இந்த பூமியில் என்ன இருக்கிறது?.

திருமணங்கள், திருவிழாக்கள், மொது நிகழ்வுகள் இவற்றில் எல்லாம் ட்ரோன்கள் எனப்படும் பறக்கும் கேமராக்களைக் கொண்டு படம்பிடிப்பது என்பது தற்போது இயல்பான ஒன்றாகிவிட்டது. ஒரு நிகழ்வை மேலிருந்து பார்ப்பது தனி அழகுதான். அதிலும் திருமண விழா ட்ரோன்கள் கிரியாட்டிவிட்டி என்ற பெயரில் அசந்தால் கட்டியிருக்கும் வேஷ்டிக்குள் நுழைகிறது. சில யூடியூப் சேனல்கள் கூட தங்களது சொந்த ஊரை இத்தகைய ட்ரோன் கேமராக்கள் மூலம் இயற்கையோடு சுற்றிக் காட்டுகிறார்கள். அப்படியே கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் என்றளவிற்கு இருக்கிறது. சரி... அதனைப் போலவே இந்த மொத்த பூமியையும், அதில் இருக்கும் இடங்களையும், அதிசயங்களையும் மேலிருந்து ரசித்தால் எப்படியிருக்கும் என்ற நிகழ்ச்சிதான் What on Earth. 

2015 முதல் தற்போதுவரை சுமார் 100 எபிசோடுகளை கடந்து "டிஸ்கவரி சயின்ஸ்" சேனலில் ஒளிபரப்பாகும் டாகுமெண்டரி வகையிலான தொடர்தான் "What on Earth". இந்த தொடரில் பூமியில் இருக்கும் இதுவரை நாம் பார்த்த மற்றும் பார்த்திராத பல இடங்களை மேலிருந்து காட்டுகிறார்கள். அதாவது பூமிக்கு மேலே விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் சுமார் 4000 செயற்கைக்கோள்களின் மூலம் அதனை சாத்தியமாக்குகின்றனர். பூமியின் விசித்திரமான புவியியல் அமைப்புகள் முதல், மனிதனால் உருவாக்கப்பட்ட அதிசயங்கள் வரை Top View மூலம் நாம் அவற்றை பார்க்க, அவ்விடங்களில் மறைந்திருக்கும் ரகசியங்களையும் மர்மங்களையும் நமக்கு சொல்லித் தருகின்றனர். 

ஆலன் லெஸ்டர், ராப் நெல்சன், ராண்டி செர்வெனி, ஆண்ட்ரூ கோஃப், மைக் பாவெலெக், கென் ஜாய்ஸ், ரோலண்ட் கேஸ், பிரிட்டானி பிராண்ட், அமண்டா மார்செட்டி, மார்க் அல்தாவீல், சேத் போர்ஜஸ், ஹென்ட்ரிக் வான் கிஜ்செகெம், என இவர்களெல்லாம் சயின்டிஸ்ட், ஜியாலஜிஸ்ட், ஆர்க்கியாலஜிஸ்ட், வல்கனோலஜிஸ்ட், ஜெனலிஸ்ட் போன்ற பிரபல லிஸ்ட்டில் உள்ளவர்கள் இணைந்து, நமக்கு பூமியில் என்ன இருக்கிறது என்பதை மேலிருந்து படம் காட்டுவதோடு, கீழே இறங்கி ஒவ்வொன்றையும் ஆதாரத்துடன் ஆராய்ந்து விவரிக்கின்றனர்.  புளோரிடாவின் சுறா வடிவ தீவு, வடதுருவத்தில் பனியால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல், அரிசோனா குகை, இந்தியாவின் மஹாராஸ்டிராவில் இருக்கும் காந்தவிசையை குழப்பும் வட்டமான ஏரி, உக்ரைனின் மர்ம காடு, 
பென்சில்வேனியாவின் டைனோசார் காலடி தடம்,  திரான்சில்வேனியாவின் டிராகுலா கல்லரை என அமெரிக்கா முதல் அமஞ்சிக்கரை வரை பூமியில் உள்ள அத்தனை இடங்களையும் செயற்கைக்கோள் வழியாக அலசுகிறார்கள். காட்சியமைப்பு, இசை, படத்தொகுப்பு என அனைத்தும் சிறப்பாக இருக்க, ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை பார்க்கும் அனுபவத்தை தருகின்றது. 


இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் வாழ்கின்றன. அதிலும் நாம் எங்கிருக்கிறோம், எதிலிருந்து வந்தோம், என்ன செய்கிறோம் என தெரிந்து கொள்ளும் அளவிற்கு புத்திசாலி உயிரினம் வாழ்வதும் பூமியில்தான். அந்த பூமியில் எங்கு என்ன இருக்கிறது என தெரிந்து கொள்வது (மேலிருந்து) சுவாரசியமாக இருக்கும் அல்லவா?. 

What on Earth?
2015 - since
TV Program
Discovery Science 
English 

இந்த தொலைக்காட்சி தொடரைப் பற்றி ஒரு சில வருடங்களுக்கு முன்பே எழுத நினைத்து மறந்திருந்தேன். தற்போது நினைவுக்கு வர, கோடை மற்றும் பள்ளி விடுமுறையில் மாணவ பருவத்திலிருப்பவர்களுக்கு கற்றலாக இதனை காண்பிக்க பரிந்துரைக்கின்றேன். கோமாளி மற்றும் பைத்தியக்கார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிருந்து புதுவித கண்ணோட்டத்தில் உலகை புரிந்துகொள்ளவும், அதில் தொலைந்து போகவும் இந்த தொடர் அவர்களுக்கு உதவும் என நம்புகிறேன். நமக்கும்தான்.