதை பக்குவமாக சமைத்து வைத்திருக்கிறாள். இருவரும் அதனை சாப்பிட்டுவிட்டு சல்லாபிக்க, ஊராரின் கேலிபேச்சு உண்மையாகிறது. 

நள்ளிரவில் ஆற்றில் மீன்பிடிக்கும் தபனுக்கு ஒரு உருவம் தெரிகிறது. அது கோரபக் போன்று இருக்கிறது. அதனை கண்ட அவன் பயத்தில் தன் வேலையை விட்டுவிட்டு வீட்டிற்கு ஓடுகிறான். வீட்டில் தன் மனைவியுடன் வேறொருவன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். இரகசிய காதலர்கள் இருவரும் செய்வதறியாது தபனை நெறுங்கி அவனை கொலை செய்கின்றனர்.

பொழுது லேசாக புலர்கிறது. கிராம மக்கள் பலர் தபனின் குடிசைக்கு முன்பு நிற்கின்றனர். குடிசையின் உள்ளே மூன்று பிணங்கள் கழுத்தறுபட்டு இரத்த வெள்ளத்தில் இருக்கின்றன. மாலோதியும் அவளது இரகசிய காதலனும் தபனை கொலை செய்திருக்க, அவர்கள் இருவரும் எப்படி இறந்தார்கள் என்பதான் இந்த குறும்படத்தின் மீதிக்கதை. 


கோரபக் என்பது அசாமின் கிராமப்புரங்களில் இன்றும் இருப்பதாக நம்பப்படும் ஒரு பழங்கால உயிரினமாகும். ஆறு, குளம், ஏரி, போன்ற நீர் நிலைகளில் அது வசிக்கும். பார்ப்பதற்கு மனித தலையும், குதிரை உடலும் சரிசமமாக கொண்ட அது, மீனை விரும்பி உண்ணும். ஆடு மாடுகள் உட்பட மனிதர்களையும் கொல்லும். தவறு செய்பவர்களை கண்டிக்கவும், மற்றவர்களை அச்சுருத்தவும் செய்யும் அதனைப் பற்றிய கதைகள் அசாமில் ஏராளம் இருக்கின்றன. அவர்களது மொழியில் "கோரா" என்றால் குதிரை என்று பொருள். அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த குறும்படத்தை எடுத்திருக்கின்றனர். குறும்படத்தின் இடையில் வரும் ஓஜபாலி நடனமும், புராணக் கதையுடனான பாடலும் தனி அழகு. தொடக்கத்திலும் முடிவிலும் ஒளிக்கும் "சங்கரதேவர்" மற்றும் "மாதவதேவரால்" இயற்றப்பட்ட "Borgeet" என்ற பிரார்த்தனை பாடல் அதைவிட அழகு. மேலும் திரைக்கதையில் கவனிக்கத்தக்க காட்சிகளும், அதற்குப் பின்னால் அவிழும் முடிச்சுகளும், ரசிக்க செய்கின்றன. கதையின் தொடக்கத்தில் மாலோதி திருடி வைக்கும் மீன், காதலுடன் இணைந்து அந்த மீனை தின்றுவிட்டு சன்னலுக்கு வெளியே போடும் அதன் முள். நடன நிகழ்ச்சியில் மாலோதி கட்டியிருக்கும் புது புடவை, நள்ளிரவில் தபன் பார்க்கும் கோரபக் முகமும் குறும்படத்தின் இறுதியில் வரும் பெரியவரின் முகமும் ஒன்றுபோல் இருப்பது. தபனே கோரபக்காக இருப்பது, என திரைக்கதையில் மாயாஜாலம் செய்திருக்கிறார்கள். என்னிடம் ஒரு கதை இருக்கிறது அதற்கு முடிவு இருக்கிறது. அதன் முடிவு பார்பவர்களின் கண்ணோட்டத்தில் இருக்கிறது என இந்த குறும்படத்தை படைத்திருக்கின்றனர். 

GHORAPAK
Directed by - Chinmoy Barma
Written by - Chinmoy Barma
Cinematography - Deep Jyothi, Mazumdar, Chiranjit, Ram Chiary 
Music by - Mandeep Raro
Country - India
Language - Assamese
Year - 2020. 

போய், பிசாசு, பூதம், ஆவிகள் எல்லாம் இன்னும் இருக்கிறதா என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்க, அவைகளைவிட கொடுரமான மனிதர்களுடன் நாம் வாழ பழகிவிட்டோம். ஆக பயத்துடன் அல்லாது, சுவாரசியத்துடனே இந்த குறும்படத்தை ஏற்றுக் கொள்வோம்.