மழையறிய ஆவல்.

ப்ரல் வெய்யிலே இந்த போடு போடுதே! மே ஜூனுக்கு எப்படி சமாளிப்பது? என நினைத்திருக்க, இயற்கை கொஞ்சம் கருணை காட்டியிருக்கிறது. இங்கு நான்கு நாட்களாக பரவலான மழை. பயணத்தின் போதுகூட அங்கும் மழை. வேண்டாம் என்றாலும் ஆனந்தம் தருவது மழை. யாருக்காவும் இல்லாது பொழிவது மழை. அத்தகைய மழையை விடுவோமோ?.. இங்கு மழை, அங்கு மழை, எங்கும் மழையா? என தெரிந்து கொள்ளத்தான் இந்த "மழை மழையறிய ஆவல். 
மழையென
ஓடி ஒளியாதீர்கள்
அம்மழைக்கு இசைந்த
பிரபஞ்சத்தின் 
சிறு பிண்டமே
இவ்வுலகம்...
இலை மேல் தொட்டு
வேர் கீழ் விட
உடல் முழுவதும் 
வாங்கிக் கொள்ளவேண்டும்
மரம் போல்
மழையை... 
நனையப் பிடிக்காத 
மழையென்று
பொழிவதில்லை... 
தன்னை சபிக்கும்
உயிர்களுக்கும்
மழை 
வரம்...
விதை
நம்பிக்கையை
மழை 
கைவிட்டதில்லை...
இடம் பார்த்து
பொழியும் மழை
இனம் பார்த்து 
பொழிவதில்லை... 
அக்குள் அழுக்கைப்போல்
மறைந்திருக்கும் 
கழிவுகளை கழுவத்தான் 
மழை... 
மண் மழை
மழை மண் 
ஆதியில் தொடங்கிய 
ஆட்டம்...
மண்வாசனை 
நுகர்வைப் போல
மழையொலியும்
கேட்டுப் பாருங்கள்...
உள்ளம் நனைக்கும்
மழையை
குடை
என்ன செய்துவிட முடியும்...
விதைக்க 
காத்திருப்பவனுக்கும்
அறுக்க
ஆயத்தமாயிருப்பவனுக்கும்
ஒரே மழைதான்...
மழை
மழையறிய
ஆவல்...