ஏதோவொன்றை மறந்ததைப் போல்தான் உன் நினைவு...

மீண்டும் ஒருமுறை காதலிச கிறுக்கல்கள். ஏதோவொன்றை மறந்ததைப் போல நினைவுகளாக...
என் தொட்டிச் செடி
பூக்கள் பூத்தாற்போல்
சில அரிதான தருணங்களில்
பிறந்துவிடுகிறது 
உன் நினைவு.
ஒரு சில நிமிட
வண்ணப் பார்வை,
காயம் படாத 
மெல் விரல் 
ஸ்பரிச வருடல்,
பறிக்க மனமிலா
இதழ் முத்தத்தோடு
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி
கடந்துவிடுகிறேன்...  
புயலும்
சூராவளியும்
காற்றழுத்த 
தாழ்வு மண்டலமும்
சிறு மழையும்
கனவாகிப்போன
வறண்ட வானிலையில் 
நீ தந்த 
நினைவுச் செடியை
உயிர்ப்பிக்க
இரண்டு சொட்டு 
கண்ணீர்
போதுமானதாக 
இருக்கிறது... 
எவ்வளவு 
உரக்கக் கத்தினாலும்
கேட்காத தூரத்திற்கு 
நீ திரும்பிச் சென்ற 
நமது சந்திப்பில் 
கடைசியாக
வாய்விட்டு உச்சரித்தது  
உன் பெயர்.  
காத்திருந்து
கனிந்துருகி
சருகாய் உதிர்ந்து
சாம்பலாய் எரிந்து
காற்றில் கலந்த
காலடி சுவற்றையாவது
நினைவு சின்னமாய் 
பார்வையிட
சொன்னதுபோல் 
என்றாவது ஒருநாள் 
வந்துவிடு...
இருந்து விட்டுப்போகட்டும்
என்பதன் 
உன் நினைவு
இருத்தலை
உயிர்ப்பிக்கிறது...
குப்பைகள்
என சொல்லியிருந்தேன்
உன் நினைவுகளை
மறு சுழற்சி செய்யும்
சூத்திரம் அறிந்த நான்... 
எல்லாம் சரிபார்த்து
எடுப்பவைகளை 
எடுத்துக்கொண்டு
அணைப்பவைகளை 
அணைத்துவிட்டு
அரையைத் தாழிட்டு 
புறப்பட்டபின் தோன்றும்
ஏதோவொன்றை 
மறந்ததைப் போல்தான் 
உன் நினைவு...