ச் ..சே!.. என்ன வேலை இது.

"ச் ..சே.. என்ன வேலை இது. எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டு எங்கேயாவது போய் தொலையலாம் போலிருக்கிறது" என்ற சலிப்பு தோன்றாதவர்கள் யாரும் இல்லை எனலாம். விவசாயம் உட்பட பல வேலைகள் இன்று ஒரு கட்டுப்பாட்டிற்குள், வரையறைக்குள், அமைப்பிற்குள் வந்துவிட்டது. போதாத குறைக்கு 12 மணிநேர வேலை, வாரம் 3 நாள் விடுப்பு, 4 நாள் கடுப்பு போன்ற பைத்தியக்கார சட்டங்களும், யோசனைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பண மதிப்பிழப்பு, பொருளாதார சறுக்கள், GST குளறுபடி, வங்கி திவால், பணம் பனால் போன்று எது நடந்தாலும் அது உழைக்கும் வர்க்கத்தின் தலையிலேயே கட்டப்படுகிறது. முன்பில்லாத அளவிற்கு பெரும் சுமையை சில ஆண்டுகளாக நாம் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதே மிகப்பெரிய உண்மை. இன்று உலகில் 98% நபர்கள் தங்களுக்கு பிடிக்காத வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கணக்கும் இருக்கிறது. அதன்படி பார்த்தால் "ச் ..சே!.. என்ன வேலை இது" என்ற சலிப்பு எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறது. ஆனாலும் அதனை கடந்து நாம், நம் குடும்பம், குழந்தைகள், பொருளாதாரம், சமுதாயம் என சகித்துக்கொண்டு உழைக்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அது ஒருபுறமிருக்க அடுத்தமுறை "ச் ..சே!.. என்ன வேலை இது" என தோன்றும்போது அதனை விட்டுவிட்டு, இந்த குட்டி குட்டி டாகுமெண்டரியில் வருபவர்களை நினைத்துக் கொண்டால் அது சற்று ஆறுதலாகவும் உந்துதலாகவும் இருக்கக்கூடும். ஏனென்றால் அவர்களெல்லாம் நாம் நினைத்துக் கூட பார்க்க இயலாத வேலைகளை செய்யக் கூடியவர்கள். வாழ்வதற்காக தினம்தினம் தங்களையே பணயம் வைக்க தயங்காதவர்கள். 

செய்திகளை தரும் "Insider News" என்ற நிறுவனத்தார் "Riskey Business" என்ற பெயரில் குட்டி குட்டியாக சில டாகுமெண்டரிகளை எடுத்திருந்தனர். அதில் உலகின் சில இடங்களில் ஆபத்தான வேலைகளை செய்யும் சிலரது கதைகளை ஆவணப் படுத்தியிருந்தனர். 

பாகிஸ்தானின் கிராமத்தில் செங்கல் சூளையில் வேலை செய்யும் ஒரு குடும்பத்தின் கதை. 

தற்போது பேசும் பொருளாக இருக்கும் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்யும் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ஒரு ஜாதி பிரிவினரின் கதை.

இந்தோனேஷியாவின் பெரும் குப்பை கிடங்கில் குப்பை பொறுக்கும் சிலரின் வாழ்க்கை கதை.

சூப் தயாரிப்பதற்காக "Swiftlets" என்ற பறவையின் கூட்டை எடுக்க, பல அடி உயரம் கொண்ட மலையில் தொங்கும் பிலிப்பைன்ஸ் மக்களின் கதை. 

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உயிரோடு குமுறிக் கொண்டிருக்கும் எரிமலைக்கு அருகில் "devil gold" என அழைக்கப்படும் காப்பர் கட்டிகளை வெட்டியெடுக்கும் சிலரின் கதை.

கரணம் தப்பினால் மரணம் என இருக்கும் பெரும் பள்ளத்தாக்கில் அபூர்வ தேன் எடுக்கும் நேபாள நாட்டு மக்களின் கதை. 

கொலம்பியாவில் கொகைன் என்ற போதைப்பொருள் தயாரிக்க தேவைப்படும் எரிபொருளை சட்டவிரோதமாக உருவாக்கும் சிலரை உயிரை பணயம் வைத்து தேடும் காவல் துறையினரின் கதை. 

ஜார்கண்டிலிருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமான ஜாரியாவில் நிலக்கரி எடுக்கும் "ரிங்கி குமாரி" என்ற பெண்ணின் கதை. 

கடலுக்கு அடியில், 65 அடி ஆழத்தில் டின் என்ற தனிமத்தை எடுக்கும் இந்தோனேஷியாவின் பாங்கா மற்றும் பெலிதுங் தீவை சேர்ந்தவர்களின் கதை. 

360 அடி உயர காற்றாலையின் உச்சியில் வேலை செய்யும் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்களின் கதை. 

கண்ணாடி வாளையல் அணிந்த கைகள் தனி அழகுதான். ஆனால் அந்த வளையல்கள் செய்யும் தொழில் ஆபத்தானது. வெப்ப மூட்டக் கூடியது. அதனில் ஈடுபடும் இந்தியர்களின் கதை. 

நகைகள் செய்ய தேவைப்படும் கற்களை தோண்டியெடுக்க கைவிடப்பட்ட சுரங்கத்தில் மூச்சை பிடித்துக்கொண்டு நுழையும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் கதை.

அதேபோன்று நகைக்காக பள்ளத்தாக்கில் கற்களைத் தேடுவதோடு, அதனை விற்க படாத பாடு படும் ஆப்கானிஸ்தானின் சிலரது கதைகள். 

தீவிரவாதி வைத்தானா? அல்லது அவனை தேடுகிறவாதி வைத்தானா? எனத் தெரியாது ஈராக்கில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளையும், வெடிக்காத பல ஆபத்தான குண்டுகளையும், அகற்றும் வேலை செய்யும் "ஃபலா உசேன்" என்ற நபரின் கதை. 

என டாகுமெண்டரியில் இருக்கும் சிலரது கதைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. உலகில் இப்படிப்பட்ட வேலைகள் இருக்கிறதா? என யோசிக்கும் அளவிற்கு அவர்களது கதைகள் இருக்க, அவற்றுள் சில நம்மை கண்கலங்கவும் வைக்கின்றது. கதையில் வரும் சிலரது குடும்பங்களையும், அவர்கள் செய்யும் வேலைகளுக்கு பின்னால் இருக்கும் பணம் படைத்த சக்தியையும், அரசியலையும், இயல்பையும் அலசி ஆராய்வது தனி அழகு. வெறும் 10-15 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டாகுமெண்டரிகளை அதிக சிரத்தையுடனும், சிரமத்துடனும், நேர்த்தியுடனும், எடுத்திருக்கிறார்கள். தேர்ந்த ஒளிப்பதிவு, அமைதியான பின்னணி இசை, அழகாக விவரிக்கும் குரல் என இருக்கும் இந்த குட்டி குட்டி டாகுமெண்டரிகள் நமக்கு நிச்சையம் தன்னம்பிக்கையும் உற்சாகத்தையும் தரும். அடுத்தமுறை "ச் ..சே!.. என்ன வேலை இது" என்ற சலிப்பு ஏற்படும்போது ஒரு மாற்றத்தை உருவாக்கும்...