கோடை விடுமுறையும் தாத்தா பாட்டியின் கிராமமும் .

கோடைக்கால விடுமுறை தொடங்கிவிட்டது. இதுவரை பற பற என பள்ளிக்கூடம் சுற்றித்திரிந்த குழந்தைகளுக்கு சற்று ஓய்வு கிடைத்திருக்கிறது. அவர்களை பள்ளிக்கு அனுப்ப படாதபாடுபடும் பெற்றோர்களுக்கும் சேர்த்துதான். ஆனால் இந்த விடுமுறை நாட்களில், அதுவும் இது ராஜபாளையமா? ராஜஸ்தான் பாலைவனமா? என தெரியாத அளவிற்கு வெளுத்து வாங்கும் வெய்யிலில் குழந்தைகளை வீட்டில் வைத்து சமாளிப்பது என்பது கடினமான ஒன்று. அவர்களுக்காகவே கோடைக்கால சிறப்பு வகுப்புகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. நீச்சல், சிலம்பம், ஓவியம், நடனம், விளையாட்டு, கணினி என பலவற்றையும் கற்றுத் தறுகிறார்கள். அதைவிட டாக்டர் கனவை இப்போதே விதைக்க நீட் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள். மேலும் கோடிங் என்ற வகுப்பும் பிரபலமாக இருக்கிறது. எதிர்காலத்தில் குன்டி கழுவக் கூட ரோபோக்களை நம்பியிருக்க வேண்டும் ஆகவே ரோபோட்டிக்ஸ் கற்றுக்கொள்ளுங்கள் என ஒரு சில வகுப்புகளும் நடக்கின்றன. இதில் எதையாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் குழந்தைகளை தள்ளிவிடலாம். அல்லது "A Summer at Grandpa's" என்ற இந்த திரைப்படத்தில் வருவதைப் போன்று உங்கள் குழந்தைகளை கிராமத்திற்கு அனுப்பி வைத்து, புதுவித உலகையும் அனுபவத்தையும் பெறச் செய்யலாம். 

பன்னிரண்டு வயது சிறுவனான "துங் துங்" என்பவனும் அவனது சகோதரி "டிங் டிங்" என்பவளும் தெற்கு தைவானில் உள்ள தங்களது தாத்தா பாட்டி வசிக்கும் கிராமத்திற்கு கோடை காலத்தை கழிக்க செல்கின்றனர். பள்ளி விடுமுறை ஒருபக்கம் இருக்க, அவர்களது தாய்க்கு உடல்நிலை சரியில்லாமலும் இருக்கிறது. நெரிசல் மிகுந்த இறுக்கமான நகர வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட அவர்களுக்கு இயற்கையோடு இணைந்த கிராமத்து சூழ்நிலை புதிதாக இருக்கிறது. மணலில் விளையாடுவது, ஆற்றில் குளிப்பது, ஆடுமாடுகளை மேய்ப்பது, மரம் ஏறுவது, பறவை பிடிப்பது, பட்டாம்பூச்சி தேடுவது என அவர்கள் பொழுதை கழிக்கின்றனர். இதுவரை அனுபவித்திராத உச்சகட்ட மகிழ்ச்சியை அடைகின்றனர். தாத்தா மற்றும் பாட்டியின் அரவணைப்பு கலந்த அனுபவத்தோடு, கிராமத்தில் நிகழும் சில சம்பவங்களின் மூலம் பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் திறனையும் அவர்கள் பெறுகின்றனர். குழந்தைகள் என்ற தங்களது சுயத்தை அந்த வருட விடுமுறை நாட்களில் உணர்ந்து நகரத்திற்கு திரும்புகின்றனர். 



தி ரயில்வே சில்ரன், பதேர் பாஞ்சாலி, ரெட் பலூன், சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன், அமர்கார்டு, வேர் இஸ் மை பிரண்ட் ஹோம், வகையறா குழந்தைகளை மையமாக வைத்து, குழந்தைகளை கவரும் திரைப்படம்தான் என்றாலும், வளர்ந்த நம்மையும் கால ஓட்டத்திற்கு எதிராக பின்னோக்கி இழுத்து செல்கிறது. இந்த திரைப்படம் சிறுவர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. நாமும் அக் கண்ணோட்டத்தில் கிராமத்து அழகையும், சிறுவயது நினைவுகளையும் திரும்பிப் பார்க்க முடிகிறது. "பெரிய விசயங்கள் எதுவும் நடக்காத போது மக்கள் எப்படி வாழ்கிறார்கள்" அத்தகைய வாழ்க்கையை இந்த திரைப்படம் காட்டுகிறது. பொம்மை டிரக், நிஜ ஆமை, ரயில்காட்சிகள், ஊஞ்சள் என கதையில் நிகழும் சிறுசிறு விசயங்களின் மூலம் அவற்றை  உணர முடிகிறது. குழந்தைகளின் விளையாட்டோடு மட்டுமல்லாமல் பிறப்பு, இறப்பு, குடும்பம், உறவுகள், போன்ற ஆழமான சிக்கல்கள் கூட திரைப்படத்தில் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. மருத்துவமனை காட்சிகள், தாத்தா பாட்டி இவர்களுக்கிடையேயான உரையாடல்கள், சிறுவன் துங் துங்கிற்கும் மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கும் இடையிலான உறவு என அதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். மொத்தத்தில் இந்த திரைப்படம் நமது பால்யகால நினைவுகளை கிளறுவதோடு குழாந்தைகள் வளர்ப்பு என நாம் பொத்தாம் பொதுவாக நம்பிக்கொண்டிருக்கும் வரைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. 

A Summer at Grandpa's
Original Title - Dōngdōng de jiàqī
(Dong-Dong's holiday)
Directed by - Hou Hsiao-hsien
Written by - Chu Tʽien-wen & Hou Hsiao-hsien
Cinematography - Chen Kunhou
Music by - Edward Yang
Country - Taiwan
Languages - Hakka & Mandarin
Year - 1984.

குழந்தைகளை குழந்தைகளாக இருக்க நாம் ஒருபோதும் விடுவதில்லை. அதற்கு காரணம் எதிர்காலம் குறித்த அச்சமாக இருக்கக்கூடும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு படிப்பு அவசிய தேவைதான் என்றாலும், உலகை புரிந்துகொள்ளும் பக்குவமும் , பிரச்சனைகளை சமாளிக்கும் திறனும், மனிதாபிமான தன்மையும் அவர்களுக்கு அதிகம் தேவைப்படும். அதனை எவ்வளவு விளைகொடுத்தாலும் எந்த வகுப்புகளிலும் கற்றுக்கொள்ள முடியாது. இந்த திரைப்படத்தில் வரும் துங் துங் மற்றும் டிங் டிங்கிற்கு கிடைத்ததுபோல ஒரு கோடை விடுமுறையும் தாத்தா பாட்டியின் கிராமமும் கிடைத்தால் ஒருவேளை அது சாத்தியப்படலாம்.  

துளிகள்:

🖊️... இந்த திரைப்படம் திரைக்கதை எழுத்தாளர் சூ டியென்-வெனின் குழந்தை பருவ நினைவுகளை அடிப்படையாக கொண்டது.

🖊️...
A Summer at Grandpa's (1984)
A Time to Live, a Time to Die (1985)
Daughter of the Nile (1987)
என்ற மூன்று திரைப்படங்களும் இயக்குனரின் Coming of age Trilogy படைப்பில் சேர்ந்தவை.

🖊️...
Cute Girl (1980)
Cheerful Wind (1981)
The Green, Green Grass of Home (1982)
The Boys from Fengkuei (1983)
Dust in the Wind (1986)
A City of Sadness (1989)
The Puppetmaster (1993)
Good Men, Good Women (1995)
Goodbye South, Goodbye (1996)
Flowers of Shanghai (1998)
Millennium Mambo (2001)
Three Times (2005)
Flight of the Red Balloon (2007)
- போன்ற இருபதற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய Hou Hsiao-hsien செல்லமாக "ஹூ"உலக சினிமா மற்றும் தைவானின் நியூ வேவ் சினிமா இயக்கத்தில் முன்னணி நபராக உள்ளார்.