சாதுவான பாரம்பரியம்.

ஒரு நாட்டைப் பற்றி புரிந்துகொள்ள, அதன் வரலாற்றை அறிந்துகொள்ள, அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையை தெரிந்துகொள்ள இலக்கியங்களின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. அதுவும் எளிய மனிதர்களின் கதைகள் மூலம் வரலாற்றை விவரிக்கும் இலக்கிய படைப்புகள் எத்தனை காலமானாலும் சாகாவரம் பெற்றவையாக நிலைத்துவிடுகின்றன. ஃபின்லாந்தின் குடியானவர் வாழ்க்கையை பதிவுசெய்த "சாதுவான பாரம்பரியம் (Hurskas Kurjuus)" என்ற இந்த நாவலும் அத்தகையதே. 

1860 -களில் ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்த ஃபின்லாந்தின் மிகப்பெரும் பஞ்சத்தில் இந்த நாவல் தொடங்குகிறது. முதலாம் உலகப்போருக்குப் பின்பு ஃபின்லாந்தின் உள்நாட்டு போர் நிகழ்ந்த 1917 வருடத்தோடு அது முடிவடைகிறது. கிட்டத்தட்ட இடைப்பட்ட அறுபது வருடங்களில் "யூகா தொய்வோலா" என்ற ஏழை விவசாய கூலியின் வாழ்க்கை வழியே ஃபின்லாந்தின் அக்காலகட்ட வரலாற்றை பதிவு செய்கிறது.

தேவாலய பதிவேட்டின்படி யோகன் ஆப்ரகாம் பெஞ்சமின் என்பவனின் மகன் "யூசி தொய்வோலா" என்பவனே நாவலின் நாயகன் ஆவன். "யூகா" அல்லது "யான்னெ" என சில காலகட்டங்களில் அவன் அழைக்கப்படுகிறான். தலை முழுவதும் வழுக்கையாகவும், முகத்தில் கலப்பின நாய்க்கு வளர்ந்திருப்பதை போன்ற தாடியுடன், அழுக்கு படிந்த ஆடையுடனும், யாரும் விரும்பாத வயதான தோற்றத்தில் அவன் நாவலில் அறிமுகமாகிறான். பிறந்ததிலிருந்து மகிழ்ச்சியற்ற நிலையிலேயே அவன் வாழ்ந்து வருகிறான். அவனது இளமைக்காலம் ஏழ்மையில் கழிகிறது. வாலிபமும் துயர் நிறைந்ததாக இருக்கிறது. ஒரு சிறு பண்ணை முதலாளியின் மூன்றாவது மனைவிக்குப் பிறந்திருந்தாலும், விதி அவனை கூலித் தொழிலாளி என்ற நிலையிலேயே வைத்திருக்கிறது. மனைவி, மக்கள், ஒரு பண்ணையின் குத்தகை விவசாயி என சிலகாலம் அவன் உயர்ந்திருந்தாலும் கொடிய பஞ்சமும், போரும், நாட்டின் நிலையும் அவனை கீழான நிலைக்குத் தள்ளுகிறது. உறவுகளற்ற நிலையில் தனியனாக, இறுதியில் அவன் செய்யாத கொலைக்காக மரண தண்டனைக்கு ஆளாகிறான். பிறந்ததிலிருந்து வாழ்க்கையின் சக்திகளுக்கு பணிந்தது போலவே மரணத்திற்கும் அவன் பணிந்து போகிறான்

நாவலின் கருப்பொருள் நிலம். நில உடைமையாளர்கள், விவசாயி, குத்தகை பண்ணை உழவன், விவசாய கூலிகள், தொழிலாளர்கள் என அடுக்கு கொண்ட ஃபின்லாந்தின் நிலம். அத்தகைய நிலத்தை வெவ்வேறு பருவகால நிலைகளில் நாவல் சுற்றி வருகிறது. நிலம் வைத்திருப்பவனின் அதிகாரம், பண்ணைக் கூலி முறை, அடிமைத்தனம், வறுமை, பட்டினி மற்றும் மனைவி, குழந்தைகள், வைப்பாட்டிகள், சார்ந்த குடும்ப உறவுகள், மற்றும் அரசாங்க, தேவாலய சட்டங்கள் போன்ற சமூக அடுக்குகள், நாவலில் பேசப்படுகிறது. 

விசாரணைக்கு முன்பே யூகா தொய்வோலா வழக்கின்‌ முடிவு ஐயத்‌திற்கிடமின்றித்‌ தெளிவாகிவிட்டது. கடைசிவரை குற்றச்‌ செயல்‌களில்‌ அவன்‌ ஈடுபட்டிருந்தான்‌. முரட்டுக்‌ கம்பளங்கள்‌ திருடியது அண்மை உதாரணம்‌. பைத்துலா எஜமானனின்‌ கொலையில்‌ அவனுக்கு முக்கியப்‌ பங்கு உண்டு என்பது வெளிப்படை. யூகாவை ஒருமுறை பார்த்தாலே போதும்‌. முதியவனான அவன்‌ துப்பாக்கிச்‌ சூட்டில்‌ உண்மையில்‌ ஈடுபட்டிருப்பான்‌ என்பதில்‌ கூரிய அறிவுடைய வழக்கறிஞருக்கும்‌ கட்டாயம்‌ சந்தேகம்‌ வந்துவிடும்‌. ஒட்டுமொத்த அந்தச்‌ சமுதாயத்தில்‌ சிறிதளவேனும்‌ அவனுக்காகப்‌ பரிவுகொள்ள ஒரே ஒரு நபர்கூட இல்லை...

- புத்தகத்திலிருந்து

அடுத்ததாக நாயகன் யூகா தொய்வோலா: 

பிறப்பும் குழந்தை பருவமும், நலிந்த உறவுகள், வாலிபப் பருவம், வாழ்வின் இதயம், மரணத்தின் வலிமை, கிளர்ச்சியாளன் என ஆறு பகுதிகளாக ஆறு வெவ்வேறு பருவ வயதோடு நாவல் முழுவதும் உலாவரும் அவன் இரக்கம், அவலம், பரிவு, மென்மை, மரணம் என மனித உணர்வுகளை நமக்கு காட்டுகிறான். வரலாற்றின் படி "புரட்சி என்ற வார்த்தைக்கு என்றென்றும் பலியாவது சாமாணியனே" என்பதற்கேற்ப அவர்களில் ஒருவனாக மாறிப் போகிறான். முதலாம் உலகப்போருக்கு பின்பு ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளும் மாற்றங்களும் ஏராளம். விவசாயம் செய்யும் அமைதியான குடியான மக்களும் ஆயுதமேந்தத் தொடங்கினர். அவர்களுக்கு யூகா எடுத்துக்காட்டாக இருக்கிறான். யூகா போராளி அல்ல, அத்தனைக்கும் துப்பாக்கி வைத்திருந்தாலும் அவனுக்கு அதை கையாளத் தெரியாதவனாகவே இருக்கிறான். இத்தனை வருடகாலம் அடிமை மற்றும் கூலி என்ற முறையிலேயே வாழ்ந்திருக்கிறோமே என்ற எண்ணம் அவனுக்கு இறுதியிலேயே ஏற்படுகிறது. அது அவனை புரட்சி பாதைக்கு இட்டுச் செல்கிறது. நாவல் முடிந்தாலும், அதில் இறந்தாலும், வாசிக்கும் நம் மனதில் யூகா நிலைத்துவிடுகிறான். 
சாதுவான பாரம்பரியம்
ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா
தமிழில்: முடவன் குட்டி முகமது அலி
காலச்சுவடு பதிப்பகம்

ஃபின்லாந்தின் மிகச்‌ சிறந்த இலக்கிய ஆளுமைகளில்‌ ஒருவராகக்‌ கருதப்படும்‌ நோபல் பரிசுபெற்ற " ஃப்ரான்ஸ்‌ எமில்‌ சீலன்பாவின்" அற்புதமான நாவல் இது. 1919 ஆம் ஆண்டு பின்னிய மொழியில் எழுதப்பட்ட இது மொழி பெயர்ப்பின் சிக்கலுக்கு உட்பட்டாலும் அழகான கவிதையாய், இயல்பான உரைநடையாய் இருக்கிறது. தவறாமல் வாசித்துப் பாருங்கள். 

துளிகள்:

🖊️... 1866, 1967, 1868 ஆண்டுகளில்‌ ஃபின்லாந்தில கொடிய பஞ்சம்‌ நிலவியது. கடும்‌ குளிர்‌, மழை இவற்றால் உணவு தானியப்‌ பயிர்கள்‌ பெருமளவு சேதமடைந்தன. உணவுப்‌ பற்றாக்குறை மக்களைப்‌ பிச்சையெடுக்கும்‌ நிலைக்குத்‌ தள்ளிற்று. பஞ்சத்தால்‌ ஓன்றரை லட்சம்‌ பேர்‌ மாண்டனர்‌. பட்டினி ஆண்டுகள்‌ எனவும்‌ தேசத்தின்‌ நெடிய நிழலெனவும்‌ ஃபின்லாந்து வரலாறு இதனைப்‌ பதிவுசெய்கிறது...

🖊️... 1917 டிசம்பரில்‌ ரஷ்யாவிடமிருந்து ஃபின்லாந்து சுதந்திரம்‌ பெற்றதும்‌ உள்நாட்டுக்‌ கலகம்‌ வெடித்தது. விவசாயக்‌ கூலிகள்‌, குத்தகை உழவர்கள்‌, தொழிலாளர்கள்‌ அடங்கிய செஞ்சேனை அணி ஒருபுறமும்‌. நில உடைமையாளர்கள்‌, மத்திய, உயர்‌ வர்க்கத்தினர் அடங்கிய பழமைவாத அணி - வெள்ளையர்‌ மறுபுறமும்‌ அதிகாரத்திற்காகப்‌ போட்டியிட்டனர்...

🖊️... ஃபின்லாந்தில் நிலவிய குத்தகை உழவன் முறை:

ஒரு விவசாயி அதாவது நில உடைமையாளன்‌ அல்லது பண்ணை எஜமானன்‌, தனது விளை நிலத்தின்‌ சிறுபகுதியை ஒரு உழவனுக்கு குத்தகைக்கு விடுவான்‌. குத்தகை உழவன்‌ அந்தச்‌ சிறிய குத்தகை நிலத்தில்‌ உழுது பயிரிட்டு அதன்‌ விளைச்சலையும்‌ தனக்கு எடுத்துக்கொள்வான். குத்தகை நிலத்தில்‌ ஓரு சிறிய வீட்டிலேயே உழவன்‌ தங்கிக்கொள்வான்‌. இதற்கு ஈடாக அந்தக குத்தகை உழவன்‌ பண்ணை உரிமையாளனின்‌ பெரும்பகுதி நிலத்தில உழுது பயிரிட்டு மகசூலை அவனுக்குத்‌ தரவேண்டும்‌. இரு நிலங்களும்‌ வேலியால்‌ பிரிக்கப்பட்டிருக்கும்‌... 

🖊️... 1950 வரையிலும் ஃபின்லாந்து பெரும்பாலும் ஒரு வேளாண்மை நாடாகவே விளங்கியது. ரொட்டி, விஸ்கி, வோட்கா மற்றும் கால்நடை தீவனங்கள் தயாரிக்க பயன்படும் "ரை" என்ற ஒருவகை கோதுமை தானியம் அப்போது அதிகமாக பயிரிடப்பட்டது... 

🖊️... ஃபின்லாந்துக்‌ குடியானவர்கள்‌ பற்றிய ஆழமான புரிதலுக்காகவும்‌, அவர்கள்‌ வாழ்வை, இயற்கையுடனான அவர்களின்‌ உறவை நேர்த்தியான கலையாக வெளிப்படுத்தியமைக்காகவும்‌, 1939 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல்‌ பரிசு ஃப்ரான்ஸ்‌ எமில்‌ சீலன்பாவுக்கு வழங்கப்பட்டது... 

🖊️... அநேகமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஃப்ரான்ஸ்‌ எமில்‌ சீலன்பாவின் ஒரே படைப்பு இதுவாகத்தான் இருக்கும். முடவன் குட்டி முகமது அலி ஆங்கிலத்திலிருந்து அதனை சிறப்பாக செய்திருக்கிறார்...