பட்டம்மா கதை.

"பட்டு" என உங்களது பிரியமானவரிடம் சொல்லிப் பாருங்களேன். நீங்கள் சொன்னது பட்டு கன்னம் சிவக்க, முகம் வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலாக பிரகாசிக்கும். 

பட்டு என்றால் பெண்களுக்கு தனி பிரியம். அது விலையுயர்ந்தது, அந்தஸ்து, கௌரவம், மகாராணி மிடுக்கு, அதற்கும் மேல், இத்யாதி இத்யாதி. இதை தவிர பட்டின் மீது பெண்களுக்கு ஈடுபாடு வர காரணம் என்னவாக இருக்கும்?... பட்டை கண்டுபிடித்தது ஒரு பெண்தான். அதுபோல் தனக்கு பட்டாடைதான் வேண்டுமென அடம்பிடித்ததும் அதே பெண்தான்... சீனா நாடுதான் பட்டின் பிறப்பிடம். "பட்டுசாலை" (Silk Route) என வழியமைத்து உலக வரலாற்றை மாற்றியதும் சீனா நாடுதான். அந்த நாட்டு பெண் ஒருத்தியே பட்டை தற்செயலாக கண்டுபிடித்தாள் என்ற கதை இருக்கிறது. "Mother of Silk" என அழைக்கப்படும் அந்த பட்டம்மா கதையை சுவாரசியமாக ரசிக்கலாம் வாருங்கள். 

கி.மு 2697 - 2597 வருடத்தின் இடைப்பட்ட வசந்தகாலத்தில் சீனாவை ஆண்டுவந்த "மஞ்சள் பேரரசர்" என அழைக்கப்படும் "ஹுவாங்டி" அரசரின் மனைவியான "லீசு" என்பவள், மதிய உணவை முடித்துவிட்டு கையில் சூடான தேநீருடன் அரண்மனை தோட்டத்தில் உலாத்திக் கொண்டிருந்தாள். ஒரு மரத்தடியில் அமர்ந்து தேனீரை சுவைக்க நினைத்தபோது, மேலிருந்து நிலக்கடலை அளவிற்கு வெள்ளையான ஒன்று அவள் கையில் வைத்திருந்த கோப்பையில் விழுந்தது. தேநீரின் சூட்டில் விழுந்த அந்த பொருள் நூல் போல மாறியது. இளவரசி அதனை தொட்டாள். தனது விரலை வைத்து சுற்றினாள். அதன் மென்மையையும் ஸ்பரிசத்தையும் உணர்ந்தாள். பிறகு அவள் நிமிர்ந்து மேலே மரத்தைப் பார்த்தாள். அந்த மரத்தில் கோப்பையில் விழுந்ததைப் போன்ற பொருட்கள் எண்ணற்ற இருப்பதையும், அதிலிருந்து புழுக்கள் வெளிவந்து இலைகளை தின்றுகொண்டிருப்பதையும் அவள் கண்ணிமைக்காமல் பார்த்தாள். சிறிது நேரத்திற்கு பின்பு தான் கண்டதையும், கையிலிருந்த கோப்பையையும் எடுத்துக் கொண்டு அரசரிடம் சென்றாள். அரசரோ, அத்தனை வேலையிருந்தும் 'சொல்லுமா செல்லம்' என அன்பானவளுக்கென நேரத்தை ஒதுக்கும் குணம் படைத்தவர். ஆகையால் தனது மனைவியின் சந்தேகத்தை போக்க ஒரு குழுவை அமைத்தார். அந்த குழு அரண்மனை தோட்டத்தில் இளவரசி அமர்ந்திருந்த மரத்தை ஆராய, அந்த மரம் மல்பெரி மரமென்றும், அதில் என்னற்ற பட்டுப் புழுக்கள் கூடுகட்டும் என்பதையும் கண்டனர். 'கொக்கூன்' என்ற அந்த கூட்டில் ஒன்றே இளவரசியின் தேநீர் கோப்பையில் விழுந்து நூலாக மாறியதையும் உணர்ந்தனர். இந்நிகழ்வில் இளவரசியின் பங்கு அதிகமாகவும் ஆர்வமாகவும் இருக்க, தோட்டத்திலிருந்த அனைத்து மல்பெரி மரத்தின் பட்டுப்புழுக்களின் கூடுகளும் சேகரிக்கப்பட்டு வெண்ணீரில் போடப்பட்டது. அவையெல்லாம் பட்டாக மாற இறுதியில் பட்டு நூல் என்ற ஒன்று உலகிற்கு கிடைத்தது. அதனை அனைவரும் வியந்து பார்க்க, இந்த வருட வசந்தகால திருவிழாவிற்கு எனக்கு இந்த நூலினால் செய்யப்பட்ட ஆடைதான் வேண்டும் என இளவரசி ஒரு வேண்டுகோள் வைத்தாள். மேலும் தனக்கென ஒரு மல்பெரி தோட்டத்தை அமைத்துத் தரும்படியும் கணவனை நச்சரித்தாள். 

இது ஒரு புராணக் கதையாக இருந்தாலும் இளவரசி லீசு பட்டின் கடவுளாக பார்க்கப்படுகிறாள். பட்டை கண்டுபிடித்தது மட்டுமல்லாது,  இன்றைய பட்டு வளர்ப்பு முறைக்கும் அதன் அறிவியலுக்கும் அவளே முன்னோடி என்ற கருத்து சீனாவில் இருக்கிறது. அவளே Mother of Silk என்று அழைக்கப்படுகிறாள்.  பட்டுநூலை துணியாக மாற்றலாமா என்ற யோசனை அவளிடமிருந்தே வந்தது. பட்டுத் தறியையும் அவளே உருவாக்கினாள். சீனா முழுவதிற்கு பட்டின் சூத்திரத்தை அவளே பரப்பினாள். அதுமட்டுமல்ல பட்டாடைதான் வேண்டுமென முதன்முதலாக அடம்பிடித்ததும் அவளே. அணிந்தவளும் அவளே. பட்டணிந்தவர்கள் மாகாராணியாக ஜொலிக்கவும், தற்போதுவரை பட்டின்மீது பெண்களுக்கு விருப்புவர காரணமும் அவளாகவே இருக்கலாம். புத்தருக்கு ஞானம், நியூட்டனுக்கு ஈர்ப்பூவிசை போல லீசுவிற்கு மரத்தடியில் பட்டு கிடைத்த பட்டம்மா கதை சுவாரசியம் தானே!. 

அடியேனும் தன் பிரியமானவளிடம் பட்டு என சொல்லிப்பார்த்தேன். பிறகு இந்த பட்டம்மா கதையை சொல்லி முடித்தேன். அதனை கேட்டவள் பட்டென.......